Tuesday, September 19, 2017

பெங்களூருவில் கோர விபத்து... வாகனம் ஓட்டிய இளைஞர்களின் பெற்றோர் கைது!

பெங்களூருஎன் மகனுக்கு 5 வயசுதான் ஆகுது. என்னமா பைக் ஓட்டுறான் தெரியுமா!’’
‘‘என் பையனுக்கு ஆக்ஸிலரேட்டர் கால் எட்டக் கூட இல்லை. சூப்பரா கார் ஓட்டுறான்!’’ 
என்று பெருமை பேசும் பெற்றோரா நீங்கள்? ஒரு வகையில் இது புளகாங்கிதப்பட வேண்டிய விஷயமாகத் தெரியலாம். ஆனால், இது அங்கீகரிக்கப்பட வேண்டிய விஷயமில்லை. இதற்கு உதாரணமாக பெங்களூருவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துவிட்டது.
அர்ஃபான், ஸ்ரீனிவாஸ், அனிருத்... மூவரும் கொஞ்சம் காஸ்ட்லியான, திக்கான நண்பர்கள். இதில் அர்ஃபானும் ஸ்ரீனிவாஸும் பெங்களூரு இன்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாகப் படிக்கும் க்ளாஸ்மெட்டுகள். அனிருத் மட்டும் HSR லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர். பிசினஸ் புள்ளிகள் மற்றும் IT ஊழியர்களின் புதல்வர்களான மூவருக்கும் பிடித்தது கார் டிரைவிங்.
நம் ஊர்ப் பசங்க, லீவு விட்டால் கம்ப்யூட்டர் கேமோ, தாய பாஸோ விளையாடுவதுபோல், இவர்களின் பொழுதுபோக்கு கார்/பைக் ஓட்டுவதுதான். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் தங்கள் தந்தைகளின் கார்/பைக்குகளை எடுத்துக் கொண்டு, ‘வ்வ்ர்ர்ரூம்’ என்று சாலைகளில் பறப்பது இவர்களுக்கு ஒரு கிக்கான விஷயம். அன்றும் வழக்கம்போல், ஸ்கோடா, இனோவா, டிசையர் என்று மூன்று பேரும் ஆளுக்கொரு காரில் ஜாய் ரைடு சென்றிருக்கிறார்கள். ஜாய் ரைடின்போது பந்தயம் போடுவதும் இவர்களின் வழக்கமாம்.
அதன்பின் நடந்த சம்பவத்தை போக்குவரத்து துணை கமிஷனர் ஹிதேந்திரா சொல்கிறார். ‘‘சம்பவத்தன்று ஓசூர் சாலையில் உள்ள ரூபெனா அக்ரஹார மேம்பாலத்தில் மூன்று கார்களும் அதிவேகத்தில் சென்றிருக்கின்றன. 140 கி.மீ வேகத்தில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு விளையாட்டாகப் பறந்திருக்கிறார்கள் என்று பதிவாகியுள்ளது. அப்போது மேம்பாலத்தைக் கடக்கையில் மூன்றும் ஒன்றோடோன்று நிலைதடுமாறி உரசிக் கொண்டே செல்ல, பெரிய விபத்தை பெங்களூரு சந்தித்தது. அர்ஃபான் ஓட்டிவந்த ஸ்கோடா கார், சாலையின் இடது பக்கத்திலுள்ள சென்டர் மீடியன் மீது மோதிவிட்டது. இதனால், அர்ஃபானின் தலை சடாரென ஒடிந்துவிழுந்து, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மற்ற இருவரும் காயங்களுடன் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!’’ என்றார்.
அர்ஃபானின் ஸ்கோடா சென்டர் மீடியனில் மோதிய வேகத்தில், ஸ்ரீனிவாஸின் இனோவா சென்டர் மீடியனில் இருந்து பவுன்ஸ் ஆகி, எதிரே வந்த பால் வாகனத்தில் மோதியதால், ஸ்ரீனிவாஸ் குறைந்தபட்சக் காயங்களுடன் தப்பியுள்ளார். இதில் பால் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவருக்கும் க்ளீனருக்கும் பலத்த அடி. அனிருத் ஓட்டி வந்த டிசையருக்கும் பலத்த அடி. இப்போது அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
பெங்களூரு
உடனடியாக, மூன்று மைனர் பையன்களின் மீதும், அவர்களின் பெற்றோர் மீதும் வழக்குப் போடப்பட்டது. இப்போது மடிவாலா போலீஸ் நிலையத்தில் மூவரது பெற்றோரும் சிறைத் தண்டனைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
2015-ல் கர்நாடகா உயர்நீதி மன்றம் ஒரு தீர்ப்பு எழுதியது. 18 வயதுக்குக் கீழே உள்ள மைனர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோருக்கு, குறைந்தபட்ச தண்டனையாக 6 மாதம் சிறை, 1,000 ரூபாய் அபராதம் என்று தீர்ப்பு சொன்னது. இந்த வழக்கில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால், பெற்றோருக்குத் தண்டனை இன்னும் கடுமையாக்கப்படுமா என்பது தெரியவில்லை. 
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval