மகளை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட படத்தை அழிக்க வேண்டி காவல்துறையினருக்கு 2 ஆயிரம் பணமும், ஒரு செல்ஃபோனும் லஞ்சமாகக் கொடுத்துள்ளார்
பெண்ணின் தந்தை. காவல்துறையினரின் அலட்சியத்தால் அவமானம் தாங்க முடியாமல் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த வினுப்ரியா என்ற 20 வயது பெண்ணின் முக போட்டோவை மார்ஃபிங் செய்து ஆபாசமான படங்களோடு இணைத்து ஃபேஸ்புக்கில் வெளிவந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வினுப்ரியா மற்றும் அவரின் குடும்பத்தினர் காவல்துறைக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் வினுப்ரியா அவமானம் தாங்காமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுப்பற்றி வினுப்ரியாவின் தந்தை அண்ணாதுரை கூறுகையில், "நான் இளம்பிள்ளை விநாயகர் கோயில் தெருவில் குடியிருக்கிறேன். எனது மனைவி பெயர் மஞ்சுளா. எங்களுக்கு வினுப்ரியா, ஆகாஷ் என இரண்டு பிள்ளைகள். இந்த இரண்டு பிள்ளைகளில்தான் மூத்தப்பிள்ளையை பறிகொடுத்து விட்டு நிற்கிறேன்’’ என்று கதறி அழுதவர், சற்று நேரம் இடைவெளி விட்டு, "நான் வீட்டிலேயே தறி ஓட்டிட்டு இருக்கிறேன். வினுப்ரியா திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி ஹெமிஸ்ட்ரி கடந்த வருடம் தான் முடித்தாள். மேற்படிப்பு அடுத்த வருடம் படித்துக் கொள்ளலாம் என்று இந்த வருடம் வீட்டிலேயே இருந்தது.
என் பொண்ணு ரொம்ப அன்பான பொண்ணு. நானும் இரண்டு குழந்தைகளையும் அன்பாக வளர்த்தேன். மகிழ்ச்சியாக இருந்த எங்க குடும்பத்தில் ஜூன் 16ம் தேதி இடி விழுந்தார் போல என் செல்போனுக்கு 'ராங்க் கால்' வந்தது. யார் என்ன வென்று பெயரெல்லாம் சொல்லாமல் உன் பிள்ளையை அடக்கி வைக்க மாட்டியா? கண்டவன் கூட திரியுறா. அவளை ஒழுங்கா இருக்க சொல்லுன்னு அசிங்கம் அசிங்கமாக ஒருத்தன் திட்டினான். பதிலுக்கு நான், ‘‘டே, நீ யாருடா... என் பொண்ணு எப்படி இருந்தால் உனக்கு என்னடா... நீ என் பொண்ணை காதலிக்கிறயான்னு கேட்டேன். அதெல்லாம் இல்லைன்னு சொல்லி அசிங்க அசிங்கமாக பேசிட்டே, இருந்தான். நாங்களும் சரின்னு விட்டுட்டோம்.
17ம் தேதி என் தங்கை மகன் சதீஸ் , வினுப்ரியா போட்டோவை ஃபேஸ்புக்கில் ஆபாசமாக வந்திருக்குன்னு சொன்னான். நானும் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். என் பொண்ணு பார்த்துட்டு கண்ணீர் விட்டு கதறினாள். நாங்கள் அவளை தேற்றி அம்மா, எந்த பையன் மீதாவது சந்தேகம் இருக்கான்னு கேட்டோம். சத்தியமா நான் எந்த பையன் கூடவும் பேசியதில்லை. எனக்கு யாரும் ஆண் நண்பர்கள் கிடையாதுன்னு சொன்னது. தொடர்ந்து தினமும் ஃபேஸ்புக்கில அப்லோட் பண்ணிட்டே இருந்தானுக. உடனே குடும்பத்தோடு 19ம் தேதி சேலம் எஸ்.பி. அமித்குமார்சிங்கிடம் புகார் மனு கொடுத்தோம். அவர் சங்ககிரி டி.எஸ்.பி. கந்தசாமியிடம் கொடுக்க சொன்னார். டி.எஸ்.பி. கந்தசாமியிடம் கொடுத்தோம். டி.எஸ்.பி. கந்தசாமி மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தனிடம் கொடுக்க சொன்னார். மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தனிடம் கொடுத்தோம். மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் சேலம் சைபர் க்ரைமில் கொடுக்க சொன்னார்.
சேலம் சைபர் க்ரைமில் கொடுத்தோம். அவர்கள் அந்த புகாரை வாங்கிக் கொண்டு இந்த ஐ.டி., உடனே அழிக்க முடியாது. இது ஆஸ்திரேலியாவில் தான் லிங் இருக்கு. அங்கு சொல்லி தான் அழிக்க முடியும். 10, 15 நாட்கள் ஆகுமுன்னு சொன்னார். இதனால் என் பொண்ணு ரொம்ப மனம் உடைந்து போய் நாங்க இன்று எஸ்.பி. ஆபீஸூக்கு வந்த பிறகு வீட்டை சாத்தி தூக்கு போட்டு இறந்து விட்டாள். இறந்த ஒரு மணி நேரத்தில் அந்த ஐ.டி., க்ளோஸ் ஆயிடுச்சு. இந்த செயலை முன்பே செய்திருந்தால் என் பொண்ணு பிழைத்து இருப்பாள். என் பொண்ணு இறப்புக்கு காரணம் காவல்துறை தான். என் பொண்ணுக்கு நடந்த கொடுமை வேறு எந்த பொண்ணுக்கும் நடக்க கூடாது. அந்த குற்றவாளிகளை அரெஸ்ட் பண்ணும் வரை என் மகளின் உடலை வாங்க மாட்டேன். என் பொண்ணை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுகின்றவனை பிடிக்க வேண்டும் என்று இந்த காவலர்களுக்கு 2000 ரூபாய் பணமும், ஒரு செல்போனும் வாங்கி கொடுத்தேன். ஆனால் கண்டுபிடிக்காமல் அலட்சியமாக இருந்த என் தங்கம், மானம் தாங்காம மாண்டு போயிடுச்சே. இப்ப இந்த காவலர்கள் விசாரிக்க வராங்க. இந்த நாடு நாசமா போச்சு. எந்த பெண்களும் நிம்மதியாக வாழ முடியாது" என்று கதறி அழுதார்.
வினுப்ரியாவின் உறவினர் சதீஸ்குமார் கூறுகையில், "கடந்த 17ம் தேதி என் ஃபேஸ்புக் ஐ.டி.,க்கு 8148036458 என்ற புதிய நம்பரில் இருந்து ஃப்ரெண்ட் ரெக்யூஸ்ட் வந்தது. நான் கன்பார்ம் பண்ணினேன். வினுப்ரியாமைதிலி என்ற அந்த ஐ.டி.,யில் இருந்து எங்க மாமா பொண்ணு வினுப்ரியாவின் போட்டோவை ஆபாச போட்டோவோடு மார்பிங் செய்து போட்டிருந்தாங்க. அதுமட்டுமல்ல எங்க மாமா வாட்ஸ் அப்பில் வினுப்ரியாவின் போட்டோவை புரஃபைல் போட்டாவாக வைத்திருந்தார். அந்த போட்டோவை டவுன்லோட் செய்து அந்த போட்டோவையும் அந்த ஃபேஸ்புக் ஐ.டி.யில் போட்டிருந்தாங்க" என்றார்.
வினுப்ரியாவின் உடல் சேலம் பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கிறது. இதை கேள்விப்பட்டு வினுப்ரியாவின் உறவினர்கள், மகளிர் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் சேலம் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
courtesy;vikadan
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval