Friday, June 17, 2016

பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பரிதாபம்: பள்ளி வேன் மோதி 3 வயது சிறுமி பலி



பள்ளி வேன் மோதி 3 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். பள்ளி சென்ற முதல் நாளிலேயே இந்த சோகம் நேர்ந்து விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பள்ளி வேன் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

3 வயது சிறுமி

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த சிக்கராயபுரம், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 38). டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கோமதி. இவர்களுக்கு 3 வயதில் கவிநிலா என்ற மகள் இருந்தாள்.

தங்கள் மகள் கவிநிலாவை குன்றத்தூரில் உள்ள எஸ்.எம்.எச்.எஸ். என்ற தனியார் பள்ளியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்தனர்.

முதல் நாள்

நேற்று காலைதான் முதல் நாளாக தங்களது மகள் கவிநிலாவை ஆசை ஆசையாக பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மாலையில் பள்ளி முடிந்து பள்ளிக்கூட வேனிலேயே சக மாணவர்களுடன் கவிநிலா வீட்டுக்கு திரும்பி வந்தாள்.

கவிநிலா வீட்டின் முன் பள்ளி வேன் வந்து நின்றவுடன் அதில் இருந்து 4 மாணவர்கள் கீழே இறங்கினர். அவர்களுடன் கவிநிலாவும் இறங்கினாள். வாகனத்தில் இருந்து பள்ளி மாணவர்களை கீழே இறக்கி விடும் ஆயா, வயதானவர் என்பதால் வேனில் அமர்ந்தபடியே மாணவர்களை இறக்கி விட்டு உள்ளார்.

வேன் மோதி பலி

வேனில் இருந்து இறங்கிய மாணவர்கள் வேனின் முன்புறமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அதுதான் கடைசியாக மாணவர்களை இறக்கி விடும் இடம். அதன்பிறகு அந்த வேன் பள்ளிக்கு சென்று விடும். 

வேனில் இருந்து இறங்கிய அனைத்து மாணவர்களும் கடந்து சென்று விட்டதாக கருதி வேன் டிரைவர் வெங்கடேசன், வேனை அங்கிருந்து எடுத்தார்.

ஆனால் கவிநிலா, அப்போதுதான் தனது வீட்டுக்கு செல்ல வேனின் முன்புறமாக சாலையை கடந்து சென்றாள். இதனை கவனிக்காத டிரைவர் வேனை எடுத்ததால் சிறுமி மீது வேன் மோதியது.

இதில் கீழே விழுந்த சிறுமி மீது வேனின் இரண்டு சக்கரங்களும் ஏறி இறங்கியது. இதில் சிறுமி கவிநிலா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள்.

பெற்றோர் கதறல்

இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தனர். இதனால் பயந்து போன டிரைவர், வேனை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். 

வீட்டில் இருந்த கவிநிலாவின் பெற்றோர், தங்கள் மகள் பலியான தகவல் கேட்டு அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். கதறி அழுதபடியே வேன் சக்கரத்தில் சிக்கி இருந்த தங்கள் மகளின் உடலை மீட்டனர். 

தங்கள் வீட்டு வாசலிலேயே மகள் பிணமாக கிடப்பதை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் கூற முடியாமல் உறவினர்கள் மற்றும் பொதுமக்களும் கண்ணீர் வடித்தனர். இது பார்ப்போரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

அடித்து நொறுக்கினர்

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பள்ளி வேனின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய வேன் டிரைவர் வெங்கடேசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே, தான் வந்த பள்ளி வேனே மோதி 3 வயது சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
courtesy;Daily Thanthi

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval