Saturday, June 4, 2016

குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி காலமானார்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மறைந்த எம்.ஜி.ஆர். அவர்கள் பொறுப்பேற்றிருந்தபோது, தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர்கள் சங்கத்துக்காக நிதி திரட்டும் வேடிக்கை குத்துச்சண்டை போட்டி நடத்துவதற்காக முஹம்மது அலி சென்னை நகருக்கு வந்திருந்தார். அவருடன் போட்டியில் சண்டையிட முன்னாள் ஹெவிவெயிட் சாம்பியனான ஜிம்மி எல்லிஸ் என்பவரும் உடன் வந்திருந்தார்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், ரசிகர்களும் முஹம்மது அலிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தன்னைக்காண கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை கண்டு நெகிழ்ச்சியடைந்த முஹம்மது அலி, என்னை காணவும், வரவேற்கவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பதை பார்த்து மிகுந்த பெருமகிழ்ச்சி அடைகிறேன். என்மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை எனது வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக போற்றிப் பாதுகாப்பேன் என தழுதழுத்த குரலில் குறிப்பிட்டார்.
திறந்தகாரில் மீனம்பாக்கத்தில் இருந்து ஊர்வலமாக அண்ணாசாலையில் உள்ள கன்னிமாரா ஓட்டலுக்கு அவர் வந்தபோது சாலையின் இருபுறங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற அந்த விறுவிறுப்பான குத்துச் சண்டை போட்டியின்போது, சென்னையில் பயிற்சிமுறை பாக்சர்களாக இருந்த சிலருடனும் முஹம்மது அலி விளையாட்டாக மோதினார். கடைசியாக பத்துவயது சிறுவன் மேடை ஏறினான். அவனுக்கு போக்குகாட்டும் விதமாக துள்ளிக்குதித்தபடி மேடையை சுற்றிச்சுற்றிவந்த பின்னர், அவனை தனது முகத்தில் குத்துமாறு கூறிய முஹம்மது அலி, அவனது உயரத்துக்கு தக்கவாறு முழங்காலிட்டு அமர்ந்தார்.
அந்த சிறுவன் விட்ட குத்துகளில் இருந்து தனது முகத்தை லாவகமாக காப்பாற்றிக் கொண்ட முஹம்மது அலி, பின்னர், மூலையில் இருந்த கயிற்றின்மீது சரிந்தவாறு நின்று, தனது வயிற்றில் குத்தும்படி கூறினார். அந்தப் புகைப்படங்கள் எல்லாம் மறுநாள் காலை நாளிதழ்களில் முக்கியச் செய்தியாக இடம்பெற்றிருந்தன.
உலகம் முழுவதும் வாழும் குத்துச்சண்டை ரசிகர்களுக்கு முஹம்மது அலியின் மரணம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்புதான். குறிப்பாக, அந்த மாவீரன் நடமாடிய சென்னையில் வாழும் பாக்சிங் ரசிகர்களுக்கு அந்த இழப்பு இருமடங்காக தோன்றலாம். அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்!
courtesy;canada mirror

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval