Tuesday, June 14, 2016

தமிழகத்து 'தாதா'க்கள் ! சென்னைக்கு மீண்டும் முதலிடமா....?

டந்த சில நாட்களில் மட்டும் சென்னையில் எத்தனை கொலைகள்...? எல்லாமே கூலிப்படைகள்  மூலம் அரங்கேறியுள்ளன.
ஆர்.டி.ஐ. ஆர்வலரான மார்வாரி ஒருவர்,  பட்டப்பகலில் பெரியமேடு காவல் நிலையத்துக்கு மிக அருகிலேயே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டதை,
அந்தப் பகுதி மக்கள் இன்னமும் திகில் குறையாமல் நினைவில் வைத்துப் பேசுகிறார்கள்.
முன்விரோதம் காரணமாக  ஏற்பட்ட தகராறில், இன்னொரு மார்வாரி ஒருவர்  கூலிப்படையினரால் யானைக்கவுனி காவல் நிலையத்துக்கு அருகில் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார்.
கள்ளக் காதல் விவகாரத்தால் வக்கீல் ஒருவர், பலமுறை கூலிப்படையினரால் வேவு பார்க்கப்பட்டு அதன்பின்னர் வெட்டிக் கொலை செய்யப்படுகிறார். ஃபேஸ்புக்கில் ஆபாசப் படம் போட்டதாக வெளியூர் வாலிபர் ஒருவரை சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும், அவரது தாயாரும் உறவினர்களும் கூலிப்படையின் துணையுடன்  ஆள் வைத்துக் கடத்திக் கொல்கிறார்கள்... இப்படி ஓரிரு நாட்கள் இடைவெளி விட்டு, இதுபோன்ற கொடூரக் கொலைகள் தொடர்ந்து அரங்கேறியதால்,  திகிலில் உறைந்து கிடக்கிறது சென்னை. 
கள்ளக்காதல் கொலைகள் பெரும்பாலும் தனிமனித உணர்ச்சியின் வெளிப்பாடாகவே நடப்பதால், அந்தக் கொலைகள் சமூக அமைதிக்கு கேடுவிளைவிக்கும் அளவிற்கு செல்வதில்லைதான். ஆனால் அதிலும், கூலிப்படைகள் புகுந்திருப்பது மேலும் பதறவைப்பதாக உள்ளது. காதல் விவகாரக் கொலை வழக்கு ஒன்றில் சிக்கியவர்கள் கேட்ட முன் ஜாமீனால்தான், தமிழக ரவுடிகள் பட்டியல் வெளி உலகிற்குத் தெரிய வந்தது என்பது தனிக்கதை.
இதே போல திருச்சியில், ஜீயர்புரம் காவல் லிமிட்டில் ஒரு கிராமத்தில் கடன் வாங்கியதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஒருவர் சில ஆண்டுகளுக்கு கொலை ஆகிறார். அதில் குற்றவாளி சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு அவருக்கு சிறுநீரக நோய் ஏற்பட்டு உடல் நலிவுற்று மரணமடைகிறார். அந்த நபரின் மகன் இந்தக் கொலை வழக்கில் ஐ- விட்னஸாக இருந்தவரை கூலிப்படை வைத்துக் கொலை செய்கிறார். இதில் இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்து கொள்ளவிருந்தவரை சாட்சியாக சேர்த்துள்ளனர் காவல்துறையினர். அதனால் பயந்துபோன அந்த நபரின் குடும்பத்தினர் ஊரையே காலி செய்து உயிர்பிழைக்க சென்றுள்ளனர். இது போன்று பல கொடும் நிகழ்வுகள் திருச்சி மாவட்டத்தில் நடக்கின்றன, போலீசார் கூலிப்படையை ஒழிக்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்தவில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.        
தமிழக ரவுடிகள்  எத்தனை ஆயிரம் ?
புதுக்கோட்டை மாவட்டத்தைச்  சேர்ந்தவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முத்துக்குமார். இவர் காதல் தொடர்பான தகராறில்  கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடையதாக 2 பேரை போலீசார்  கைது செய்தனர். அவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு ஐகோர்ட், மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தபோதுதான் ரவுடிகள் பட்டியல் வெளியில் வர வாய்ப்பாக அமைந்தது.
கொலை வழக்கில்  ஜாமீன் கேட்டவர்களின் மனு,  விசாரணைக்கு வந்த போதுதான், "தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் பட்டியல், குற்றங்களின் எண்ணிக்கை, தண்டனை  குறித்த விபரங்களை இந்த கோர்ட்டில்  தமிழக போலீஸ் டிஜிபி தாக்கல் செய்ய வேண்டும்" என்று  நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
அதன் பின்னர்தான் நாட்டில் நடமாடும் ரவுடிகள் எத்தனை பேர் என்ற விவரம் பொதுமக்களுக்கு தெரியவந்தது.
தமிழ்நாடு போலீஸ் முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம் கொடுத்திருந்த தகவலில் இருந்து :
" மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்து 502 ரவுடிகள் உள்ளதாகவும், தலைநகர் சென்னை முதலிடத்திலும், 2-ல்  நெல்லை, 3-ல்  மதுரையும், கடைசி இடத்தில் நீலகிரி மாவட்டமும் இருப்பதாக  போலீஸ் டி.ஜி.பி. குறிப்பிட்டிருந்தார். (தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் பெயர் பட்டியலை,  மதுரை ஐகோர்ட்டில்  , அக்டோபர் 14-2012-  அன்று தமிழ்நாடு போலீஸ் டிஜிபி பொறுப்பில் இருந்த கே. ராமானுஜம் தாக்கல் செய்திருந்தார். )
தமிழகத்தின் 32 மாவட்டங்கள், 6 நகரங்களில் உள்ள காவல் நிலையங்களில் 16 ஆயிரத்து 502 ரவுடிகளின் பெயர்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டுவருவதாக  கூறப்பட்டுள்ளது. சென்னையில் 3,175 ரவுடிகள், நெல்லை- நகர்ப்புறம் : 334 ரவுடிகள், நெல்லை புறநகர்: 1,214 ரவுடிகள்,  மதுரையில்  888 ரவுடிகள், மதுரை  புறநகரில் 484 ரவுடிகள், கன்னியாகுமரியில் 748 ரவுடிகள் என  நான்கு முன்னணி ரவுடிகள் பட்டியல் விபரத்தை டிஜிபி கொடுத்திருந்தார்.
கோவை: 512, கோவை புறநகர் : 226, சேலம்: 353, புறநகர் சேலம்: 299, திருச்சி : 427, திருச்சி புறநகர்: 155 என்ற கணக்கில் ரவுடிகள் உள்ளனர். குறைந்த ரவுடிகளை மட்டுமே கொண்டு 'பலகீனமாக' காட்சியளிக்கிற மாவட்டங்களாக திருவாரூர் (84), பெரம்பலூர் (84)  மாவட்டங்களும் அதிலும் குறைவாக நீலகிரி (65)யும் உள்ளன.
விருதுநகர்: 655, தூத்துக்குடி:605, கடலூர்: 680,தஞ்சாவூர்: 584,  ராமநாதபுரம்: 462, விழுப்புரம் : 452, காஞ்சிபுரம் : 416, வேலூர்: 376, கிருஷ்ணகிரி: 329 ,திருவள்ளூர் : 318, நாமக்கல்: 308,  அரியலூர்: 290, திண்டுக்கல்: 299, நாகப்பட்டினம்: 287,  ஈரோடு: 276, தி.மலை: 200,  திருப்பூர்: 127, தர்மபுரி: 165, , புதுக்கோட்டை: 157, கரூர்: 143,  தேனி: 111, சிவகங்கை: 214,   என ரவுடிகள் பட்டியல் உள்ளது.
2001 டூ 2011- வரை  17 ஆயிரத்து 32 கொலைகள், 3 லட்சத்து 11 ஆயிரத்து 308 கொலை முயற்சி, சிறு குற்ற சம்பவங்களும், 2 லட்சத்து 33 ஆயிரத்து 738 சொத்து தொடர்பான குற்றங்களும் (10 ஆண்டுகளில்) நடந்துள்ளன.
இ.பி.கோ சட்டப்பிரிவு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது தமிழகத்தில் 2001ம் ஆண்டு 62.80 சதவீதமாக இருந்தது, 2011ம் ஆண்டு 62.10 சதவீதமாக குறைந்துள்ளது "  இதுதான் அன்றைய டி.ஜி.பி. ராமானுஜம் கொடுத்த தகவல்.
இன்றுள்ள சூழ்நிலையில், 2012-ல் சொல்லப்பட்ட கணக்கின்படியே ( 16 ஆயிரத்து 502 ரவுடிகள் )   அப்படியே இருக்கிறார்களா, அந்த எண்ணிக்கை குறைந்துள்ளதா, கூடியுள்ளதா என்று தெரியவில்லை. தமிழகத்து 'தாதா'க்களில் அதிகளவு 'தாதா'க்கள் இருக்கும் இடமாக 2012-ல்  மாநில போலீஸ் டிஜிபியாலே சொல்லப் பட்ட நகரம், தலைநகரமான சென்னைதான்.
போலீஸ் டிஜிபி  2012-ல் கோர்ட்டில் கொடுத்த ரவுடிகள் பட்டியலைப்போன்று  '2016-ல் தமிழகம்' என்ற தலைப்பிட்டு பொது வெளியில் புதுப்பட்டியலை  வெளியிடுவதன் மூலமும், அரசால் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது  (ஆளுகிற ஒவ்வோர் அரசும் குறைந்தபட்சம் மூன்றாண்டுக்கு ஒரு முறையாவது இந்த முறையை செய்யலாம்) என அறிவிப்பதன் மூலமும் மக்களுக்கு அரசின் மீது கண்டிப்பாக   நம்பிக்கை பிறக்கும்.
வீட்டை விட்டு வெளியில் செல்கிறவர்கள், அன்று மாலை,  வீட்டிற்கு முழுதாக வந்து சேர்ந்திருப்பார்களா, அவர்களை  மீண்டும் பார்க்க முடியுமா என்று கேட்டால் அது உறுதிப்படுத்த முடியாத தகவலாக இருக்கிறது. பெண்பிள்ளைகள் என்றால் ஆசிட்,  பாலியல் சித்ரவதை, நகைக்காக கடத்தல், சிறு காயம், கொலை முயற்சி (கொலைகளும் சாதாரணம்தான்) என்ற 'கொடூரமான வல்லூறு பிராண்டல்'களை  கடந்தே வீடு திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம்.
சொத்துப் பத்திரமும், சொந்த வீடும், கொஞ்சம் நகைகளுமாக வைத்திருக்கும் குடும்பம் என்றால், அவர்களுக்கு எந்நேரமும் 'வீடு அபகரிப்பு' கும்பல்களாலும் பேராபத்து இருக்கிறது. அதிலும் ஆதரவற்ற முதியோர் என்றால் பெரும்பாலும் அது கொலையில் வந்துதான் முடிகிறது.
'யாரைக் கொலை செய்தாலும் 15 நாளில் ஜாமீன் கிடைத்து விடுகிறது, அதனாலதான் இப்படி துணிச்சலா வீடு புகுந்தும் கொன்னுப் போட்டுட்டுப் போறான்க, நடுரோட்ல வெச்சும் பட்டப் பகல்ல கொல்றான்க' என்று இயல்பாய் கோபப்பட்டுக் கொள்ளும் பாமர மக்களின் கோபத்திற்கு விடை தெரிந்தாலே பாதி வன்முறைகள் காணாமல் போய்விடும்.
தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது!
ந.பா.சேதுராமன்.
courtesy ;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval