Saturday, June 25, 2016

எமெர்ஜென்சி கொண்டுவரும் சட்டப்பிரிவு இன்னமும் இருக்கிறது!

மெர்ஜென்சி பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தாலே கை நடுங்குகிறது. இந்திய ஜனநாயகத்தின் மிக இருண்ட கட்டம் என்று குறிக்க வேண்டுமென்றால் அந்த காலகட்டத்தைதான் சொல்லவேண்டும்.
அலகாபாத் உயர் நீதிமன்றம், யெஸ்பால் கபூர் என்கிற அரசுப்பொறுப்பில் இருந்த அதிகாரி, அதிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பே இந்திராவுக்கு தேர்தல் பணி செய்தது,அரசாங்க இடத்தில் விதியை மீறி அதிக உயரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தது ஆகிய காரணங்களில் இந்திரா குற்றவாளி என்று முடிவு செய்து, ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது. 

ஏற்கனவே சுப்ரீம் கோர்ட், மன்னர் மானிய ஒழிப்பு முதலிய பல்வேறு விஷயங்களில் அரசுக்கு எதிராக செக் வைத்திருந்தது. கேசவனானந்தா பாரதி வழக்கில் அடிப்படை கூறுகள் என்று சிலவற்றை பட்டியலிட்டு, 'இவற்றில் கையை வைத்தால் தொலைந்தீர்கள்!' என்று சொல்லிவிட்டது சுப்ரீம் கோர்ட்.



தேர்தலில் போட்டியிட தடை என்ற தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போனால், வி.ஆர்.கிருஷ்ணய்யர் தீர்ப்புக்கு முழுமையாக தடை விதிக்காமல், 'இந்திரா நாடாளுமன்றத்தில் பிரதமராக பணியாற்றலாம்,ஆனால்,வாக்களிக்கிற உரிமை கிடையாது' என்று சொல்ல,  நீதித்துறை இப்படி முரண்டு பிடிக்கிறதே என்று பற்றிக்கொண்டு வந்தது இந்திராவுக்கு. 

ஊழல் மலிந்த குஜராத் அரசு விலக வேண்டும் என்று போராடக்கிளம்பிய ஜே.பி. , அடுத்து அப்படியே பீகார் பக்கம் நகர்ந்திருந்தார். மாணவர்களின் போராட்டத்துக்கு வழிகாட்ட அவர் தயார் என்றிருந்தார். முழு மாணவர் போராட்டமான 'நவநிர்மான் அந்தோ லன்' ,அடுத்து நடந்த ஜே.பி.யின் பீகார் எழுச்சி,பல லட்சம் தொழிலாளர்கள் கலந்து கொண்ட ரயில்வே போராட்டம் ஆகியன இந்திராவை மேலும் சூடேற்றிய சூழலில்,  இந்த தீர்ப்பு எதிர்கட்சிகளுக்கு போதுமானதாக இருந்தது.
"ராணுவம் அரசியலமைப்பின்படி இயங்காத அரசுக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியமில்லை !" என்று ஜே.பி. பேசியது போதுமானதாக இருந்தது. உள்நாட்டில் குழப்பம் என்றால் எமெர்ஜென்சி வரலாம் என்பதை இந்திரா சாதகமாக்கி கொண்டார். பக்ரூதின் அலி முகமது. கேபினட்டின் அனுமதி பெறாத எமெர்ஜென்சி அறிவிப்புக்கு அப்படியே கையெழுத்து போட்டார். அதிகார வர்க்கம் குனிய சொன்னால் தவழ்ந்தது. பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். யாரை வேண்டுமானாலும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வதைக்கலாம்,கைது செய்யலாம் என்கிற நிலை நிலவியது. பலபேர் காணாமல் போனார்கள். என்ன ஆனார்கள் என்பது இன்னமும் கேள்விக்குறி

சஞ்சய் காந்தி களத்துக்கு வந்தார். இருபது அம்ச திட்டம் என்று அறிவித்து கொண்டு. அராஜகம் செய்தார்கள். டெல்லியை சுத்தப்படுத்துகிறேன் என்று ஏழைகள் இருந்த சேரிகள் இடிக்கப்பட்டன. எதிர்த்த இடத்தில், துர்க்மான் கேட்டில்  நூற்றி ஐம்பது அப்பாவி முஸ்லீம்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். நாட்டின் மக்கள் தொகையை குறைக்கிறேன் பேர்வழி என்று ஐந்தே மாதத்தில் முப்பத்தி ஏழு லட்சம் ஆண்கள் கதறக்கதற கட்டாய குடும்ப கட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கில் குடும்பக் கட்டுப்பாடு செய்தார்கள் டாக்டர்கள். பத்திரிக்கைகள் தணிக்கைக்கு உள்ளாகின;  சென்சார் செய்யப்பட்டு பெரும்பாலும் வெள்ளையாக ஒரு சில இதழ்கள் வந்தன. அரசியல் எதிரிகள் எல்லாரும் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். ஜே.பி.யும் ஹரியானாவுக்கு அனுப்பப்பட்டார். 

மக்கள் மவுனமாக இருந்தார்கள் ; எமெர்ஜென்சி வருவதற்கு முந்தைய தினம் பெரிய அளவில் ஜே.பியின் கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள் என்றால் அடுத்த நாள் சிறு முணுமுணுப்பு கூட இல்லாமல் சட்டப்பூர்வ சர்வாதிகார ஆட்சியை ஏற்றுக்கொண்டார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட யாருமே ராஜினாமா செய்யவில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன் தேதியிட்டு சட்டங்களை தனக்கு சாதகமாக இந்திரா வளைத்தபொழுது மவுனம் காத்தார்கள். எமெர்ஜென்சி காலத்து கைதுகள் செல்லுபடியாகும் என்று நான்கு நீதிபதிகள் சொல்ல, எதிர்த்து தீர்ப்பு சொன்ன தைரிய சாலி ஹெச்.ஆர்.கன்னா போல ஒரு சில நீதிபதிகள் மட்டும் ஜனநாயகத்தின் மவுன அலறலை பிரதிபலித்தார்கள். அப்படி கைதுகள் செல்லாது என்று மனித உரிமையை காக்கும் ரீதியில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், தூக்கி அடிக்கப்பட்டார்கள். 

தமிழகத்தில் இருந்த திமுக அரசு எமெர்ஜென்சிக்கு எதிராக குரல் கொடுத்து கடுமையான அடக்குமுறையை சந்தித்தது. எல்லா அரசாங்க அலுவலகங்களும் ஒழுங்காக இயங்கின; நேரத்துக்கு எல்லா அரசுப்பணிகளும் நடந்தன. விலைவாசி கட்டுக்குள் வந்தது ஆகியவையும் நடந்தன. பதுக்கல்காரர்களை பிடிக்க கொண்டுவரப்பட்ட சட்டம், எதிர்த்த மக்களை சிறைக்குள் தள்ள பயன்பட்டது.  

இந்திரா ஒரு வழியாக தனக்கு எதிராக இருந்த சட்ட சிக்கல்களை எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி திருப்தியடைந்தார். வெற்றி நமக்கே என்று உளவுத்துறை ரிப்போர்ட் தர, தேர்தல் என்று அவர் அறிவித்தார். ஒரு கட்சி ஆட்சியை கொண்டுவர வங்கதேசத்தில் முயன்ற முஜீபின் படுகொலையும் ஒரு காரணமாக இருக்கலாம்.'இந்திராவே இந்தியா !' என்கிற கோஷத்தோடு பண பலம் மற்றும் படை பலத்தோடு காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. சிறையை விட்டு மீண்டு பல்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. கிச்சடி கூட்டணி என்று கிண்டலடித்தார் இந்திரா. 

முடிவுகள் வந்தன. ஹிந்தி பிரதேசத்தில் துடைத்து எறியப்பட்டு இருந்தது காங்கிரஸ். சஞ்சய், இந்திரா இருவரும் தேர்தலில் பெரிய ஓட்டு வித்தியாசத்தில் தோற்றிருந்தார்கள். மக்கள்,  'எங்களுக்கு சுதந்திரம் முக்கியம்' என்று சொல்லாமல் சொல்லியிருந்தார்கள்.
அடுத்து ஆட்சிக்கு வந்த ஜனதாக்கட்சி,  இந்திரா உருவாக்கிய,  'நாடாளுமன்றமே உச்சம்' என்கிற பாணியிலான சட்டங்களை நீக்கினார்கள். உள்நாட்டுக்கலவரம் என்பதை ஆயுதமேந்திய புரட்சி என்று மாற்றியதோடு, கேபினட் அனுமதி வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்கள்.
ஆனாலும், எமெர்ஜென்சி கொண்டுவரும் சட்டப்பிரிவு இன்னமும் இருக்கிறது. கூடவே,இந்திரா ஏற்படுத்திய அடக்குமுறை வடுக்களும்தான் !

எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாள் இன்று..!

-பூ.கொ.சரவணன்
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval