Wednesday, June 1, 2016

இளவரசன், கோகுல்ராஜ்,சங்கர் வரிசையில் இப்போது இளையராஜா!

இந்தியாவில் 22 மாநிலங்களில் சாதி ஆணவக் கொலைகள் நடப்பதாக ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஆணவக் கொலைகள் குறித்து அவ்வப்போது தனது வேதனையையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகிறது. 2013-லிருந்து இதுவரை தமிழகத்தில் தோராயமாக 83 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
இவைகள் அனைத்தும் ஒரு எண்ணிக்கையாக இருக்கிறதே தவிற சமூகத்தில் புறையோடிப்போயுள்ள சாதித் தீங்கை களைவதற்கான முன் முயற்சிகளை அரசு இன்னும் எடுக்கவில்லை.பெரும்பாலான சாதி ஆணவக் கொலைகள் மீடியா கவனத்துக்கோ, வெளி உலகத்துக்கோ தெரியாமல், குறைந்தபட்சம் புகார்கூட கொடுக்கமுடியாத அளவில், எத்தனை ஆணவக் கொலைகள் நடந்ததோ தெரியவில்லை. இதோ, இப்போதுகூட எங்கோ ஒரு மூலையில், ஆணவக் கொலையோ அல்லது அதற்கான ஆயத்தமோ நிகழ்ந்துகொண்டிருக்கலாம். இதற்கெல்லாம் எப்போது முற்றுப்புள்ளி என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஆணவக் கொலைக்கு ஆளாகியிருக்கிறார் இளையராஜா என்னும் இளைஞர். திருச்சி மாவட்டம், டால்மியாபுரம் அருகில் உள்ள, கல்லகம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் இளையராஜா வயது 26. லாரி ஓட்டுநர். அவர் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகள் ஆனந்தி வயது 17. இளையராஜாவுக்கும், ஆனந்திக்கு இடையே கடந்த சில மாதங்களுக்குமுன் காதல் மலர்ந்தது. இந்தநிலையில், கடந்த 21ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அதனால், இந்த திருமணத்துக்கு ஊரில் எதிர்ப்புக் கிளம்பியது. இந்த விவகாரம் தெரிந்தவுடன் சிங்கப்பூரில் இருந்த ஆனந்தியின் சகோதரர் அருண் உடனே அங்கிருந்து கிளம்பி கல்லகம் வந்தார். நேற்று முன்தினம் இரவு (திங்கள்கிழமை) இளையராஜாவை அழைத்துச்சென்று அருண் மது வாங்கிக் கொடுத்தார். சிறிது நேரத்துக்குப்பின், அருண் இளையராஜாவை சரமாரியாகத் தாக்கினார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் அந்தப் பகுதியில் முகம் சிதைந்தநிலையில் இளையராஜாவின் சடலம் கிடந்தது. போலீஸார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதைத்தொடர்ந்து, கொலையாளிகளைக் கைதுசெய்ய வலியுறுத்தி, இளையராஜாவின் உறவினர்கள் கல்லக்குடி காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளை விரைவில் கைதுசெய்வதாக போலீஸார் உறுதி அளித்ததன்பேரில் மறியல் கைவிடப்பட்டது. சம்பவம் தொடர்பாக கல்லக்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
courtesy'minnabalam

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval