Friday, June 24, 2016

தாடியை அகற்ற மறுத்த அமெரிக்க முஸ்லிம் போலீஸ் அதிகாரி இடைநீக்கம்

 அமெரிக்காவின் நியுயார்க் நகரில் காவல் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வரும் முஸ்லிம் ஒருவர், தாடியை அகற்ற மறுத்த காரணத்தால் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக, மசூத் சையத் என்ற 32 வயது அதிகாரி நீதிமன்றத்தில் போராடி வருகிறார்.
நியுயார்க் காவல் துறை விதிகளின்படி, அதில் பணியாற்றும் அதிகாரிகள் தாடி வைக்கக் கூடாது. ஆனால், மத நம்பிக்கைகளுக்காக, ஒரு மில்லி மீட்டர் வரை தாடி வைத்துக் கொள்ள அதிகாரப்பூர்வமற்ற முறையில் அனுமதிக்கப்படுவதாக சையத்தின் வழக்கறிஞர், மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் புதன்கிழமை அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சையத், ஒரு மில்லி மீட்டர் அளவு தாடி வைத்துக் கொள்ள அனுமதி பெற்றிருந்தார். அந்த அளவைத் தாண்டிய போதிலும், கடந்த 2015-ம் ஆண்டு வரை அவருக்கு பிரச்சனை ஏற்படவில்லை. அப்போது முதல், தற்போதுள்ள அளவுக்கு தாடி வைத்துக் கொள்வதற்கான அனுமதியைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தன்னைப் போல, பல போலீஸ் அதிகாரிகள் ஒரு மில்லி மீட்டருக்கு அதிகமான நீளத்துக்கு தாடி வைத்திருப்பதாக சையத் கூறுகிறார்.
தாடியை நீக்குமாறு கடந்த திங்கட்கிழமையன்று, மசூத் சையத்துக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அதை ஏற்க மறுத்ததால், கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
முப்பது நாட்களுக்கு ஊதியம் இல்லாமல் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அவர், தொடர்ந்து தாடியை அகற்ற மறுத்தால், பணியிலிருந்து நீக்கப்படுவார் என அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் காவல்துறை கூறியுள்ளது.
புதன்கிழமைன்று அவசர வழக்காக இப் பிரச்சனை விசாரிக்கப்பட்ட நிலையில், சையத்தின் ஊதியத்தை நிறுத்தி வைக்கக் கூடாது என்றும், ஜூலை 8-ம் தேதி இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் வரை, அவர் மீது வேறு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு, நியுயார்க் நகர காவல் துறைக்கு எதிராக யூத அதிகாரி ஒருவர் தொடர்ந்த வழக்கில், மான்ஹாட்டன் நீதிமன்றம் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. 2012-ல் பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த அதிகாரியை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளவும் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என சையத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval