Tuesday, November 28, 2017

பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை அமெரிக்க வேலைக்கு குட்பை

கொஞ்சம் நல்லதையும் எல்லாருக்கும் பகிர்வோம் !!! பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை சொல்வதற்காக அமெரிக்க வேலைக்கு குட்பை சொன்ன திருப்பூர் இளைஞர்!
Image may contain: 1 person, smiling"அமெரிக்காவுல கைநிறைய சம்பளம்தான். ஆனா நம்ம மக்கள் அன்றாட வாழ்க்கைல சந்திக்கற, எதிர்காலத்துல பெரிய அச்சுறுத்தலா இருக்கக்கூடிய ஒரு பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்தேன். அதான் அமெரிக்காவுக்கு குட் பை சொல்லிட்டு, நம்ம ஊருக்கே வந்துட்டேன்" என பொறுப்பு உணர்வுடன் பேசுகிறார் திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் சிபி செல்வன்.

இந்த நூற்றாண்டில், இயற்கைக்கு கேடு விளைவிப்பதில் பெரும் பங்கை பிளாஸ்டிக் தத்தெடுத்துள்ளது. காட்டுத்தீ போல உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பாதிப்பு பரவி வருகிறது. இந்நிலையில், இந்தப் பிரச்னையை சரிசெய்வதற்காக களத்தில் குதித்துள்ளார் 26 வயதான சிபி செல்வன்.
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, இயற்கைப் பொருள்களைக் கொண்டு எளிதில் மக்கக்கூடிய பைகளை தயாரித்து வருகிறார் சிபி. இவரின் ரிஜெனோ நிறுவனம் பற்றி தெரிந்து கொண்ட கோவை மாநகராட்சி நிர்வாகம், கோவையில் தற்போது இந்தப் பைகளை புழக்கத்தில் விட்டுள்ளது.
ரிஜெனோ நிறுவனத்தின் நிறுவனர் சிபி செல்வனைச் சந்தித்துப் பேசினோம். "நமக்கு திருப்பூர்தான் சொந்த ஊர். ஸ்கூலிங் ஊட்டில முடிச்சேன். ஹையர் ஸ்டடீஸ் யூ.எஸ்-ல முடிச்சுட்டு அங்கயே, ரெண்டு வருஷம் வேலை செஞ்சேன். கைநிறைய சம்பளம்தான். ஆனா நம்ம மக்கள் பிரச்னை ஒண்ண தீர்க்க நம்மாலானத செய்யலாம்னு தோணுச்சு. அதான் அமெரிக்காவுக்கு குட் பை சொல்லிட்டு, நம்ம ஊருக்கு நல்ல 'பை' கொடுக்கலாம்னு வந்துட்டேன்.
உலகம் முழுவதும் நிமிடத்துக்கு 10 லட்சம் பிளாஸ்டிக் பைகள் விற்கப்படுகின்றன. நீர்நிலைகள், நிலம், விலங்குகள் என அனைத்துக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்து பிளாஸ்டிக்தான். இதனால், பிளாஸ்டிக் பிரச்னைய கைல எடுத்தேன். யூரோப்பியன் கம்பெனி ஒண்ணு, இயற்கைக் கழிவுகளை வெச்சு, கேரி பேக்குகளை தயாரிப்பதை கேள்விப்பட்டேன். அவங்கக் கிட்ட டிசைன் வாங்கி, இங்க தயாரிக்க ஆரம்பிச்சேன்.
மூணே மாசத்துல இந்த பை மக்கிடும். இதனால, இயற்கைக்கோ, விலங்குகளுக்கோ எந்தப் பாதிப்பும் கிடையாது. மக்காச்சோளம் மற்றும் காய்கறி கழிவுகளைக் கொண்டுதான் இந்தப் பைகள் தயாரிக்கப்படுகின்றன. கோவை, பெங்களூரில் விற்பனை ஆகிட்டு இருக்கு. இதுக்கு இவ்ளோ பெரிய வரவேற்பு கிடைக்கும்ணு நான் எதிர்பார்க்கலை. கோவை மாநகராட்சி இத அறிமுகப்படுத்துன உடனேயே, மற்ற சில மாநகராட்சி நிர்வாகங்களிடம் இருந்தும் எனக்கு கால் வந்துச்சு.
அதேபோல, நிறையபேர் இதைத் தயாரிக்கவும் விருப்பம் தெரிவிக்கராங்க. இப்போதைக்கு 1 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை இது விற்பனை செய்கிறோம். இதன் தயாரிப்பு எண்ணிக்கை குறைவா இருக்கறனால, விலை அதிகமாகத்தான் இருக்கு. பயன்பாடு அதிகரிக்கறப்ப, இதோட விலையும் பிளாஸ்டிக் அளவுக்குக் குறையும். தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை மற்றும் கடலோரப் பகுதிகளில்தான், பிளாஸ்டிக் கழிவுகளால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விரைவில், மற்ற நண்பர்கள் மற்றும் அரசின் உதவியோடு இத தமிழகம் முழுவதும் கொண்டு சென்று, குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
பிளாஸ்டிக் கேரி பேக்குளுக்கு மாற்றாக, வெள்ளை துணிப்பைகள் என்றும் சில பைகள் சந்தைக்கு வந்துள்ளன. இவை பிளாஸ்டிக்கை விட அபாயகரமானவை. 70 சதவிகிதம் வரை பிளாஸ்டிக்கை வைத்துத்தான் இத தயாரிக்கறாங்க. எனவே, மக்கள் அந்த விஷயத்துல கொஞ்சம் விழிப்புஉணர்வோட இருக்க வேண்டும்" என்று முடித்தார் சிபி.
நன்றி
பசுமை விகடன்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval