Saturday, November 11, 2017

இந்திய இஸ்லாமியர்களின முதல் கல்வித் தந்தை சர் சையத் அகமது கான்.!

Image may contain: one or more people and text
பிறந்த நாள் வரும் போகும்.
பிறப்பின் பயன் மனித குலத்துக்கு, வாழும் நாட்டிற்கு, சார்ந்த சமூகத்திற்கு கிட்ட வேண்டும்.அப்படிப்பட்ட பிறவிகள் போற்றப்படவேண்டும். அவர்களின் வரலாறு வாழும் தலைமுறைக்கு சொல்லிக்காட்டப்படவேண்டும்.
அந்த வகையில் 200 ஆண்டுகளுக்கு முன் பிறந்து, இந்திய முஸ்லிம்களுக்கு கல்வி வழிகாட்டி,வேலை வாய்ப்புகள்,சமுக நீதிக்கு வித்திட்டு,அரசியல் விழிப்புணர்வூட்டிய மகத்தான ஆளுமை "சர் சையத் அஹமது கான்
/div>
நான் பிறந்த நாளில் அவரை நினைவுபடுத்துவதே அவருக்கு நான் செலுத்தும் நன்றிக்கடன்....
சர் சையத் அகமத்கான் : பிரிவினையின் பிதாமகனா?
சர். சையத் அகமத்கான் அவர்களைப்பற்றி இந்துத்துவ வாதிகள் குறிப்பிடும் போது பிரிவினையின் பிதாமகன் என்கின்றனர். “இந்துக்களும் முஸ்லிம்களும் அடிப்படையில் இருவேறு தேசிய இனங்கள்” என்ற வாதத்தை முதலில் முன்வைத்தவர் அவர்தான் என வரலாறு எழுதும் சிலர் விமர்சிக்கின்றனர்.
அப்படியானால் இந்தியப் பிரிவினைக்கு விததிட்டவர் சர் சையத் அகமத் கானா? தேசம் பிளவுபடுவதைத்தான் அவர் விரும்பினாரா? அவரது 200 ஆவது பிறந்த நாளில்கூட இந்த வினாக்களுக்கு விடையெழுத வேண்டியுள்ளதே வேதனைகுரிய ஒன்றுதான்.
Image may contain: one or more people, hat and text
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரர் இமாம் ஹூசைன் (ரலி) அவர்களின் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்து இந்கேயே தங்கினர். கல்வி ஞானங்களில் தலைசிறந்து விளங்கிய அவர்களுக்கு முகலாய மன்னர்களின் ஆட்சியில் முக்கிய பதவிகளும் கௌரவுமும் அளிக்கப்பட்டன அந்த பாரம்பரியத்தில் வந்தவர்தான் சர் சையத் அகமத்தான்.
முகலாயர் ஆட்சி காலத்தில் சையத் மீர் முத்தகி & அஸீசுந்நிஷா தம்பதியரின் புதல்வராக 1817 அக்டோபர் 17ல் பிறந்தவர் சர் சையத் அகமத்கான்.
முகலாய கடைசிப் பேரரசர் முஹம்மது சிராஜுத்தீன் பஹதூர்ஷா ஜாபர் தலைமையில் கி.பி. 1857 ஜனவரி முதல் செப்டம்பர் 20 வரை முதல் சுதந்திரப் போர் நடைபெற்றது. மக்களின் பெருங்கிளர்ச்சியாகவும், சிப்பாய் கலகமாகவும் வர்ணிக்கப்படும் இப்புரட்சியில் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து நின்று ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள்.
இக்கிளர்ச்சி அடக்கப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப்பட்டது. கிளர்ச்சியை தலைமையேற்று நடத்திய பஹதூர்ஷா ஜாபர் கைது செய்யப்பட்டு ரங்கூனில் சிறை வைக்கப்பட்டு 1862 நவம்பர் 7ல் அங்கேயே மரணமடைந்தார்.
முதல் சுதந்திரப்போர் நிலவரங்களை நேரில் பார்த்தவர், அதன் பாதிப்புகளை அறிந்தவர், முஸ்லிம்கள் அப்போரை முன்னின்று நடத்தினார்கள் என்பதற்காக எவ்வளவு துன்பம் துயரங்களை அனுபவத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்தவர் என்ற முறையில் தனது முழு வாழ்வையும் இம்மக்களுக்காக அர்ப்பணிப்பது என்ற முடிவுக்கு வந்தார் சர். சையத் அகமத் கான்.
நவீன துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் கையாளும் ஆங்கிலேயர்களை வாட்களை கொண்டும், குதிரைகளில் சென்றும் எதிர்ப்பது அறிவுடைமையாகாது எனக்கூறிய அவர், அறிவைக்கற்பதும் அறிவுப்பூர்வமாக ஆங்கிலேயர்களை எதிர்ப்பதுமே சரியான வழியாக இருக்கும் என்றார்.
Image may contain: 4 people, people standing and indoor
ஆங்கிலேயர்கள் மீதுள்ள கோபத்தால் ஆங்கிலம் கற்பதும் அவர்களிடம் பணிபுரிவதும் ஹராம் என முஸ்லிம்கள் தரப்பில் உலமாக்கள் மார்க்கத்தீர்ப்பு வழங்கித் கொண்டிருக்க, பெருங்கிளர்ச்சியை முஸ்லிம்களே முன்னின்று நடத்தினார்கள் என்பதற்காக உலமாக்கள் கைது, மத்ரஸாக்கள் மூடல், முஸ்லிம்கள் நிலங்கள் அபகரிப்பு, தனி வரிவிதிப்பு, தலைநகரைவிட்டு விரட்டல் என ஆங்கிலேயர்தரப்பில் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருந்தன.
அதேசமயம் ஆங்கில அறிவு பெற்ற முற்படுத்தப்பட்ட இந்து சமூகங்களைச் சேர்ந்தோர் ஆங்கிலேயர்களுடன் கரம் கோர்த்து தங்களுக்கு உரியவைகளைப் பெறலாம் என்ற முயற்சியில் இறங்கினர். இதற்காக ஆங்கிலேயர் உருவாக்கிய சங்கங்கள் புதுப்பிக்கப்பட்டன. சென்னை சுதேசி சங்கம், பம்பாய் சங்கம், பிரிட்டிஷ் இந்தியர் சங்கம் இந்திய சங்கம் என பல சங்கங்கள் முளைத்தன.
கல்வி வேலை வாய்ப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்திவந்த சர் சையத் அகமத் கான், சிறுகுற்ற வழக்குகளை பதிவு செய்யும் நீதிமன்றத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்து தனது திறமையால் நாஸிப்முன்ஷி முன்சீப், நீதிபதி என பதவி உயர்வுகள் பெற்று மெயின்புரி, பதேபூர்சிக்ரி, காஸிபூர் முராதாபாத், அலிகார், பனாரஸ் என பல்வேறு ஊர்களில் பணியாற்றினார்.
பஞ்சப் பணிகளை நிர்வகிக்க 1859ல் அவர் முராதாபாத் சென்றிருந்த போது அங்கு ஒரு மத்ரஸாவைத் தொடங்கினார். அதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்துக்களும் அரபி, உர்தூ, பாரசீகம், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளும் கற்க ஏற்பாடு செய்தார்.
அறிவியல் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த ஆங்கில நூல்களை உர்தூவில் மொழிபெயர்க்கச் செய்தார். இதற்காக காஜிபூரில் அறிவியல் கழகம் துவக்கினார் அதனை 1864ல் அலிகருக்கு மாற்றி அதன் பணிகளை விரிவடையச் செய்தார். அறிவியல் மற்றும் கலைத்துறை பாடங்கள் இந்திய மொழிகளில் கற்றுத்தரப்படவேண்டும், உர்தூ_ஆங்கில வழிகளில் கற்போரிடையே வேறுபாடு காட்டக்கூடாது என வைஸ்ராய்க்கு 1867 ஆகஸ்ட் 1ல் கோரிக்கை வைத்தார்.
1870 டிசம்பர் 26ல் முஸ்லிம் எஜிசகேஷனல் டிரஸ்ட் துவக்கி கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அலிகரில் ஆங்கிலோ ஓரியண்டல் பள்ளியை துவக்க 1872 முதல் பணிகளை மேற்கொண்டு நிதி திரட்டும் பணியில் மூன்றாண்டு கடுமையாக உழைத்து 1875 மே 24ல் முஹம்மதன் ஆங்கிலோ ஓரியண்டல் பள்ளியை தொடங்கினார்.
இக்கல்வி நிறுவனம் பல்கலைக்கழகமாக உயரவேண்டும், இஸ்லாமிய தனித்தன்மையோடு மிளிரவேண்டும் என ஆசைப்பட்ட அவர் அது எப்படி இருக்க வேண்டும் என்றும் வகுத்தளித்தார். இதற்காக இங்கிலாந்து சென்று கேம்ப்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்தார்.
அலிகரில் முஹம்மடன் ஆங்கிலோ ஓரியண்டல் பள்ளிக்காக நிதிதிரட்டிய சர் சையத் அஹமத்கான் எண்ணற்ற அவமானங்களை எதிர் கொண்டார். சொல்லடிகளையும் கல்லடிகளையும் சந்தித்தார்; கிறிஸ்தவ சமயத்தின் தூதுவர் என விமர்சிக்கப்பட்டார். எனவேஅவர் இஸ்லாத்தை விட்டு விலகிச் சென்றுவிட்டார் எனக்கூறி உலமாக்களால் காபிர்ஃபத்வா என்ற மார்க்கத் தீர்ப்புக்கு ஆளானார். அந்த தீர்ப்புக்கு வலுசேர்க்க புனித மக்கமா நகரின் மார்க்கஅறிஞர்களிடமிருந்தும் அவருக்கு எதிராக ஃபத்வா பெறப்பட்டது.
சர்சையத் அகமத்கான் மீது முஸ்லீம்கள் தரப்பில் இப்படிப்பட்ட தாக்குதல்கள் தொடுக்க, இந்துத்துவ வாதிகாளோ அவரை ஆங்கிலேய கைக்கூலி என்றும் இந்துக்களுக்கு எதிரானவரென்றும் விமர்சித்து வந்தனர். சர் சையத் அகமத்கான் இத்தகைய விமர்சனங்களைப்பற்றி கவலைப்படவில்லை. 1857 பெருங்கிளர்ச்சியின் காரணங்கள் குறித்து அவர் எழுதிய நூலில் முற்றிலும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்திருந்தார். ஆங்கிலேயர்களிடம் அவர் பணிசெய்த நிலையிலும் அவர்களின் தவறுகளை கண்டிக்க அவர் ஒரு போதும் தயங்கியதில்லை.
இந்து சமய மக்களிடமும் அவர் நட்புபாராட்டியே வந்துள்ளார். அலிகார் முகம்மடன் ஆங்கிலோ ஓரியண்டல் பள்ளியில் கணிசமான எண்ணிக்¬யில் இந்து சமய மாணவர்கள் கல்வி கற்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்தார். அப்பள்ளியில் பணம் கையாளும் நிர்வாகியாகவும், அவர் தொடங்கிய அறிவியல்கழக நிர்வாகியாகவும் இந்து சமயத்தவர்களையே நியமித்தார். அவரது வழிகாட்டுதலின் தொடர்ச்சியாகவே அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பாதி இடங்களில் முஸ்லிம் அல்லாத மாணவர்களே பயில்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தி வைதீக குடும்பத்தில் பிறந்த சுவாமி தயானந்த சரஸ்வதியால் 1875ல் ஆரிய சமாஜம் துவக்கப்பட்டது. இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களுக்கு எதிராக தீவிர பிரச்சரம் செய்தது. எண்ணற்றோர் சுத்திமுறையில் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர்.
1985 டிசம்பர் 28ல் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. அதன் நடிவடிக்கைகளை சர் சையத் அகமத் கான் கூர்ந்து கவனித்தார். ஆரிய சமாஜத்தை சேர்ந்தவர்கள் காங்கிரஸில் ஈடுபட்டனர். காங்கிரஸின் முதலாவது மாநாட்டில் இந்திய அரசு ஊழியர் அனைவரும் இந்தியர் மயமாக்கப்பட வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பலன் முற்படுத்தப்பட்ட சமூகத்தை மட்டுமே சென்றடைந்தது.
எனவே காங்கிரஸ் செயல்பாட்டை சர் சையத் அகமத்கான் ஆதரிக்கவில்லை. அத்துடன் சென்னையில் 1887ல் நடைபெற்ற அதன் முன்றாவது மாநாட்டில் முஸ்லிம்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார். இம்பீரியல் லெஜிஸ் லேட்டிவ் கவுன்ஸில் உறுப்பினராக இருந்த அவர், அனைவருக்கும் பொதுவான தேர்தல் முறையை மாற்றி விகிதாச்சார தேர்தல் முறையை வலியுறுத்தினார். 1876ல் அவர் அரசுப் பணிலிருந்து ஓய்வு பெற்றதும் தம் கல்வி நிறுவனத்தில் முழுமையான கவனம் செலுத்தியதோடு எழுத்துலக பணியிலும் முழு ஈடுபாடு கொண்டார்.
பத்திரிக்கைகள் பல நடத்தியதோடு பாரசீக நூல்களை உருதுவில் மொழி பெயர்த்தார். இஸ்லாத்தின் சிறப்புக்கள் நபிகள் நாயகம் (ஸல்) பெருமைகளைப் பற்றி அவர் எழுதிய நூல் இங்கிலாந்திலும் பெரும் வரவேற்பை பெற்றது.
கல்வி, அரசியலில் முஸ்லிம்களிடையே மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திய சர் சையத் அகமத்கான் தமது 81வது வயதில் 1898 மார்ச் 27ல் மரணமடைந்தார்.
சர் சையத் அகமத்கான் வாழும் காலத்தில் அவரின் உற்ற நண்பராகவும் அவரது கல்வி, அரசியல் பணிகளில் நெருங்கிய சகாவுமாக இருந்தவர் நவாப் முஹ்ஸினுல் முல்க். சையத் அஹமத்கான் மறைவுக்குப்பின் அலிகரில் குடியேறிய நவாப் முஹ்ஸினுல் முல்க், முஹம்மடன் ஆங்கிலோ ஒரியண்டல் கல்லூரியின் செயலாளராக பொறுப்பேற்றார். அப்போது கல்லூரியின் கஜானா காலியாகவே இருந்தது.
சர் சையத் கான் மறைந்தாலும் அவர் உருவாக்கிய முஸ்லிம் எஜுஷேனல் சொஸைட்டியின் கூட்டம் வழக்கம் போல் நடைபெற்று வந்தன. அவர் வலியுறுத்திய அரசியல் விழிப்புணர்வு மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவு 1906அக்டோபர் 1 அன்று முஸ்லிம் பிரதிநிதிகளின் தூதுக்குழு சிம்லாசென்று வைஸ்ராய் மிண்டோ பிரபுவை சந்தித்து பேசியதன் பலன்தான் 1909ம் வருட இந்தியன் கவுன்ஸில் சட்டம்.
முஸ்லிம் எஜுகேஷனல் சொஸைட்டியின் கூட்டம் 1906 டிசம்பர் 30 அன்று இன்றைய வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற போதுதான் அகில இந்திய முஸ்லிம் லீக் உதயமானது. முஸ்லிம் லீகின் மூன்றாவது மாநாடு 1910 ஜனவரி 29,30 தேதிகளில் டில்லியில் நடைபெற்ற போது சர் சையத் அகமத்கான் அலிகரில் உருவாக்கிய முகம்மடன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை பல்கலைக் கழகமாக உயர்த்த முடிவு செய்து இந்திய முஸ்லிம் லீக் தலைவர் சர் ஆகாகான் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இக்குழு ஒராண்டு காலத்தில் ரூபாய் இருபத்தைந்து லட்சம் நிதி திரட்டி அரசிடம் அளித்து முஹம்மடன் ஆங்கிலோ ஒரியண்டல் பள்ளி அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகமானது. அப்போது அதன் செயலாளராக இருந்தவர் நவாப் முஹ்ஸினுல் முல்க். அவர்தான் அகில இந்திய முஸ்லிம் லீகின் இரண்டு பொதுச் செயலாளர்களில் ஒருவர் என்பது நினைவு கூறத்தக்கது.மற்றொருவர் நவாப் வக்காருல் முல்க்.அவரும் சர் சையது அஹமது கானின் நண்பராவார்.
இன்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் 1155 ஏக்கர் பரப்பளவில் 2000 துறைகளோடு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களோடு உலகின் உயர்கல்வி நிறுவனங்களில் 10 இடங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.அதனை உருவாக்கியதோடு இந்திய முஸ்ஹம்களிடையே கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்திய மாபெரும்
அறிஞர் சர் சையத் அகமத்கான் அவர்களை அவரது 200 ஆவது பிறந்த தினத்தில் நினைவுபடுத்தி அவரது மறு உலக நன்மைக்கு வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்....
நன்றி ; காயல் மஹபூப்
+919790740787

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval