ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் நேற்று ரூ. 1,600 கோடி முதலீட்டில் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
சித்தூர் மாவட்டம், மதனபாளையம் பகுதியில் 636 ஏக்கர் பரப்பளவில் ஹீரோ மோட்டார்ஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் இரு சக்கர மோட்டார் பைக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டி பேசியதாவது: உலகிலேயே மிகப்பெரிய மோட்டார் நிறுவனமான ஹீரோ மோட்டார்ஸ் ஆந்திராவில் அதன் தயாரிப்புகளை தொடங்க இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நிறுவனம் முதற்கட்டமாக இங்கு ரூ. 1,600 கோடி முதலீடு செய்ய உள்ளது. பின்னர், படிப்படியாக ரூ. 32,000 கோடி வரை முதலீடு செய்யும். 2025க்குள் ஆண்டிற்கு 18 லட்சம் வாகனங்கள் தயாரிப்பது என இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோன்று ஆந்திர மாநிலத்தில் மேலும் சில நிறுவனங்களும் கூடிய விரைவில் தங்களது நிறுவனத்தை தொடங்க உள்ளன. இதன் மூலம் மொத்தம் 44 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற 5 நிறுவனங்களும் இங்கு தங்களது நிறுவனங்களைத் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளன. இங்கு தொழில் தொடங்குவதால், சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு சுலபமாக போக்குவரத்து செய்யலாம் என்றார் சந்திரபாபு நாயுடு. விழாவில், அமைச்சர்கள் அமர்நாத் ரெட்டி, ஹீரோ மோட்டோகார்ப் நிர்வாக இயக்குநர் பவன் முன்ஜால் உள்பட பலர் பங்கேற்றனர்.
courtesy;The Hindu
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval