சேலத்தில் பேருந்தை தவறவிட்டதால் தேர்வுக்கு செல்லமுடியாமல் கதறி அழுத மாணவிக்கு உதவி, அவரைப் பள்ளியில் நேரத்துக்கு அழைத்துச் சென்று தேர்வு எழுத உதவிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
நாட்டில் ஆயிரம் பிரச்சினை இருக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்பது போல் நம்மில் பலரும் அடுத்தவர் பிரச்சினையை பார்க்க மறுக்கிறோம். காரணம் வேகமான வாழ்க்கை சூழ்நிலை. ஆனால் தனது நெருக்கடியான பணி நேரத்திலும் ஒருவர் நிலை அறிந்து தக்க நேரத்தில் உதவி செய்துள்ளார் போக்குவரத்து காவலர் ஒருவர்.</div>
சேலம் வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் பால்ராஜ். நேற்று முன் தினம் காலை இவருக்கு ஐந்து ரோடு அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி. அப்போது சாலை ஓரமாக 16 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர் கண்ணீர் விட்டு அழுதபடி நிற்பதை பலரும் பார்த்தும் பாராமுகமாக செல்வதை கவனித்துள்ளார்.
மாணவி பள்ளிச் சீருடையில் நிற்பதால் சந்தேகமடைந்து அழைத்து விபரம் கேட்டுள்ளார் பால்ராஜ். அதற்கு அந்த மாணவி தான் ஓமலூரில் இருந்து வருவதாகவும்.+2 பொதுத் தேர்வு எழுத அரசுப் பள்ளிக்குச் செல்ல காலையில் வீட்டிலிருந்து கிளம்பி வந்து மாற்று பேருந்தில் ஏறி பள்ளி செல்ல வந்ததாகவும் ஆனால் பேருந்தை தவற விட்டுவிட்டதாகவும் எப்படி தேர்வு எழுதப்போவேன் என்று கூறி கதறி அழுதுள்ளார்.
ஆட்டோவில் அனுப்பி வைக்கிறேன் என்று பால்ராஜ் கூற என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, மேலும் இந்த நேரத்தில் யார் அவ்வளவு தூரம் வருவார்கள் நான் தேர்வு எழுத போக முடியாது, என் வாழ்க்கை அவ்வளவுதான் என்று அந்த மாணவி அழுததைப் பார்த்து பால்ராஜுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை.
தேர்வுக்கு இன்னமும் சற்று நேரமே உள்ளது என்ன செய்யப்போகிறேன் என்று அழுதபடி மாணவி நிற்பதைப் பார்த்து, உடனடியாக மாணவிக்கு உதவ நினைத்த காவலர் பால்ராஜ், தான் மாணவியை அழைத்துச்சென்றால் முக்கியமான ஐந்து ரோடு போக்குவரத்து சிக்னலை யார் பார்த்துக்கொள்வார்கள். ஏதாவது விபத்து நடந்தால் பணி நேரத்தில் தான் இல்லாதது தெரிந்து தனது வேலைக்கே பிரச்சினை வருமே என்று யோசித்துள்ளார்.
பின்னர் வருவது வரட்டும் என்று மேலதிகாரிக்கு போன் செய்து நிலைமையைக் கூறியுள்ளார். தான் மோட்டார் சைக்கிளில் சென்று அந்த மாணவியைப் பள்ளியில் இறக்கிவிட்டால் நேரத்திற்கு தேர்வு எழுத செல்லமுடியும் என கூறி அனுமதி கேட்டுள்ளார்.
மனிதாபிமானமிக்க அந்த உயர் அதிகாரியும் நிலைமையை புரிந்துகொண்டு மாற்று காவலரை நான் அனுப்பி வைக்கிறேன் நீங்கள் முதலில் மாணவியை தேர்வு மையத்திற்கு சென்று இறக்கிவிடுங்கள் என்று அனுமதி அளிக்க உடனடியாக மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேர்வு மையத்தில் நேரத்திற்கு சென்று இறக்கி விட்டுள்ளார்.
கையெடுத்துக் கும்பிட்ட அந்த மாணவியிடம் அதெல்லாம் எதுக்கும்மா நீ முதலில் நன்றாக தேர்வு எழுதும் வழியைப் பார் என்று தகப்பனின் ஸ்தானத்தில் அறிவுரை கூறி தனது பணியிடத்திற்கு திரும்பியுள்ளார் பால்ராஜ்.
மனிதாபிமானத்துடன் காவலர் பணி சமுதாயப்பணி என்ற எண்ணத்துடன் செயல்பட்ட சேலம் வடக்கு போக்குவரத்து தலைமைக் காவலர் பால்ராஜுக்கு பாராட்டுகள் குவிகின்றன. அவரது மேலதிகாரி சேலம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் அவரைப் பாராட்டினர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval