Monday, March 12, 2018

ஷம்ஷீரே மில்லத்" எம்.ஏ.லத்தீப் சாஹிப்

Image may contain: 1 person, closeup
மஞ்சவெலி அப்துல் லத்தீப் சாகிப் ஜுலை 1, 1936 அன்று அன்றைய வட ஆற்காடு மாவட்டம் இன்றைய வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பிறந்தார்.
ஆரம்பக் கல்வியை வாணியம்பாடி இஸ்லாமிய உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரி படிப்பை வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியிலும் தொடர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரி, சட்டக்கல்லூரியிலும் பயின்று எம்.ஏ.,எம்.எல்., பட்டம் பெற்றார்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவப் பருவத்திலேயே மாணவர் தலைவராக திகழ்ந்துள்ளார்.
எம்.ஏ. லத்தீப் சாகிப் 1954 ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் உறுப்பினராக இணைந்தார்.
தேவிக்குளம் - பீர்மேடு போராட்டத்திலும், 1964-&1965 ஆம் ஆண்டுகளில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
தமிழ், உர்தூ, ஹிந்தி, ஆங்கிலம், அரபி, சமஸ்கிருதம், பார்ஸி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் புலமை பெற்று ‘பன்பொழிப் புலவர்’ என அனைவராலும் அழைக்கப்பட்டவர் எம்.ஏ. லத்தீப் சாகிப். சட்ட வல்லுனராகவும், கல்வியாளராகவும் விளங்கியதோடு சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியின் தாளாளராகவும் பணியாற்றினார்.
1971--1976, 1977-1980 ஆகிய ஆண்டுகளில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றினார்.
முஸ்லிம் லீக்,தி.மு.க. கட்சிகள் கூட்டுறவில் ஆர்வம் உள்ளவர், அரசியலில் மிதமான ஈடுபாடு கொண்டவர், இந்து, முஸ்லிம் கிறிஸ்துவ மற்றும் அனைத்து சமுதாய மக்களின் நல்லுறவு, ஒற்றுமைக்காக பெரிதும் பாடுபட்டார். சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைக்காக நாளும் உழைத்தவர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுச்செயலாளர், தேசிய செயலாளராக பல்லாண்டுகள் பணியாற்றியவர், தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கிலும், வட மாநிலங்களுக்கும் சென்று தாய்ச்சபையின் பிரச்சார பீரங்கியாக விளங்கியவர் எம்.ஏ. லத்தீப் சாகிப். போர் குணத் தோடு செயல்பட்ட எம்.ஏ. லத்தீப் சாகிபை ‘ஷம்ஷீரே மில்லத்’ என தாய்ச்சபையினர் அழைத்து மகிழ்ந்தனர்.
கருத்து வேறுபாடு ஏற்பட்டு போட்டி இயக்கம் கண்டாலும் இலைமரை காயாக ‘முஸ்லிம் லீகனாகவே’ வாழ்ந்தவர் எம்.ஏ. லத்தீப் சாகிப்.
1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொன்விழா மாநாட்டிற்கு தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது சாகிப் பிரிந்து சென்ற தாய்ச்சபை நண்பர்களுக்கு கைப்பட கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார்.
இக்கடிதத்திற்கு பதில் எழுதிய எம்.ஏ. லத்தீப் சாகிப் ‘மாநாடு அழைப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - நான் வளர்ந்த கட்சி, நான் வளர்த்த கட்சி. பொன்விழா காண்பதறிந்து இதயம் குளிர்கின்றது வாழ்த்துகிறேன்’ என தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களுக்கு பதில் எழுதியதோடு யாருக்கும் தெரியாமல் மாநாடு நடந்த சீரணி அரங்கம் கடற்கரைக்கு வந்து மாநாட்டு நிகழ்வை முழுமையாக கேட்டு மகிழ்ந்தார்.
1989, 1996, 2001 ஆகிய சட்ட மன்றங்களிலும் எம்.ஏ. லத்தீப் சாகிப் இடம்பெற்று தற்காலிக சபாநாயகர், பல்வேறு சட்டமன்ற குழுக்களுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தார்.
இறுதியாக ரமளான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஷம்ஷீரே மில்லத் எம்.ஏ. லத்தீப் சாகிபும், தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாகிபும் சந்தித்து கொண்டபோது, பாசிச சக்திகளால் சமுதாயம் எதிர்கொள்ளும் அபாயம் குறித்தும், சமுதாய ஒற்றுமை குறித்தும் தலைவர்கள் விரிவாக கலந்துரையாடினர்.
விடைபெறும்போது எம்.ஏ. லத்தீப் சாகிப் ‘நம் இயக்கங்கள் இணைய வேண்டும், இந்திய தேசிய லீகை சிந்தாமல், சிதறாமல் இந்திய யூனியன்முஸ்லிம் லீகுடன் இணைத்து விடுகின்றேன்.
நோன்பு பெருநாள் முடிந்து பின் இப்பணிகளை செய்யலாம்’ என தலைவர் பேராசிரியர் கே.எம்.கே. அவர்களிடம் கூறி சென்றார்.
இறைவன் பன்பொழிப்புலவர் எம்.ஏ. லத்தீப் சாகிபை நோன்பு பெருநாள் அன்றே அவன்பால் அழைத்துக் கொண்டான்.
பன்பொழிப்புலவரின் சொல்லுக்கேற்ப அவர் வழி நின்ற உண்மை தொண்டர்கள், இன்று தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் முனீருல் மில்லத் தலைமையில் சிறப்போடு பணிகளாற்றி வருகின்றனர்,
அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் எம்.ஏ. லத்தீப் சாகிப் ஆற்றிய உரைகள் வளரும் தலைமுறையினருக்கு பாடமாகவும், நல்லிணக்க நாயகர்களுக்கு விருந்தாகவும் அமையும். இன்று முதல் ‘மணிச்சுடர்’ நாளிதழில் ‘பன்பொழிப்புலவர் எம்.ஏ. லத்தீப் சாகிபின் பட்டயப் பேருரைகள்’ வெளியிடப்படுகின்றது. அனைவரும் படித்து பயன்பெற வேண்டுகிறோம்.
கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் MLA,

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval