ஆத்தூர் அருகே கண்முன்னே காதலியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை காதலன் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலையான நபர் காதல் ஜோடிகளை மிரட்டி பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன் மீது பல்வேறு வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவார பகுதியில் கார்த்திகேயன் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதையடுத்து அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் கார்த்திகேயன் கொலை வழக்கில் கல்லூரி மாணவி ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் மாணவியுடம் கல்லூரி மாணவர் தமிழரசன் என்பவரும் காதலித்து வந்ததது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் வடசென்னிமலை கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து, காதல் ஜோடியுடன் கத்தியை காட்டி நகையை பறித்துள்ளனர். மேலும் கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட முயன்றுள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த மாணவர் தமிழரசன், கார்த்திகேயனிடம் இருந்த கத்தியை பிடிங்கி அவரையே குத்தியுள்ளார். இதில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது நண்பரான மாரிமுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த முழு தகவலையும் போலீசாரிடம் மாணவி தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவர் தமிழரசனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திகேயனின் கூட்டாளியான மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்த்திகேயனும், மாரிமுத்துவும் வடசென்னிமலை கோவிலில் பல காதல் ஜோடிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. மேலும் பல பெண்களை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்களில் அவர்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
வடசென்னிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் மலை உச்சியில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மலைப்பகுதி பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக இங்கு பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பக்தர்களிடம் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் இதனை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடசென்னிமலை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக காதல் ஜோடிகளிடம் வழிப்பறி மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமைகள் செய்யப்பட்டு வந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்புக்குள்ளான நபர்கள் முன்னரே தகவல் தெரிவித்திருந்தால், இந்த சம்பவத்திற்கு முன்பே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval