Sunday, March 25, 2018

இவருடைய கனவு நனவாக வாழ்த்துக்கள்..!

Image may contain: 2 people
மாலைப்பொழுது... சூரியன் மறையும் நேரம், ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் வலம் வந்து கொண்டிருந்தார் ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநர்!!
வந்த வேகத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, “அண்ணா ஒரு நிமிடம்” என்று சொல்லிவிட்டு, சட்டென்று ஆட்டோவில் இருந்து அரிசி மூட்டையை, பட்டென்று தூக்கி தன் தோளின் மீது வைத்துக் கொண்டு படபடவென நடந்தார். இன்றைய இளைய தலைமுறை இளைஞர்களால் கூட அவ்வளவு பெரிய மூட்டையை தூக்க முடியாது.
ஆனால் பொழுது சாயும் வேளையிலும் அசால்ட்டாக அந்த மூட்டையை தூக்கி சென்றார் ரோஜா.
திருவண்ணாமலை நகரில் வசிக்கும் முருகன் - சாந்தி தம்பதியருக்கு 4 பெண்கள், ஒரு ஆண். மூன்று பெண்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இளைய மகள் ரோஜாவுக்கு 24 வயது. 3 1/2 வருடமாக ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். பத்தாம் வகுப்பு படிக்கும்போது அப்பாவிடம் ஆட்டோ ஓட்ட கற்றுக் கொண்டார். பன்னிரெண்டாம் வகுப்போடு தனது கல்வியை முடித்துக் கொண்டார்.
பிறகு ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொண்டு வாடகை ஆட்டோவை வைத்து தனது குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார். இதுவரை எந்த ஒரு விபத்தும் இல்லமால் ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய தம்பியும் பகுதி நேரமாக வேலை செய்து கொண்டு, படித்துக்கொண்டும் உள்ளார்.
தினமும் காலையில் வேலைக்கு சென்றால் மாலைதான் வீடு திரும்புவார். பௌர்ணமி நாட்களில் மட்டும் பகல் - இரவு இரண்டு வேலைகளிலும் ஆட்டோ ஓட்டுவாராம். ஒரு நாளைக்கு ரூ. 500/- சம்பாதிக்கும் ரோஜாவுக்கு, ஆட்டோ வாடகை நாளொன்றுக்கு ரூ. 150/- , பெட்ரோல் ரூ. 150/- போக ரூ. 200/- கையில் இருக்குமாம்.
முதியோருக்கும், ஊனமுற்றோருக்கும் இவருடைய ஆட்டோவில் இலவசம். திருமணம் செய்து கொள்ளும் ஆசை இல்லை. இவருடைய கனவு சொந்த ஆட்டோ வாங்கி, திருவண்ணாமலையில் சொந்த இடம் வாங்கி அந்த இடத்தில் ஒரு ஆஸ்ரமம் அமைத்து ஊனமுற்றோருக்கும், முதியோருக்கும், அனாதை பிள்ளைகளுக்கும் சேவை செய்வதே இவருடைய கனவு.
நம்மில் எத்தனைபேருக்கு இதுபோன்ற கனவு இருக்கும்? திருவண்ணாமலை தொகுதியில் நலத்திட்ட உதவி வழங்கியபோது வழங்கப்பட்ட மாவட்டத்தின் முதல் பெண் ஆட்டோ டிரைவர் என்ற பட்டத்துடன் மட்டுமே இருக்கும் ரோஜா, அரசாங்க சலுகைகளை எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ளார்.
இவருடைய கனவு நனவாக வாழ்த்துக்கள்..!
-நன்றி ஏ. இராஜேஷ்
(மாணவர் பத்திரிகையாளர்)

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval