பனைப் பணிகளில் உலகின் ஒளியாவோம்!
ம.செந்தமிழன்
நண்பர்களே,
செம்மை பனைப் பணி செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘வீட்டுக்கு வீடு கருப்பட்டி காய்ச்சுவோம்’ எனும் செயல்பாட்டினை முன்வைக்கிறோம். சென்னை, பெங்களூரு மரபுக் கூடல்களில் கருப்பட்டி காய்ச்சுதல் பொதுமக்களுக்கு நேரடியாகக் கற்றுத்தரப்பட்டது. இப்பயிற்சிகளைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென விரும்புகிறேன்.
பதநீர் இறக்கும் பருவம் துவங்கியுள்ளது. இன்னும் மூன்று மாதங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பதநீர் இறக்கும் தொழில் நடைபெறும். இறக்கும் பதநீரை விற்கவியலாமல் பனை மனிதர்கள் தள்ளாடுகின்றனர். கருப்பட்டி காய்ச்சுவதற்கான ஆட்களும் பனையேறிகளின் குடும்பத்தில் குறைந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், கருப்பட்டி காய்ச்சும் பணியைப் பொதுமக்கள் பகிர்ந்துகொண்டால்,பனைமனிதர்களின் பொருளாதாரம் மேம்படும், தள்ளாட்டம் குறையும்.
ஒரு தேக்கரண்டி சீனியை உற்பத்தி செய்வதற்காக இந்த நவீனச் சமூகம் மேற்கொள்ளும் சீர்குலைவு நடவடிக்கைகள் ஏராளம். நிலத்திற்குப் பொருந்தாத ஆலைக் கரும்பு திணிக்கப்படுகிறது. இதைப் பயிரிடுவதற்காக நிலத்தடி நீர் சுரண்டப்படுகிறது. வேதி உரங்கள், நஞ்சுகள் கரும்பு வயல்களில் வீசப்படுகின்றன. அறுவடைக்கென கனவகை எந்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆலைகள் என்ற பேரில், நூற்றுக்கணக்கான கிராமங்களின் இயற்கை வளம் சூறையாடப்படுகிறது. பலகோடி பணம் அந்நிய முதலீடு இத்துறைக்குள் செலுத்தப்படுகிறது. கணக்கிடவியலா மின்சாரம் சர்க்கரை ஆலைகளுக்காகவும் கரும்பு விவசாயத்திற்காகவும் அழிக்கப்படுகிறது. டிராக்டர் தொழில் வளர்ந்ததே சர்க்கரை ஆலைகளின் வருகைக்குப் பின்னர்தான். பல இலட்சம் விவசாயிகள் கடன் சுமையில் மூழ்கியதற்குச் சர்க்கரை ஆலைகளும், ஆலைக் கரும்பு வேளாண்மையும் காரணம்.
இவ்வளவுக்குப் பின்னரும், நமக்கு நல்ல சர்க்கரை வந்து சேர்வதில்லை. மாறாக, வேதி நஞ்சுகள் கலக்கப்பட்ட வெள்ளைச் சீனிதான் கிடைக்கிறது. முழுக்க முழுக்க சார்புத்தன்மையும் அடிமைத்தனமும் கொண்ட முறை இது. நவீனச் சர்க்கரைத் துறையினால் நிலம் கெட்டது, நீர்வளம் குறைந்தது, மக்கள் உடல்நலம் நலிந்தது, பல்லுயிர்ப் பெருக்கம் சிதைந்தது, பொருளாதாரம் சரிந்தது. நிறுவனங்கள் முன்வைக்கும் எல்லாத் தொழில் நுட்பங்களும் இவ்வாறானவைதான்.
பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், கடலூர், தெற்குத் தஞ்சைப் பகுதிகள், கிழக்குப் புதுக்கோட்டைப் பகுதிகள், கோபி, சத்தி உள்ளிட்ட பகுதிகள் வறண்டுபோனதற்கு சர்க்கரை ஆலைகளும், ஆலைக் கரும்பு விவசாயமும் முதன்மைக் காரணங்கள்.
தற்சார்புத்தன்மை ஒன்றுதான் எல்லாச் சிக்கல்களிலிருந்தும் மனிதர்களை விடுவிக்கும்.
பனைமரம், தற்சார்பின் சிறந்த குறியீடு. நமது சமூகத்தின் ஓர் அங்கமான பனை மாந்தரது இன்னல்களைக் களைவது, நம் சமூகத்தின் தற்சார்பினை உறுதிப்படுத்தும் செயல். அதேவேளை, கருப்பட்டி எனும் பொருளை ஒவ்வொரு குடும்பமும் காய்ச்சத் துவங்கினால், அக்குடும்ப உறுப்பினர்களுக்கு தற்சார்புச் செயல்பாட்டின் அருமை புரியும். எல்லாவற்றுக்கும் நிறுவனங்களைச் சார்ந்து இருக்கும் இன்றைய நிலைமையை அழித்துப்போட வேண்டிய காலம் இது.
வெள்ளைச் சீனிக்காக நமது வாழ்வாதரங்களை அழித்துக்கொண்டுள்ள நவீனப் பிசாசுகளைக் கட்டுபடுத்துவதற்கான மந்திரம் – வீட்டுக்கு வீடு கருப்பட்டி காய்ச்சுவோம்!
பனைமரங்களோடு வாழும் மனிதர்களுக்கு நம் பொருளாதாரம் செல்லட்டும். அவர்கள் வழியாக நம் பனை மரங்கள் வழங்கும் பதநீர் நமக்குக் கிடைக்கட்டும். நாம் காய்ச்சும் கருப்பட்டியின் நலமும் மணமும் நாடெங்கும் பரவட்டும். பனை மரங்களுக்கும் மனிதர்களுக்குமான பிணைப்பை மேம்படுத்தவும் உறுதிப்படுத்தவும் வேண்டும் என்பது என் ஆழ்ந்த விருப்பம். அதற்கான செயல்வடிவமாக இத்திட்டத்தை முன்வைக்கிறேன்.
பல்வேறு ஊர்களில் கருப்பட்டி காய்ச்சும் பயிற்சியை வழங்கவுள்ளோம். உங்கள் ஊரில் இப்பயிற்சி தேவையெனில், இதே கருத்துள்ளவர்கள் ஒன்றிணைந்து தொடர்புகொள்ளுங்கள். மரபுவழிகளில் அக்கறை கொண்டோர் குழுக்களாக ஒருங்கிணைவது இச்செயல் திட்டத்தினை எளிதாக முன்னெடுக்க உதவும்.
காணொளி வழியாக கருப்பட்டி காய்ச்சும் முறையைக் கற்றுத்தருவதில் எமக்குச் சம்மதமில்லை. பதம் பார்த்தல்தான் கருப்பட்டி காய்ச்சுதலின் முக்கியப் பண்பு. அதை நேரடியாகத்தான் எம்மால் கற்றுத்தரவியலும்.பின்னாட்களில் பலர், இதற்கான காணொளிகளைப் பதிவிடுவார்கள். அதற்குமுன், சரியான முறையை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என விழைகிறோம். இல்லையெனில், தரமற்ற வழிமுறைகள் இப்பணியிலும் பரவலாகிவிடும்.
கருப்பட்டி காய்ச்சும் பயிற்சிகளுக்கென எவ்விதக் கட்டணமும் இல்லை. ஆனாலும் இதற்காகும் செலவுகளை நீங்களே பகிர்ந்துகொள்ளுங்கள். இதற்கென நன்கொடை வாங்குவதிலும் எமக்கு உடன்பாடில்லை.
இச்செயல் திட்டத்திற்கென ஒருங்கிணைப்புக் குழுவினை அமைத்துள்ளேன்.
குரு.சரவணன், இளவேனில், சுவாமிநாதன், இராஜேஸ்வர் ஆகியோர் இக்குழுவில் உள்ளனர். செம்மைச் சமூகத்தின் அங்கத்தவர் பலர் பனைப்பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.
பதநீர் விற்பனையிலும், வீட்டுக்கருப்பட்டி உற்பத்தியிலும் புத்தெழுச்சி நிகழ்வதை உறுதி செய்வோம்.
இப்பணியைச் செய்து முடிக்கும்போது, பனை மரங்களுக்கான செயல் திட்டங்களில் தமிழகம் உலகின் ஒளியாகத் திகழும்!
விருப்பம் கொண்டோர் இணைக!
விருப்பம் கொண்டோர் இணைக!
அன்புடன்,
ம.செந்தமிழன்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval