கள்ளநோட்டுக்களை தடுக்க, ரூபாய் நோட்டுகளில் எண்களை ஒரே சீராக அச்சிடாமல், சிறியதும் பெரியதுமாக அச்சிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கள்ளநோட்டு புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கள்ள நோட்டுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும், கட்டுப்படுத்த முடிவதில்லை. கள்ளநோட்டு கும்பல்கள் பிடிபடுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க அண்டை நாடுகளை சேர்ந்த சமூக விரோத கும்பல்கள் கள்ளநோட்டு அச்சிட்டு இந்தியாவில் புழக்கத்தில் விடுகிறது. குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து கள்ளநோட்டுகள் இந்தியாவில் புழக்கத்தில் விடுகின்றனர். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இந்தியாவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்மூலம், தீவிரவாதிகள் தங்களது சதி செயலுக்கு இந்த கள்ள நோட்டை பயன்படுத்துகின்றனர்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் கள்ளநோட்டு கடத்தல் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன. மியான்மரில் இருந்து வங்கதேசம், கொல்கத்தா வழியாக கள்ளநோட்டுகள் கொண்டுவரப்படுகின்றன. எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. கள்ள நோட்டு அச்சடிப்பவர்களுக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகின்றன.
கள்ளநோட்டுகளை பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ரிசர்வ் வங்கி பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகிறது. உண்மையான நோட்டுக்கும், போலியான நோட்டுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் கள்ளநோட்டு புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், புதிதாக அச்சடிக்கப்பட உள்ள ரூபாய் நோட்டுகளில் இடம்பெறும் எண்கள் ஒரே மாதிரியாக இல்லாமல், சிறியதும் பெரியதுமாக அச்சிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. 9 இலக்க எண்களில் முதல் 3 எண்கள் ஒரே மாதிரியாகவும் மற்றதை சிறியதும் பெரியதுமாக அச்சிடப்பட உள்ளது. 10 முதல் 1000 ரூபாய் வரையிலான நோட்டுகளில் இந்த புதியமுறையில் எண்களை அச்சிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval