மும்பையில் உள்ள மிகப்பெரிய விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தமிழர் அவர்; சமீபத்தில், சென்னை வந்திருந்தார். அலுவலகத்தில் என்னை சந்தித்தார்.
விளம்பர உலகில், 'சர்வே' எடுப்பது முக்கியப் பணி... அதில் நம் நண்பர், 'எக்ஸ்பர்ட்!' விரல் நுனியில் பல தகவல்கள், புள்ளி விவரங்கள் வைத்திருப்பவர். அவரை கிண்டிவிட்டு, குறிப்புகள் எடுக்க ஆரம்பித்தேன்...
அவர் கூறிய தகவல்களில் சில இதோ:
இந்திய ரயில்வேயில் தினமும், ஒரு கோடியே, 20 லட்சம் பேர்களுக்கு மேல் பயணம் செய்கின்றனர். 62 ஆயிரத்து, 915 கி.மீ., ரயில்வே லயன்கள் உள்ளன.
வசதியாக வாழும் படித்த இந்தியர்கள், வாழ்வில் முக்கிய ஸ்டேட்டஸ் சிம்பலாக கருதுபவை... முதலாவது, கல்லூரி டிகிரி; இரண்டாவது கார்; பத்தாவது, ஜிம்கானா மற்றும் காஸ்மோபாலிடன் போன்ற பெரிய கிளப் மெம்பர்ஷிப்!
சராசரி இந்தியன், ஒரு ஆண்டுக்கு, 92 தடவை செக்ஸ் அனுபவிக்கிறான்; உலக சராசரி-, 109 தடவை.
தங்களது சேமிப்பை போடுவதற்கு பத்திரமான இடம் என்று இந்தியர்கள் கருதுவது: வங்கிகள்- - 62 சதவீதம், மனை, நிலம், வீடு- - 21 சதவீதம், ஷேர்கள்- - 2 சதவீதம்.
உலகில் உள்ள, 60 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.
இந்தியர்களிடம் சென்றடைவது மற்றும் வியாபித்திருப்பது, தூர்தர்ஷனோ மற்ற, 'டிவி' சேனல்களோ அல்ல, ஆல் இந்தியா ரேடியோ!
நூறு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களில், 98 கோடி இந்தியர்களால் ரேடியோ கேட்க முடியும்!
இந்தியாவில், 12 கோடி ரேடியோ செட்கள் இயங்குகின்றன.
ரேடியோ, இந்தியாவின் 90 சதவீதம் பகுதியை சென்றடைகிறது. தண்ணீரோ, 50 சதவீதம் தான் சென்று அடைகிறது.
'உன் குரல் நன்றாக இல்லை...' என்று ஒருவரை நிராகரித்தது ரேடியோ. அவரது குரல் அனைத்து இந்தியர்களுக்கும் நன்கு பரிச்சயம்; அவர் தான் அமிதாப்பச்சன்!
நாம் பெருமைப்படக் கூடிய விஷயங்கள்...
இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் உள்ள கோகினூர் வைரம், மெஹந்தி, சடுகுடு(கபடி) விளையாட்டு, கைரேகை, ஜோசியம், சதுரங்கம் -ஆகியவை நம்மைச் சேர்ந்தவை.
நகரங்களில் வாழும் இந்தியர்களில் நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், 15 சதவீதம் பேர் மட்டுமே!
நகரில் வாழும் இந்தியர்களில் சரியான எடைக்கு மேல், அதிகமான எடையுடன் இருப்பவர்கள், 65 சதவீதம்.
நேரம் கிடைக்கும் போது தேகப்பயிற்சி செய்யும் இந்தியர்கள், 19 சதவீதம்; சீனர்கள், 34 சதவீதம்.
உலகிற்கு பீடியை அளித்த நாடு இந்தியா!
இந்தியா முழுவதும் பாப்புலராக, அனைவரும் அறிந்திருக்கும் விஷயம்: ராமாயணம்!
கடந்த, 1987ல், 'லா கமிஷன்' பரிந்துரையின் படி, 10 லட்சம் பேருக்கு இருக்க வேண்டிய நீதிபதிகள், 50; தற்போது, இந்தியாவில், 10 லட்சம் பேருக்கு இருக்கும் நீதிபதிகள், 10.5. இந்திய கோர்ட்டுகளில் தேங்கியிருக்கும் வழக்குகள் இரண்டரை கோடி!
இப்போது இருக்கும் வழக்குகளை, புது வழக்குகளை எடுத்துக் கொள்ளாமல், விசாரித்து முடித்து, தீர்ப்பு சொல்லி முடிக்க, இந்திய கோர்ட்டுகளுக்கு தேவைப்படும் காலம், 324 ஆண்டுகள்.
இந்திய பள்ளிக்கூடங்களில் குடிதண்ணீர் வசதி இல்லாமல் இருப்பவை, 58 சதவீதம். டாய்லெட் வசதி இல்லாமல் இருக்கும் பள்ளிகள், 89 சதவீதம்.
இந்தியாவில் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் அனுபவித்ததாக கூறும் மாணவர்கள், 25 சதவீதம்; மாணவிகள், 20 சதவீதம்.
உத்திரப்பிரதேசத்தின் ஜனத்தொகையும், பாகிஸ்தானின் ஜனத்தொகையும் சமம்.
இந்தியாவில் விற்பனை ஆகும் வயாக்ரா மாத்திரைகளில் உத்திரப்பிரதேசம், பீகார் என, இரு மாநிலங்களின் விற்பனை, 33 சதவீதம்.
- இப்பகுதியை அப்படியே பத்திரப் படுத்துங்கள்... பல நேரங்களில் உபயோகமாக இருக்கும்!
Ziaudeen Deen
Ass.prof K.M. College, Adirampattinam
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval