மேகாலயா மாநில மாணவர்களிடம் பேச வேண்டும் என்ற உற்சாகத்தில் நேற்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட அப்துல்கலாம் தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஷில்லாங் செல்கிறேன்' என்று பதிவிட்டிருந்தார். டெல்லியில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு விமானத்தில் சென்ற கலாம் பிறகு அங்கிருந்து காரில் ஷில்லாங் சென்றார். 122 கிலோ மீட்டர் தூர பயணத்தை அவர் காரிலேயே மேற்கொண்டார்.
அந்த பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவத்தை அவரது உதவியாளர் ஸ்ரீ ஜன் பால் சிங், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பயணத்தில் பாதுகாப்பிற்காக எங்கள் முன்னும் பின்னும் கார்களில் காவல் வீரர்கள் இருந்தனர். நானும் கலாமும் 2-வது காரில் சென்று கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்னால் திறந்த நிலையில் சென்று கொண்டிருந்த ஜீப்பில் 2 பாதுகாப்பு வீரர்கள் இரு பக்கங்களிலும் உட்கார்ந்திருந்தனர். ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
என்னிடம் கலாம் அவர்கள் “அவர் ஏன் நின்று கொண்டிருக்கிறார். இது ஏதோ தண்டனை தருவது போல் இருக்கிறது. ரேடியோ கருவி மூலமாக மெசேஜ் அனுப்பி அவரை உட்காரச் செய்யுங்கள்.” என்று கூறினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ரேடியோ கருவி வேலை செய்யவில்லை. அடுத்த ஒன்றரை மணி நேரப் பயணத்தில் கையால் சமிக்ஞை (signal) செய்தாவது அவரை உட்காரச் செய்யுங்கள் என்று மூன்று முறை என்னிடம் கூறியபடியே இருந்தார்.
அவர் மாணவர்களுடன் உரையாட வேண்டிய ஐ.ஐ.எம் கட்டிடத்திற்கு வந்ததும், “அவரை நான் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும்.” என்று கூறினார். நான் உடனே பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரித்து நின்று கொண்டிருந்த நபரைக் கண்டுபிடித்து அவரிடம் கூட்டி வந்தேன். அவருடன் கை குலுக்கியபடி “நன்றி நண்பரே” என்று கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்த கலாம், நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா? ஏதாவது சாப்பிடுகிறீர்களா? உங்களை நிற்க வைத்ததற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.” என்று கூறினார்.
இந்த சந்திப்பு முடிந்ததும் விழா தொடங்குவதற்கு குறைவான நேரமே இருந்ததால் அவர் விழா அரங்கிற்கு விரைந்தார். மாணவர்களை ஒரு போதும் காக்க வைத்து விடக் கூடாது என்பதில் பிடிவாதமுள்ளவர் அவர். இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் கலாம் அவர்களின் உதவியாளர் பதிவிட்டிருந்தார்.
ஆனால், அந்த விழா அரங்கில் நடந்தவையோ நினைத்து பார்க்கவே முடியாதவை. அவரது நிலை குலைவை பார்த்த மாணவர்களின் மனநிலையை நினைத்துப் பார்க்கையில் தாள முடியாத துக்கமே மேலெழுகிறது.
courtesy;malaimalar
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval