Sunday, July 12, 2015

127 கோடியைத் தாண்டியது இந்திய மக்கள்தொகை!


127 kodiyaith tandiyathu inthiya makkalthokai! இந்தியாவின் மக்கள்தொகை 127 கோடியைத் தாண்டியது. உலகிலேயே அதிக 
மக்கள்தொகை கொண்ட நாடாக, வரும் 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியா மாறும் என்று கருதப்படுகிறது.

உலக மக்கள்தொகை தினமான (ஜூலை 11) சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, இந்தியர்களின் எண்ணிக்கை 127,42,39,769 ஆகும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான தேசிய மக்கள்தொகை ஸ்திரத்தன்மை நிதியம் (என்பிஎஸ்எஃப்) அறிவித்துள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் தில்லியில் கூறியதாவது:இந்திய மக்கள்தொகை ஆண்டுக்கு 1.6 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து வருகிறது. இதே ரீதியில் இந்த வளர்ச்சி நீடித்தால், அதீத மக்கள்தொகை தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். சீனாவை விட வேகமான விகிதத்தில் இந்திய மக்கள்தொகை வளர்ந்து வருகிறது. சீனாவின் மக்கள்தொகை 139 கோடியாகும். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனா இருக்கிறது. இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் இப்படியே தொடர்ந்தால், எதிர்வரும் 2050 ஆண்டில் நமது நாட்டின் மக்கள்தொகை 163 கோடியாக இருக்கும். அதன் மூலம் சீன மக்கள்தொகையை நம் நாடு முந்தி விடும்.இந்தியாவில் ஒட்டுமொத்த கருவுறும் விகிதமானது 2013ஆம் ஆண்டில் சரிவைச் சந்தித்து, 2.3 சதவீதமாக இருந்தது. திருமண வயதானது, ஒட்டுமொத்த கருவுறும் விகிதத்தின் மீது கணிசமான தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. 

திருமண வயது அதிகமாக இருக்கும் நாடுகளில் பொதுவாக கருவுறும் விகிதமானது குறைவாக இருக்கும் என்றார் அந்த அதிகாரி. நம் நாட்டில் ராஜஸ்தான், பிகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஏராளமான பெண்கள் 18 வயதுக்குக் கீழ் திருமணம் செய்து கொள்கின்றனர்.கடந்த 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள்தொகை 121 கோடியாக இருந்தது. இது அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம், ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்குச் சமமாகும். அதேபோல் நம் நாட்டின் சில மாநிலங்களின் மக்கள்தொகையானது, சில பெரிய நாடுகளின் மக்கள்தொகைக்கு கிட்டத்தட்ட சமமாக இருக்கிறது. உதாரணமாக, உத்தரப்பிரதேச மக்கள்தொகையானது, பிரேசில் நாட்டின் மக்கள்தொகைக்கு இணையாக உள்ளது.இதனிடையே, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ""மக்கள்தொகை ஸ்திரத்தன்மை தொடர்பான இலக்குகளை எட்டுவதில் அரசுக்கு தன்னார்வ அமைப்புகள் உதவ வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். 

source dinamani

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval