Saturday, July 25, 2015

முருங்கையின் அதிசயம்.!

drumstick-treeமுருங்கை மரத்தை அதிசய மரம் என்றே அழைக்கலாம். அந்தளவுக்கு இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் உபயோகமாக உள்ளது. இலைகள் மட்டுமின்றி, வேர்கள், விதைகள் ஆகியவை சமையல் மற்றும் மருத்துவத்துக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.
‘ஒருநாள் விட்டு ஒருநாள் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு ரத்த சோகை என்கிற பிரச்னை எட்டிக்கூடப் பார்க்காது.
முருங்கையில் மறைந்துள்ள மகத்தான குணங்கள்:
‘‘முருங்கையின் உள்ளே உள்ள விதைகள் மற்றும் முருங்கை இலைகள் ஆகியவற்றில் கரோடின், இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை அடங்கியுள்ளன. இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சூப் ஆஸ்துமா, மார்புச் சளி மற்றும் காசநோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக உதவுகிறது.
முருங்கை இலைச் சாறு பருக்களை அகற்றி முகத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. முருங்கை இலைச் சாறு எலும்புகளை வலுவாக்குகிறது. முக்கியமாக குழந்தைகளுக்கும் வளரும் பிள்ளைகளுக்கும் உதவுகிறது. சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகிறது. இலை, பூ மற்றும் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் சூப், எல்லா வகையான தொற்று நோய், குறிப்பாக தோல், தொண்டை பிரச்னைகள் ஆகியவற்றை சரி செய்கிறது.
பச்சையான முருங்கைக்காய் இரும்புச் சத்து, வைட்டமின், கால்சியம் ஆகிய சத்துகளைக் கொண்டது. தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் முருங்கை சாப்பிட்டால் நமது எலும்புகள் வலிமை பெறும் என்பது நிரூபணமாகி உள்ளது. இதன் டானிக்கை தொடர்ந்து கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு கொடுத்தால் அவர்களுக்கு தேவையான கால்சியம், இரும்பு, வைட்டமின் ஆகிய சத்துகள் கிடைக்கின்றன.
மேலும் கர்ப்பப்பையின் மெத்தனத்தை சரி செய்கிறது. பிரசவத்தை எளிதாக்கி, பிரசவத்துக்கு பின் வரும் பிரச்னைகளையும் சரி செய்கிறது. முருங்கைக் கீரை பொரியல் தாய்ப்பால் அதிகமாக சுரக்க உதவுகிறது. இந்தப் பொரியல் தயாரிக்க முதலில் முருங்கை இலைகளை தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு அந்த இலைகளை நெய் சேர்த்து உண்ண வேண்டும். முருங்கைக்காய் அஜீரணக் கோளாறுகளுக்கு மருந்தாக உதவுகிறது. இலையின் சாறு 1 டீஸ்பூனுடன் தேன் கலந்து இத்துடன் 1 டம்ளர் இளநீர் சேர்த்து 2 அல்லது 3 முறை ஆயுர்வேத மருந்தாக அருந்த காலரா, பேதி, வயிற்றுக் கோளாறுகள் ஆகியவற்றை சரி செய்யும்.
இது எலும்புகளை வலுவாக்குவதுடன் ரத்தத்தையும் சுத்தப்படுத்தும். முருங்கைப் பொடி ஆண்மைக் குறைபாட்டை சரி செய்கிறது. செக்ஸ் உறவில் பிரச்னைகளைத் தீர்க்கவும் உதவுகிறது.
எப்படி வாங்க வேண்டும்?
முருங்கைக்காய் சிறியதாக இருக்க வேண்டும். ஏனெனில் உள்ளே விதைகள் இருப்பதால் முருங்கை சிறிய அளவில் இருத்தல் வேண்டும். மிகவும் முதிர்ந்த காய்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். முருங்கைக்காய் நல்ல பச்சை நிறத்துடனும் மேல் காணப்படும் தோல் மிருதுவாகவும் இருக்க வேண்டும்.
முருங்கைக்காய் முற்றிய நிலையில் இருந்தால் லேசாக சீவி விட்டோ அல்லது கீறி விட்டோ சமைக்கலாம். முருங்கைக்காய்களை வாடாமலும் உலர்ந்த நிலையிலும் வைப்பதற்கு பிளாஸ்டிக் பை அல்லது பேப்பரில் சுற்றி வைக்கலாம். ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். ஆனாலும், ஃப்ரெஷ்ஷாக சமைத்து சாப்பிடுவதே ஆரோக்கியமானது.
எச்சரிக்கை:
முருங்கைக்காயில் உடம்புக்குத் தேவையான அத்தனை நல்ல சத்துகளும் உள்ளன. இருப்பினும் வேர் பகுதியிலிருந்து பெறப்படும் தூள்களை மருத்துவரை ஆலோசிக்காமல் உண்ணக்கூடாது. ஏனெனில் இதில் விஷத்தன்மை உள்ள வேதியியல் மருந்துகள் காணப்படுகின்றன. இவை பக்கவாதத்தை உண்டு பண்ணலாம்.
என்ன இருக்கிறது?
(100 கிராமில்) முருங்கைக்காய் இலை ஆற்றல் 26 கி.கலோரி 92கி.கலோரி
கார்போஹைட்ரேட் 3.7 கிராம் 13.4 கிராம்
கொழுப்பு 0.1 கிராம் 1.7 கிராம்
நார்ச்சத்து 0.48 கிராம் 0.9 கிராம்
புரோட்டீன் 2.5 கிராம் 6.7 கிராம்
நீர்ச்சத்து 86.9% 75.0%
வைட்டமின் ஏ 0.11 மி.கி. 6.8 மி.கி.
வைட்டமின் பி 423 மி.கி. 423 மி.கி.
வைட்டமின் பி1 (தையமின்) 0.05 மி.கி. 0.21 மி.கி.
வைட்டமின் பி2 (ரிபோஃப்ளேவின்) 0.07 மி.கி. 0.05 மி.கி.
கால்சியம் 30 மி.கி. 440 மி.கி.
தாமிரம் 5.3 மி.கி. 7 மி.கி.
மெக்னீசியம் 24 மி.கி. 24 மி.கி.
பாஸ்பரஸ் 259 மி.கி. 259 மி.கி.
பொட்டாசியம் 110 மி.கி. 70 மி.கி.
இரும்புச் சத்து 5.3 மி.கி. 7 மி.கி.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval