Monday, July 6, 2015

திருச்சியில் 24 மணிநேரத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைத்து சாதனை.!

9604திருவானைக்காவல் மேம்பாலம் அருகே 24 மணிநேரத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைத்து சாதனை செய்யப்பட்டது. ராட்சத கிரேன் உதவியுடன் விடிய, விடிய பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன.
திருவானைக்காவல் மேம்பாலம்
திருச்சி மாநகரத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருவானைக்காவல்–ஸ்ரீரங்கம் இடையே ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. நாளடைவில் அதிக அளவிலான வாகனங்கள் இந்த பாலம் வழியாக கடந்து சென்றதால், திருவானைக்காவல் மேம்பாலம் தினந்தோறும் போக்குவரத்து நெருக்கடியால் சிக்கி திணறியது.
போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், திருவானைக்காவலில் புதிய மேம்பாலம் கட்ட கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.44 கோடியில் அங்கு புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெயில்வே சுரங்கப்பாதை
இதற்கிடையே போக்குவரத்துக்கு இடையூறு இன்றி திருவானைக்காவல் மேம்பால பணியை முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக திருவானைக்காவல் பாலம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தண்டவாளத்தின் அருகே பொக்ளின் எந்திரம் மூலம் மண் தோண்டும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதையடுத்து சுரங்கப்பாதையில் சிலாப்புகள் வைக்க சுமார் 45 டன் எடை கொண்ட பெரிய சிலாப்புகள் தயார் செய்து வைக்கப்பட்டன. இந்த சிலாப்புகளை ராட்சத கிரேன் மூலம் பொருத்தும் பணியை நேற்று ஒரேநாளில் முடிக்க திட்டமிடப்பட்டு, அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
பின்னர் நேற்று அதிகாலை ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கின. குறிப்பிட்ட தூரத்துக்கு ரெயில் தண்டவாளம் பெயர்த்து எடுக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடந்தன. ராட்சத கிரேன் உதவியுடன் சிலாப்புகளை தூக்கி தண்டவாளம் பகுதியில் பொருத்தும் பணி நடந்தது. ஒரேநாளில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதால் நேற்று அதிகாலை தொடங்கிய பணி இரவு முழுவதும் விடிய, விடிய நடந்து முடிந்தது. இதனால் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை 24 மணிநேரத்தில் முடித்து ரெயில்வே அதிகாரிகள் சாதனை படைத்து உள்ளனர்.
ரெயில்கள் இயக்கம்
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “ரெயில்வே தண்டவாளத்தை பெயர்த்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நேற்று ஒரேநாளில் (24 மணிநேரத்துக்குள்) முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக அதிகாலை முதலே பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் முடிந்ததும், ரெயில் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி ரெயில்கள் இயக்கப்படும். ஆனால் சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட குறிப்பிட்ட அந்த பகுதியில் ரெயிலை மெதுவாக தான் இயக்க முடியும். மேலும், சுரங்கப்பாதைக்கு சிலாப்புகள் பொருத்தும் பணி முடிவடைந்தாலும், இதர பணிகள் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் நடைபெறும். இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்றபிறகு திருவானைக்காவல் மேம்பால பணிகள் தொடங்கும்“ என்று கூறினார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval