Friday, May 20, 2016

இதுதான் அ.தி.மு.கவின் அமைச்சரவை பட்டியலா..?! - முழு விவரம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. ஜெயலலிதா தலைமையில் வரும் 23ம் தேதி அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறுகிறது.  அமைச்சரவை பட்டியலில் யார், யார் இடம் பெறுவார்கள் என்பது பற்றிய ஒரு அலசல்...

1) ஆர்.நட்ராஜ்

மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளவர் முன்னாள் டி.ஜி.பி ஆர்.நட்ராஜ். அதிமுகவில் இணைந்த பிறகு சட்ட விவகாரம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வந்தார். இதனால் அவருக்கு அமைச்சர் பதவி உறுதி என்கிறார்கள். அவருக்கு சட்டத்துறை மற்றும் சிறைத்துறை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

2) ஜெயக்குமார்

ராயபுரம் தொகுதியில் 4வது முறையாக ஜெயக்குமார் வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஆட்சியில் சபாநாயகராக சிறிது காலம் பணியாற்றினார். முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் மின்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். மீனவ சமூகத்தை சேர்ந்தவரான ஜெயக்குமாருக்கு இந்தமுறை மீன்வளத்துறை மற்றும் சிறு துறைமுகத்துறை வழங்கப்படலாம்.

3) நரசிம்மன்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏக்களில் சீனியர் திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ நரசிம்மன். இவர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே கட்சியில் இருந்து வருகிறார்.  எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்த போதும் ஜெ., அணியிலேயே இருந்தவர். இதனால் அவருக்கு தொடர்ந்து எம்.எல்.ஏவாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. திருத்தணி தொகுதியில் வன்னியர் சமுதாய வாக்குகள் அதிகமாக இருப்பதால் அதே சமுதாயத்தை சேர்ந்த நரசிம்மனுக்கு இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு முன்பு கொறடாவாக இருந்துள்ளார். இந்த முறை இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சு நிலவுகிறது.

4) பெஞ்சமின்

சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.கவில் முதல்முறையாக நேர்காணலுக்கு ஜெயலலிதாவால் அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் முன்னாள் துணை மேயர் பெஞ்சமின். அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை வானகரத்தில் நடத்திய போது அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிரமண்டமாக செய்து ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்றதே இவருக்கு இந்த முறை மதுரவாயல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. சிறுபான்மையினரான பெஞ்சமினுக்கும் இந்த முறை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

5) மா.ஃபா.பாண்டியராஜன்

தே.மு.தி.கவில் இருந்து கொண்டு அ.தி.மு.க.வின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் மா.ஃபா.பாண்டியராஜன் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு விவகாரங்களில் அனுபவம் உள்ளவர். அதனாலே, இந்த தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். இதனால் இவருக்கு தொழில்துறை அமைச்சர் பதவி தரப்படலாம் என்று பேச்சு நிலவுகிறது.

6) திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதா கட்சி விவகாரங்களை கவனிக்க நியமிக்கப்பட்ட ஐவர் குழுவில் இரண்டாவது ரேங்கில் இருந்தவர் நத்தம் விஸ்வநாதன். தேர்தலுக்கு முன்பு, ஜெயலலிதாவின் கோபப்பார்வை இவர் மீது பாய்ந்தது. அதனால், டம்மி ஆக்கப்பட்டார். மாவட்டம் முழுக்க ஆதிக்கம் செலுத்தி வந்த விஸ்வநாதனின் கொட்டம் அடக்கப்பட்டது. அதே நேரம், தி.மு.க.வின் பவர்ஃபுல் பிரமுகராக ஐ.பெரியசாமியும், அவரது மகன் ஐ.செந்தில்குமாரும் மாவட்டத்தில் வலம் வருகிறார்கள். இவர்களை எதிர்கொள்ள சரியான ஆள் திண்டுக்கலில் தேவை. அந்த வகையில், திண்டுக்கல் சீனிவாசனுக்கு இந்த முறை வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். மூத்த நிர்வாகி என்பதாலும், மாவட்டத்திலுள்ள அரசியல் நுணுக்கங்களை அறிந்தவர் என்கிற வகையிலும் இவர் பக்கம் அதிஷ்டகாற்று அடிக்கலாம்.

7) ஓ.பன்னீர்செல்வம்

உயர்ந்த பதவியும் இருக்க வேண்டும். ஆனால், பவர் இல்லாத பதவியாகவும் அது இருக்க வேண்டும். அப்படியென்றால், சபாநாயகர் பதவி ஒன்றுதான் இருக்கிறது. அதில் யாரை ஜெயலலிதா உட்கார வைப்பார் என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது. ஓ.பன்னீர் செல்வத்திற்கு இந்த முறை அமைச்சர் பதவி வழங்காமல் சபாநாயகர் பதவி வழங்கப்படலாம். பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் இருவரையும் அதிமுக சபாநாயகர் பதவிக்கென்றே நிறுத்தியதால் இருவரும் தோல்வியடைந்ததால் பன்னீர் செல்வத்தை சபாநாயகராக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

8) எஸ்.டி.கே. ஜக்கையன் 

28 ஆண்டு எம்பியாக இருந்தவர். 15 ஆண்டு மதுரை மாவட்ட செயலாளர். டெல்லி சிறப்பு பிரதிநிதி, ராஜ்ய சபா எம்பி. தற்போது, கம்பம் தொகுதி எம்எல்ஏ. தேனி மாவட்ட அரசியலில் வீழ்த்த முடியாத சக்தியாக இருந்த தி.மு.க.வின் கம்பம் ராமகிருஷ்ணனை வீழ்த்தியதால் இவருக்கு அமைச்சர் பதவிக்கு பெயர் அடிபடுகிறது. இவர் ஒக்கலிக கவுடர் சமூகத்தை சேர்ந்தவர். இவரின் மிக நெருக்கமான உறவினர் வேடசந்தூர் எம்.எல்.ஏ.வாக தேர்வாகி இருக்கிறார். இந்த இருவரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்கிறார்கள்.

9) டாக்டர் கதிர்காமு


மருத்துவ பட்ட மேற்படிப்பு (எம்.எஸ்.) படித்த டாக்டர் கதிர்காமு, தேனி அரசு மருத்துவமனையில் டீன் பதவி வரை சென்று வந்தவர் என்பதாலும், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர். தேர்தலில் நிற்பதற்காகவே வேலையை விட்டவர் என்கிறார்கள். ஜெயலலிதாவின் அபிமானத்தை பெற்றவரான இவர் பெயர் புதிய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவிக்கு அடிபடுகிறது. மேலும் செல்லூர் ராஜூ அல்லது ராஜன் செல்லப்பாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள்.

10) துரைக்கண்ணு


தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூடியுள்ள துரைக்கண்ணுவிற்கு அமைச்சராக சான்ஸ் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்கிற பேனர்தான்.

11) ஆர்.காமராஜ்

நன்னிலம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு அமைச்சர் ஆர்.காமராஜ் வெற்றி பெற்றுள்ளார். மன்னார்குடியில் உள்ள திவாகரனின் கைப்பாவையாக முதலில் இருந்து அமைச்சரானவர். பிறகு, திவாகரனுக்கு ஜெயலலிதாவுடன் பிரச்னை வந்தபோது, திவாகரன் பற்றிய பல விவகாரங்களை போட்டு கொடுத்து தனது அமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொண்டவர். இவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க மன்னார்குடி வகையறாக்கள் பலமுறை முயன்றும் முடியவில்லை. புது அமைச்சரவையில் காமராஜ் பெயரை தவிர்க்க மன்னார்குடி வகையறாக்கள் காய் நகர்த்தினாலும், ஜெயலலிதாவின் கரிசனப்பார்வை காமராஜை மீண்டும் அமைச்சராக்கும் என்கிறார்கள்.

12) ஓ.எஸ்.மணியன்


ஒருகாலத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக திகழ்ந்தவர்களில் ஓ.எஸ்.மணியனும் ஒருவர். அ.தி.மு.க.யின் அவர் வளர்ச்சிப் பிடிக்காத கோஷ்டி அவரை பின்னுக்கு தள்ளியது. சென்னையை விட்டு கிளம்பி சொந்த மாவட்டமான நாகப்பட்டினத்துக்கே சென்றார். அங்கேயே அரசியலில் ஈடுபட்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்பு, நாகப்பட்டினத்தில் அமைச்சராக இருந்த ஜெயபாலுக்கு இறங்குமுகம் ஆரம்பித்து. அவருக்கு தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட நிலையில், அவருக்கு போட்டியாக இருந்த ஓ.எஸ்.மணியன் வேதாரண்யம் தொகுதியில் களமிறக்கப்பட்டு மாவட்ட செயலாளர் பதவியையும் வழங்கியது அதிமுக தலைமை. மன்னார்குடி வகையறாக்களின் ஆதரவால் சீட்டு மற்றும் மாவட்ட செயலாளர் பதவி ஒரே நேரத்தில் கைப்பற்றிய ஓ.எஸ்.மணினுக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்கிறார்கள்.

13) முருகையா பாண்டியன்


நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் சரிபாதியை கைப்பாற்றி இருக்கும் அ.தி.மு.க.வின் புறநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர், முருகையா பாண்டியன். கடந்த முறை வீட்டு வசதி வாரியத் தலைவாராக பொறுப்பு வகித்த இவர், கட்சியின் நீண்டகால விசுவாசி என்பதால் இந்த முறை அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் உள்ளது. இவருடைய பொறுப்பில் இருந்த 5 தொகுதிகளில் மூன்றில் வெற்றியை தக்கவைத்துக் கொண்டு இருக்கிறார். அத்துடன் தி.மு.க சார்பில் போட்டியிட்ட முன்னாள் சபாநாயகரான ஆவுடையப்பனை வீழ்த்தி இருப்பதுவும் இவருக்கு கூடுதல் ப்ளஸ். முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த இவருக்கு இந்த முறை அமைச்சர் ஆகலாம் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லி திரிகிறார்கள்.

14) ஐ.எஸ்.இன்பதுரை

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் இவர், நீண்டகாலமாக கட்சிக்காக பின்னணியில் இருந்து செயலாற்றி வந்தார். ராதாபுரம் தொகுதியில் இவரது சொந்த ஊர் இருப்பதால், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்த போது அதனைக் கட்டுப்படுத்த கட்சித் தலைமையால் அனுப்பப்பட்டவர். அதில், ஓரளவுக்கு வெற்றியும் பெற்றதால் கட்சித் தலைமையால் பாராட்டப்பட்டவர். ராதாபுரம் தொகுதியில் இந்த முறை போட்டியிட்டு பலம் வாய்ந்த தி.மு.க வேட்பாளரான அப்பாவுவை தோற்கடித்து உள்ளார். தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.வில் உள்ள நாடார் சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் இந்த முறை இன்பதுரைக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம். போயஸ் கார்டனுக்கு நெருக்கமானவர் என்பது இவர் அமைச்சராவதற்கான வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.

15) சண்முகநாதன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் நான்கினை கைப்பற்றிய அ.தி.மு.க.வில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்ற சண்முகநாதன் அமைச்சராவதற்கான வாய்ப்பு அதிகம். நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதுடன், ஏற்கெனவே கடந்த ஆட்சியின் போது சில மாதங்கள் அமைச்சராக பொறுப்பு வகித்த அனுபவம் உள்ளவர் என்பதால் இந்த முறையும் இவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படலாம்.

16) கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி தொகுதியில் கடந்த முறை எம்.எல்.ஏ.வாக இருந்த இவருக்கு இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னரே களத்தில் போட்டி அதிகமாகி இருப்பதை புரிந்துகொண்டு வைகோ போட்டியிடாமல் தவிர்க்க காரணமாக இருந்தவர் என்கிற பேச்சு தொகுதியில் உண்டு.  நாயுடு சமுதாயத்தை சேர்ந்த இவருக்கு இந்த முறை அமைச்சராக வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்கிறார்கள்.

17) சுந்தர்ராஜன்
ஓட்டப்பிடாரம் தொகுதியில் முதன்முறையாக களம் இறங்கினார் சுந்தர்ராஜன். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை வீழ்த்தினார் என்ற ஒரே காரணத்திற்காகவே இவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என அடித்து சொல்கிறார்கள் ஆதரவாளர்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரான இவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்படலாம் என்கிறார்கள்.

18) எம்.சி.சம்பத்

கடந்த ஆட்சியில் ஜெயலலிதாவால் அடிக்கடி அமைச்சர்கள் பந்தாடபட்ட போதும் ஐந்து வருடங்கள் 'ஸ்ட்ராங்'கான அமைச்சராக இருந்தவர் எம்.சி.சம்பத். அதிக வாக்குகள் வாங்கி கடலூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறார் அமைச்சர் எம்.சி.சம்பத்.  இம்மாவட்டத்திற்கு வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்தான் அமைச்சராகும் யோகம் இருக்கிறது. அதற்கு தகுதியானவராக பேசப்படுபவர் அமைச்சர் எம்.சி.சம்பத். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர். அதனால் மீண்டும் எம்.சி.சம்பத் அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது.

19) கலைச்செல்வன்
 


விருத்தாசலம் கலைச்செல்வன். இவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். கட்சியினர் மத்தியில் எந்த குற்றச்சாட்டும் இல்லாதவர். அத்தோடு, எப்போதும் கடலூர் மாவட்டத்துக்கு வாக்கு சேகரிக்க வரும் ஜெயலலிதா, பின்தங்கிய பகுதிகளான விருத்தாசலம், திட்டக்குடி பக்கம் வருவதில்லை. இந்த முறைதான் விருத்தாசலம் வந்துள்ளார். அந்த சென்டிமென்ட் வொர்க்-அவுட் ஆகி புதுமுகத்துக்கு வாய்ப்பு என்றால் அது கலைச்செல்வனாக இருக்கலாம் என்கிறார்கள்.

20) 'ரெயின்போ' விஜயபாஸ்கர்


போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த கரூர் செந்தில்பாலாஜிக்கு எதிர் கோஷ்டியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். இவர் மாவட்ட செயலாளர் பதவியை பிடித்ததே சர்ச்சையை கிளப்பியது. அதனால், அந்த பதவியில் இருந்து குறுகிய காலத்தில் தூக்கப்பட்டார். ஆனால், இவர் மீது தவறில்லை என்பதை தெரிந்துகொண்ட ஜெயலலிதா, கரூர் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தினார். தேர்தலில் ஜெயித்துவிட்ட நிலையில், அவருக்கு செந்தில்பாலாஜிக்கு செக் வைக்கும் வகையில் கவுண்டர் சமூகத்தவர் என்கிற பேனரில் இவர் அமைச்சராகலாம் என்கிறார்கள்.

21) 'விராலிமலை' விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளர் சமுதாயத்தில் இருந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் விஜயபாஸ்கர். தற்போது சுகாதாரத்துறை அமைச்சர். மாவட்டத்தில் முத்திரையர் சமூகத்தவரை இழிவாக பேசிய குற்றச்சாட்டின் பேரில் அவரிடமிருந்த மாவட்டச் செயலாளர் பதவியை ஜெயலலிதா பறித்தார். அதே சமயம், அமைச்சர் பதவியை விட்டு நீக்கவில்லை. அரசியலில் நெளிவு சுளிவு தெரிந்தவரான இவருக்கு முதல்வரின் கேபினில் உள்ள வி.வி.ஐ.பி.களின் நெட்-வொர்க்கில் இருப்பவர். அந்தவகையில், மீண்டும் அமைச்சராக ஆவார் என்கிறார்கள் இவருக்கு நெருக்கமானவர்கள்.

22) ஶ்ரீரங்கம் வளர்மதி

ஶ்ரீரங்கம் திருச்சி மாநகர் மாவட்டத்தில் வரும் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த வளர்மதி, மண்ணச்சநல்லூர் பரமேஸ்வரி முருகன், முசிறி செல்வராசு, பேராவூரணி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த தேர்தலில் ஜெயித்திருக்கிறார்கள்.  இதில் ஶ்ரீரங்கம் வளர்மதி இரண்டாவது முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் எம்.ஏ.எம்.பில், பி.எட், பி.எல் படித்துள்ளதால் இவருக்கு முக்கியமான துறையின் கீழ் வரும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிற பேச்சு பலமாக அடிபடுகிறது.

23) பெரம்பலூர் இளம்பை தமிழ்ச்செல்வன்

பெரம்பலூர் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வன், மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த சில வருடங்களாகவே, தான் அமைச்சர் ஆகிவிடுவேன் என சொல்லிவந்தவருக்கு அந்த வாய்ப்பு கடந்த ஐந்து வருடத்தில் தள்ளிப்போனது. இந்த முறை இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் தனக்கு அமைச்சர் பதவி நிச்சயம் கிடைக்கும் என சொல்லி வருகின்றார். சசிகலா குடும்பத்தினரின் ஆசி பெற்றவர்.

24) குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன்


பெரம்பலூர் மாவட்டச் செயலாளரான ஆர்.டி.ராமச்சந்திரன், குன்னம் தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்திருக்கிறார். தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசாவின் கோட்டையாகவே இதுவரை இருந்து வந்தது. ஒருமுறை, ஆ.ராசா தரப்பினருக்கும் ராமச்சந்திரனுக்கும் மோதல் வந்தபோது, துணிச்சலாக உருட்டுக்கட்டையுடன் போய் தட்டிக்கேட்டவர். ஆ.ராசாவை எதிர்கொள்ள இவரே சரியான நபர் என்கிற முடிவுக்கு வந்த ஜெயலலிதா, ராமச்சந்திரனை அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக ஆக்கினார். அந்தவகையில், அவரை அமைச்சராகவும் ஆக்குவார் என்கிறார்கள். 

25) டாக்டர் மணிகண்டன்


ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் டாக்டர் மணிகண்டன் மன்னார்குடி குடும்பத்துக்கு வேண்டப்பட்டவர். அவர்கள் மூலம்தான் சீட் வாங்கினார். அதனால் மாவட்ட கோட்டாவில் இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கட்சியினர் கூறுகிறார்கள்.

26) சிவகங்கை பாஸ்கரன்

சிவகங்கை மாவட்டத்தில் வெற்றி பெற்ற சிவகங்கை பாஸ்கரன் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர். முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் இதே மாவட்டத்தின் பிரதிநிதி என்கிற கோட்டாவில், கோகுலஇந்திரா அமைச்சர் ஆக்கப்பட்டார். இத்தனைக்கும் அவர் சென்னை அண்ணாநகரில் போட்டியிட்டு ஜெயித்தவர். மீண்டும் இந்த தேர்தலில் அண்ணாநகரில் போட்டியிட்ட கோகுல இந்திரா தோற்றுப்போனார். அதனால், தற்போது சிவகங்கை மாவட்டத்தில் ஜெயித்திருக்கும் இருவரில் ஒருவரை அமைச்சராக்குவது உறுதி. அந்த ஒருவர், சிவகங்கை பாஸ்கரன் என்கிறார்கள். காங்கிரஸின் பாரம்பரியம் உள்ள கே.ஆர்.ராமசாமி காரைக்குடி எம்.எல்.ஏ. அதேபோல், தி.மு.க வி.ஐ.பி.களில் ஒருவரான பெரியகருப்பன் திருப்பத்தூர் எம்.எல்.ஏ. இந்த இருவரையும் அரசியல்ரீதியாக சமாளிக்க பாஸ்கரனால்தான் முடியும் என்கிறார்கள் மாவட்ட அ.தி.மு.க-வினர்.

27) விருதுநகர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட செய்தித்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி 14 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் பல அமைச்சர்கள் பதவி பறிபோனது. ஆனால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கொண்டாலும் கடந்த 5 ஆண்டுகளில் தனது அமைச்சர் பதவிக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொண்டார். எனவே அவருக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் லோக்கல் அதிமுகவினர்.

28) வேலூர் கே.சி.வீரமணி

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கே.சி.வீரமணி கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். மூன்று ஆண்டுகள் மாற்றத்திற்கு ஆளாகாமல் அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொண்டவர். மீண்டும் அமைச்சர் பதவியை பெற காய் நகர்த்தி வருகிறார். வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். அடக்கமான ஆள் என்பது இவரது ப்ளஸ்.

29) வேலூர் நிலோபர் கபில்

வாணியம்பாடி அ.தி.மு.க வேட்பாளர் நிலோபர் கபில் வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை வெற்றி பெற்ற அ.தி.மு.க வேட்பாளர்களில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் இவர் ஒருவரே என்பது இவருக்கு அமைச்சர் பதவி கிடைப்பதற்கான பெரிய ப்ளஸ். கடந்த ஐந்தாண்டுகள் வாணியம்பாடி நகர மன்ற தலைவராக இருந்த அனுபவம் உள்ளவர். இவர் அமைச்சராக பிரகாசமான வாய்ப்பிருக்கிறது.


30) விழுப்புரம் குமரகுரு

உளுந்தூர்பேட்டைத் தொகுதியில் 81,641 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தற்போது மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ ஆகியிருக்கும் குமரகுருவுக்கே அதிகமாக இருக்கிறது. இதற்கு ஒரே காரணம் விஜயகாந்தை தோற்கடித்ததுதான். விஜயகாந்தை வீழ்த்த வேண்டும் என்பதுதான் கார்டன் இவருக்குக் கொடுத்த அசைன்மெண்ட். எதிர்பார்த்தது போல மாதிரியே விஜயகாந்துக்கு டெபாசிட்டே போய்விட்டது என்பதால் குமரகுருவுக்கு அமைச்சர் பதிவு உறுதி என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

31) விழுப்புரம் சி.வி.சண்முகம்


விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் இருக்கிறார். விழுப்புரம் என் கோட்டை என்று சொல்லி வந்த பொன்முடியை சென்ற 2011 தேர்தலில் திண்டிவனத்திலிருந்து வந்து தோற்கடித்தவர் இவர். இதற்காகவே அப்போது வணிக வரித்துறையும், பத்திரத் துறைக்கான அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு இவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளால் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது மீண்டும் சி.வி.சண்முகம் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு பொன்முடியை திருக்கோவிலூர் தொகுதியை நோக்கி ஓட வைத்தவர் என்பதால் இவருக்கும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

32) கோவை எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை தற்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும். ஜெயலலிதாவின் குட் புக்கில் இருக்கும் எஸ்.பி.வேலுமணி, ஐவர் அணியில் ஒருவராக இடம்பிடித்துள்ளதால் இவருக்கு அமைச்சர் பதவி கிடைப்பது நிச்சயம் என்கிறார்கள். கவுண்டர் சமூகத்தினைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் பலம். மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் என எடுத்துக்கொண்டால், எஸ்.பி.வேலுமணியின் பெயர் முன்னணியில் இருப்பதால் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கிடைப்பது சிரமம்தான். இருந்தாலும் கோவையில் இருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என நினைத்தால் பொள்ளாச்சி ஜெயராமன் பெயரை ஜெயலலிதா டிக் செய்வார்.

33) திருப்பூர் குணசேகரன்

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை அமைச்சர் பதவி கிடைக்கும் என நம்புபவர்களில் முதல் இடம் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு தான் என சொல்லப்பட்டு வந்தது. அரசு கேபிள் கார்ப்பரேஷன் தலைவராக இருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணன் தான் திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். இவரது ஆளுகைக்கு உட்பட்ட 4 தொகுதிகளில் 2 தொகுதியில் அதிமுக தோல்வியடைந்திருப்பதால் இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சட்டமன்றத்துக்கு புதிய முகமான திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. குணசேகரனுக்கு வாய்ப்பு கிடைக்கும். அமைச்சர் ஆனந்தனின் ஆதரவாளராக இருந்த குணசேகரன், ஆனந்தன் வழியில் எளிதில் அமைச்சர் பதவியை பிடிப்பார் என சொல்லப்படுகிறது.

34) செங்கோட்டையன்


ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிபாளையம் செங்கோட்டையனுக்கு இந்த முறை மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிறார்கள். கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், சீனியர்கள் பலர் தேர்தலில் தோல்வியடைந்திருப்பதாலும், அமைச்சரவையில் முக்கிய இலாகா செங்கோட்டையனுக்கு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. செங்கோட்டையனை தவிர கே.வி.ராமலிங்கம், தோப்பு வெங்கடாசலம் என முன்னாள் அமைச்சர்கள் இருவரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கக்கூடும்.

35) குன்னூர் ராமு


நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 தொகுதியில் அதிமுக வென்றுள்ளது ஒரே ஒரு தொகுதியில் தான். குன்னூர் தொகுதியில் பல ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக வென்றுள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கும், படுகர் சமூகத்துக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் குன்னூர் தொகுதியில் வென்ற ராமுவுக்கு சுற்றுலாத்துறை போன்ற எளிய துறை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்கிறார்கள்.

36) எடப்பாடி பழனிச்சாமி

போயஸ்கார்டனின் வரவு-செலவுகளை நன்கு தெரிந்த சூப்பர் லாக்கர் என்று கட்சிக்காரர்களால் வர்ணிக்கப்படுகிறவர் பழனிச்சாமி. கட்சி நிதியாக அமைச்சர்கள் அனைவரும் தரும் பணத்தை இவர் சேனல் வழியாகத்தான் கட்சி மேலிடத்துக்கு போகும். ஐவர் குழுவில் ஒருவராக திகழும் இவர் மீண்டும் நெடுஞ்சாலைத்துறையே கிடைத்தாலும் கிடைக்கலாம்.

37) நாமக்கல் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் தற்போதைய அமைச்சர் தங்கமணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கமணி, கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே கவுண்டர் சமூக பிரதிநிதித்துவம் வழங்க தங்கமணிக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

38) தர்மபுரி பழனியப்பன்
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கென பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் வழக்கமாக ஒரு அமைச்சர் பதவி கிடைக்கும். கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த பழனியப்பனுக்கே மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிறார்கள். வன்னியர் சமூகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், மேலிட ஆதரவால் அமைச்சர் பதவியை பழனியப்பன் பெறுவார்கள் என்கிறார்கள்.

39) மதுரை செல்லூர் ராஜூ

மதுரை மாவட்டத்தில் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த ஐந்து வருட ஆட்சியில் ஜெயலலிதாவுக்காக விதவிதமான பிராத்தனைகளை நடத்தி பிரபலமானவர். கூட்டுறவுத்துறை அமைச்சர் பதவியில் பல சர்ச்சைகளில் சிக்கியவர். இவர் மீது உள்ளூரிலும் கட்சிக்காரர்கள் மத்தியில் அதிருப்தி உண்டு. இருந்தாலும், ஜெயலலிதாவின் குட்-புக்-ஸில் இருப்பதால், மீண்டும் அமைச்சராகலாம் என்கிறார்கள். அதே சமயம், ராஜன்செல்லப்பாவும் ரேஸில் இருக்கிறார். போனமுறை செல்லூர் ராஜூவுக்கு... இந்தமுறை ராஜன் செல்லப்பாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.

39) மதுரை ஆர்.வி.உதயகுமார்
பூர்வீகம் விருதுநகர் மாவட்டம். ஆனால், தேர்தலில் ஜெயித்தது மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில்! காரணம்...உள்ளூரில் முக்குலத்தோரின் எதிர்ப்பு உதயகுமாருக்கு கிளம்பியதால், அவரை பக்கத்து மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தார் ஜெயலலிதா. வருவாய்துறை அமைச்சாராக இருக்கும் உதயகுமார், சசிகலா வகையறாக்களில் ஒருவரான டாக்டர் வெங்கடேஷின் ஆசி பெற்றவர். அந்தவகையில், மீண்டும் அமைச்சராக ஆக வாய்ப்பு உண்டு. 

40) திருப்போரூர் கோதண்டபாணி

 
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் எம்.எல்.ஏ கோதண்டபாணியோ எம்.ஏ. ஆங்கிலம் படித்துள்ளார். பிரெஞ்ச் மொழி பட்டையம் பெற்றிருக்கிறார். மாமல்லபுரம் கடற்கரையில் சங்கு மணி வியாபாரம் செய்தவர் என்பதால் தெலுங்கு, இந்தி, மலையாளம், ரஷ்ய மொழிகளில் சரளமாக உரையாடுவார். குறிப்பாக சிறுதாவூர் பங்களா பகுதிக்கு பக்கத்தில் உள்ளவர் என்பதால் இந்த முறை இவருக்கு அமைச்சர் வாய்ப்பு அதிகம். 

41) பெருந்துறை- தோப்பு வெங்கடாசலம்

 
ஈரோடு மாவட்டம, பெருந்துறை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தோப்பு வெங்கடாசலம். கடந்த ஆட்சியில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தவர். பெருந்துறை சிப்காட் விவகாரத்தில் தொகுதி மக்களிடையே எதிர்ப்பை சம்பாதித்தவர். இருந்தும், இவரை வேட்பாளராக்கியது அதிமுக தலைமை. இந்தமுறை ஜெயிக்க மாட்டார் என தொகுதி மக்களாலேயே பேசப்பட்ட இவர், பணத்தை வாரி இறைத்து ஜெயித்து இருக்கிறார். தற்போது உள்ள அமைச்சர்கள் பட்டியலில் இருவரது பெயரும் இருக்கிறது. 

இவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம்!


1. 
பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற வெற்றிவேலுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்பட்டாலும், அவர் மீது சில  வழக்குகள் இருப்பதை சுட்டிக்காட்டி சட்ட நிபுணர்களிடம் ஒபீனியன் கேட்டிருக்கிறாராம் ஜெயலலிதா.

2. தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர் தங்க தமிழ்செல்வன். இவர் தற்போது ஆண்டிப்பட்டி தொகுதியின் எம்.எல்.ஏ. ஒருவேளை, ஜெயலலிதாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் மீதான கோபம் குறைய வில்லை என்றால், தங்க தமிழ்செல்வனையும் அமைச்சராக்குவார் என்கிற பேச்சு தேனி அ.தி.மு.க பிரமுகர்கள் மத்தியில் இருக்கிறது.

3. 
கரூர் மாவட்டத்தில் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த மணப்பாறை சந்திரசேகர் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval