Saturday, May 14, 2016

சளியை விரட்டும் கருந்துளசி

சனி பிரச்னையிலிருந்து கூட தப்பிச்சுடலாம்... இந்த சளி பிரச்னை வந்தால்தான் தாங்க முடியாது...’ என்று சிலர் கூறக் கேட்டிருப்பீர்கள். கேட்க இது வேடிக்கையாக இருந்தாலும், அன்றாட வாழ்வில் ‘டர்...புர்’னு மூக்கை சிந்தியவாறு வாடிக்கையாக நாம் பார்க்கும் மனிதர்கள் ஏராளம். இந்த சளித்தொல்லையை நீக்கும் அரிய மருந்துச்செடியாக கருந்துளசியை குறிப்பிடலாம்.
நம் உடலில் ஏற்படக்கூடிய எந்த நோயையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ‘சிறுதுளி பெருவெள்ளம் போல’ சிறுசளி பெரிய பிரச்னையை உருவாக்கி விடும். நோய் எதிர்ப்பு சக்தி நம்மிடம் சீராக இருந்தால், எந்த நோயையும் ஈசியாக விரட்டி விடலாம். குறைவாக இருக்கும் பட்சத்தில் சளி போன்ற உபாதைகள் அடிக்கடி ஏற்படுகிறது. இது மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்து நமது மூச்சுப்பாதையை பாதித்து நச்சாகி விடுகிறது.
நுரையீரல் பகுதியில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக நம் உடலில் இயற்கையாகவே உருவாக்கப்பட்டதுதான் சளி. இது பல்கி பெருகும்போது, அதிகளவு சளியை வெளியேற்றி, மீண்டும் இதனால் ஒவ்வாமை ஏற்படாமல் பாதுகாப்பதற்காக மருந்துகளை நாம் உட்கொண்டு வருகிறோம். அன்றாட உணவு பழக்க வழக்கங்களில் சில மாறுதல்களை செய்தால், இந்த பிரச்னையை ஓரளவு சரி செய்யலாம். மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சின்ன வெங்காயம் போன்றவைகள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன.
கருந்துளசியை சளித் தொல்லைக்கு ஒரு சிறந்த மருந்துச் செடியாக குறிப்பிடலாம். ‘ஆசிமம் டெனியபுளோரம் டைப்பிகா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த செடிகளின், இலைகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன. சிறிது கருந்துளசி இலைகளை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க வேண்டும். இது பாலின் ஒவ்வாமையால் ஏற்படுகின்ற சளியை நீக்குகிறது. நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும்.
அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க 5 அல்லது 10 கருந்துளசி இலைகளை ஒரு லிட்டர் நீரில் ஊற வைத்து, அந்த நீரை அருந்தி பின்னர் இலைகளை மென்று சாப்பிட வேண்டும். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 3, 4 இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
அந்த காலத்தில் வீட்டில் துளசி செடிக்கென்று ஒரு இடத்தை ஒதுக்கி வளர்ப்பார்கள். இப்போ, ‘அந்த இடத்திலேயும் ஒரு பிளாட் கட்ட முடியுமா... பாருப்பா’ என்று கேட்கும் காலம் வந்து விட்டது. பின்னே ஏன் நோய் அதிகரிக்காது?

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval