Monday, May 30, 2016

வேலை கிடைக்காத விரக்தியில் சொந்தமாக விமானம் தயாரித்த உபி இளைஞர்!


விமானம்பல ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் அல்லாடிய இளைஞர் ஒருவர் வெறுத்து போய் தனக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை வைத்து சொந்தமாக விமானத்தை அசத்தியிருக்கிறார். உத்தரபிரேதச மாநிலம், முசாபர்நகர் அருகேயுள்ள கசெர்வா கிராமத்தை சேர்ந்தவர் 26 வயது இளைஞரான அப்துல் வாஜீத். மத மோதல்களில் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த அவர், உள்ளூரில் பள்ளிக்கல்வியை முடித்து டெல்லி பல்கலைகழகத்தில் மேற்படிப்பை முடித்தார்.   டெல்லி பல்கலைகழகத்தில் பயிலும்போது தேசிய சாரணர் படையில் ஈடுபாட்டுடன் சேர்ந்து, சி சர்டிபிகேட் வாங்கியிருக்கிறார். என்சிசி.,யில் இருந்தபோது அடிக்கடி முகாம்களில் கலந்து கொண்டிருக்கிறார். அவ்வாறு டெல்லி சப்தர்ஜங் விமான நிலையத்தில் நடந்த முகாம் ஒன்றில் வான் போக்குவரத்து சாதனங்களை வடிவமைப்பதற்கான அடிப்படை பயிற்சியை பெற்றிருக்கிறார். இந்த நிலையில், டெல்லி பல்கலைகழகத்தில் படிப்பை முடித்து பல இடங்களில் வேலை தேடியிருக்கிறார். ஆனால், வேலை கிடைத்தபாடில்லை. இதனால், கடும் விரக்தியில் இருந்த அவருக்கு தான் கற்ற வான் போக்குவரத்து சாதன வடிவமைப்பு பயிற்சியை வைத்து சொந்தமாக விமானத்தை தயாரிக்க முடிவு செய்தார்.   இதற்காக, டெல்லி சப்தர்ஜங் விமான நிலையத்தின் வான் போக்குவரத்து சாதன வடிவமைப்பு துறையின் பயிற்றுனராக இருந்த ஹேமந்த் வர்மா என்பவரின் உதவியை நாடியிருக்கிறார். அவரது வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளுடன் சொந்தமாக விமானத்தை வடிவமைத்து முடித்துவிட்டார். வாஜீத் வடிவமைத்த விமானம் ஒற்றை இருக்கை வசதி கொண்டது. முதலில் இரண்டு பைக் எஞ்சின்களை பொருத்தியிருக்கிறார். ஆனால், அவை விமானம் மேல் எழும்புவதற்கான போதுமான உந்து சக்தியை கொடுக்கவில்லை. எனவே, மாருதி வேன் எஞ்சினை பொருத்தியிருக்கிறார். மேலும், ஸ்டீல் பிரேமில், 350 கிலோ எடையுடைய மர சட்டங்களை பொருத்தி விமானத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த விமானத்தில் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் இருக்கிறது. அதிகபட்சமாக 10 கிமீ தூரம் வைர தனது விமானம் பறக்கும் என நம்பிக்கை ததும்ப பேசுகிறார். இந்த விமானத்தை தயாரிப்பதற்கு ரூ.5 லட்சம் செலவாகியிருக்கிறதாம். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது கிராமத்தினர் கொடுத்த நிதி உதவி மூலமாக இந்த விமானத்தை தயாரித்துள்ளார். முதலில் கேலி பேசிய கிராமத்தினர் இவரது முயற்சியை கண்டு பாராட்டி, பின்னர் நிதி உதவி செய்துள்ளனராம். தனது விமானத்தை பறக்க அனுமதிப்பதற்கான சான்றை வழங்க கோரி முசாபர்நகர் மாவட்ட நிர்வாகத்தை அணுகியுள்ளார். ஆனால், அதற்கான அனுமதியை விமான போக்குவரத்து ஆணையத்திடமே பெற வேண்டும் என்று கூறிவிட்டனராம். இதையடுத்து, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சரை அணுகி தனது விமானத்தை பறக்கச் செய்வதற்கான அனுமதியை பெற முடிவு செய்துள்ளார். நிச்சயம் அனுமதி கிடைக்கும் என்று அடித்து கூறுகிறார் வாஜீத். அவரது உழைப்புக்கும், முயற்சிக்கும் பாராட்டுகள்.
courtesy;Tamil drive sparke

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval