Wednesday, May 4, 2016

'சோனியா கூட்டத்தில் பங்கேற்பாரா சிதம்பரம்?' -பிரசாரத்தில் ஒதுங்கியிருக்கும் பின்னணி

சட்டசபைத் தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்து வருகின்றனர். கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ் உள்பட கட்சியின் முக்கியத் தலைவர்களின் முகங்களை சில இடங்களில் பார்க்க முடிகிறது. ஆனால், 'முன்னாள் மத்திய அமைச்சரான சிதம்பரம் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யச் செல்லவில்லை. கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். பல நேரங்களில் டெல்லியிலேயே இருக்கிறார்' என்கின்றனர் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில்.

இதுபற்றி நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர், " கடந்த தேர்தல்களில் கூட்டணி முடிவானாலும், தொகுதிப் பங்கீடு முடிவானாலும் நேராக கோபாலபுரம் வீட்டிற்குச் சென்று கருணாநிதியை சந்திப்பார் சிதம்பரம். தி.மு.க தலைமையோடு நல்ல நட்பிலும் இருந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவோடு அணி சேர வேண்டும் என கடைசி வரையில் முயற்சித்தார். சிதம்பரம் மீது தி.மு.கவின் தலைமை கசப்புணர்வில் இருந்ததால் அப்போது கை கூடவில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலில் அவர்தான் எல்லாவற்றையும் முன்னெடுத்தார். இந்தத் தேர்தலில் அதிகாரம் முழுக்க இளங்கோவன் வசம் வந்துவிட்டது.
'மாநிலத் தலைவரின் அதிகாரத்தின்கீழ் பணியாற்ற எனக்கு விருப்பமில்லை. குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே போன்றோரை தொகுதிப் பங்கீடு பற்றிப் பேச நியமனம் செய்யுங்கள்' என சோனியாவிடம் தெரிவித்தார் சிதம்பரம். ஆனால், ராகுல்காந்தியோ, 'குரூப் சிஸ்டம் என்ற பெயரில் யாரும் இனி செயல்படக் கூடாது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முழுக்க இளங்கோவன் தலைமையில்தான் நடக்கும். யாருக்கு சீட் கொடுக்க வேண்டும்' என்பதையே அவரே தீர்மானிப்பார் என உறுதியாகச் சொன்னதால், அதிர்ந்து போனார் சிதம்பரம். இதையடுத்து, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார்.

'தனது ஆதரவாளர்கள் ஐந்து பேருக்காவது சீட் கொடுக்க வேண்டும்' என மாநிலத் தலைமைக்கு வேண்டுகோள் வைத்தார் சிதம்பரம். அதற்கு செவிசாய்க்காமல், கராத்தே தியாகராஜன், காரைக்குடி கே.ஆர்.ராமசாமி என சிலருக்கு மட்டுமே சீட் ஒதுக்கப்பட்டது. இருப்பினும், 'தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போதாது' என அதிருப்தி தெரிவித்தார் சிதம்பரம். தொடக்கத்தில் இருந்தே பிரசாரத்திற்கும் செல்லவில்லை. இதையடுத்து, சிதம்பரத்தின் மவுனம் குறித்து கட்சியின் சீனியர்கள் ராகுல்காந்தியிடம் புகார் தெரிவித்தனர். அவர் கூப்பிட்டுப் பேசியதும், சொந்த ஊரான சிவகங்கைக்குச் சென்றவர், 'சிவகங்கை எம்.பி தொகுதிக்குட்பட்ட ஆறு தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்காக பாடுபடுங்கள்' என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
தன்னை முன்னிறுத்தாமல் கட்சித் தலைமை செயல்படுவதை அவர் விரும்பவில்லை. அதிலும், சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிலும், குஷ்புவுக்கு அடுத்த இடத்திலேயே சிதம்பரம் பெயர் இடம்பெற்றிருந்தது. 'தன்னை திட்டமிட்டு புறக்கணிக்கிறார் இளங்கோவன்' என கடுப்பில் இருக்கிறார் சிதம்பரம். மாநிலத் தலைமையின் செயல்பாட்டுக்கு எதிராக டெல்லியில் புகார் கொடுத்தும் எதுவும் எடுபடவில்லை. அதனால்தான், பிரசாரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறார்" என்றார் விரிவாக.

ஆனால், சிதம்பரம் ஆதரவாளர்களோ, " இப்படிப்பட்ட தகவல்களையும் திட்டமிட்டே பரப்புகிறார்கள். கடந்த மூன்று நாட்களுக்கு முன்புகூட சிவகங்கையில் தேர்தல் பிரசாரம் செய்தார். கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுகிறார். அவர் பெயரைக் கெடுக்கும் வகையில் இளங்கோவன் ஆதரவாளர்கள்தான் வதந்தி கிளப்புகின்றனர். டெல்லியில் இஸ்ரத் ஜகான் என்கவுண்ட்டர் வழக்கில் சிதம்பரம் பெயரை இணைத்து மத்திய பா.ஜ.க அரசு செய்தி பரப்புகிறது. 'இந்தப் பிரச்னையை நீங்களே எதிர்கொள்ளுங்கள்' என சோனியா காந்தி உறுதியாகக் கூறிவிட்டார். இந்த வழக்கிற்காகத்தான் டெல்லியில் முகாமிட்டுள்ளார் சிதம்பரம். மற்றபடி, தேர்தல் பிரசாரத்தில் இருந்து அவர் விலகவில்லை" என்றார் உறுதியாக.

நாளை தீவுத்திடலில் தி.மு.க, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பேச வருகிறார் சோனியா காந்தி. 'அந்தக் கூட்டத்திலாவது ப.சிதம்பரம் முகம் தென்படுமா?' என ஆவலோடு காத்திருக்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள்.

ஆ.விஜயானந்த் \
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval