Sunday, May 29, 2016

படித்தது எட்டாம் வகுப்பு... ஆண்டு வருமானம் 290 கோடி ! - சூப்பர் தொழிலதிபர்

'ஒவ்வொரு மனுஷனுக்கும் படிப்பு முக்கியம் , படித்தவர்களால் மட்டும்தான் வாழ்க்கையில் முன்னேற  முடியும் என்று நினைத்தால் அது தவறு '' என்கிறார் வெறும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து... இன்று ஆண்டுக்கு 290கோடி ரூபாய்க்கு மேல் பால் பொருள் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் ஈரோடு இளைஞர் சதீஷ் குமார்.

எப்படி சாத்தியமானது இது...?  அவரே சொல்கிறார் உற்சாகமாக....
''ஈரோட்டை அடுத்துள்ள தயிர்பாளையம்தான் என்னோட சொந்த ஊர். பரம்பரையாகவே விவசாயக் குடும்பம்தான். விவசாயத்துடன் சேர்த்து  பால் பண்ணை ஒன்றை சிறிய அளவில் நடத்தி வந்தார் அப்பா.
பண்ணையில் உற்பத்தியாகும் பால் முழுவதையும் பெங்களூருவுக்கு அனுப்பி வந்தார்.
அதில் பெரிய அளவு லாபம் கிடைக்கவில்லை. மேலும்,  நாள் தோறும் 1000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. அதனால் அதை  விடப் போவதாக அப்பா சொல்லிக்கொண்டு இருந்தார். பள்ளிக்கூடம் போய்கொண்டிருந்த எனக்கு எட்டாம் வகுப்புக்கு மேல்  படிக்க  விருப்பம் இல்லை. விவசாயத்தின் மீதும் பெரிய ஆர்வமில்லை. வேறு ஏதாவது தொழில் செய்து முன்னேற வேண்டும் என்கிற பொறி மட்டும் மனதில்  இருந்தது.

சரி... அப்பா செய்யும் பால் தொழிலை தொடரலாம் என்று முடிவு செய்தேன். அதோடு நிற்காமல் எங்க பண்ணையில் இருந்து அனுப்பும் பாலை கொள்முதல் செய்ய வரும் பெங்களூரு வியாபாரியை போய் பார்த்தேன். அங்கு அவர், நாங்க அனுப்பும் பாலை நேரடியாக விற்பனை செய்யாமல், அதை மதிப்புக்கூட்டிய பால் பொருட்களாக மாற்றி விற்பனை செய்து வருவதை கண்டேன்.

அதில் குறிப்பாக, 'பனீர்' (Paneer ) எனப்படும் பாலாடைக்கட்டி தயாரித்து ஹோட்டல்களுக்கு விற்பனை செய்து  நல்ல வருமானம் பார்த்து வருகிறார் என்பதை அறிந்து கொண்டேன். நாமும் அது போல் பனீர் தயாரித்து விற்பனை செய்தால் நாள் தோறும்  ஏற்படும் 1000 ரூபாய் இழப்பை தவிர்த்து,  கூடுதல் லாபம் பார்க்க முடியும் என முடிவு செய்து, அந்த பெங்களூரு வியாபாரியிடம் பனீர் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை சொல்லித்தருமாறு கேட்டேன்.

அவர் அதை கற்றுத்தர மறுத்து விட்டார். அதுக்காக நான் சோர்ந்து போகவில்லை.
எப்படியாவது பனீர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கற்றாக வேண்டும் என்கிற ஆர்வம்தான் ஏற்பட்டது. பல இடங்களில் அலைந்து திரிந்து பனீர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஓரளவு கற்றுக்கொண்டேன். காய்ச்சிய  பாலில் வினிகர் சேர்த்து பனீர் தயாரிக்கலாம் என்கிற அடிப்படை தகவலை தெரிந்து கொண்டேன்.
அதை உடனே நடைமுறைப்படுத்தும் வேலையை தொடங்கினேன். அப்பா வீட்டில் இல்லாதபோது அந்த வேலையை செய்தேன். காய்ச்சிய பால் 300 லிட்டரை பனீர் தயாரிக்க பயன்படுத்தினேன். பனீருக்கு எப்படி வடிவம் கொடுப்பது என்பது தெரியாமல் எனக்கு தெரிந்த அளவில் அதை தயாரித்து முடித்தேன்.
இதை வந்து பார்த்த அப்பா, '300 லிட்டர் பால் வீணாயிடும் போல் இருக்கு' என்றார்.

'இல்லை...இது முதல் முயற்சிதான் தொடர்ந்து செய்யும் அடுத்த முயற்சிகளில் ஜெயித்து காட்டுகிறேன்'  என்று அவருக்கு நம்பிக்கை கொடுத்தேன். சரி சரி என்று சொல்லிப்போனார். நானாக முயன்று தயாரித்த பனீரை, ஏற்கனவே அறிமுகமான பெங்களூரு ஹோட்டல்கள் சிலவற்றுக்கு அனுப்பினேன். அதை வாங்கி விற்பனை செய்த ஹோட்டல்காரர்களும் சில ஆலோசனை சொன்னார்கள். அதையும் மேம்படுத்தி பனீர் தயாரித்து அனுப்பினேன். வாங்கி சாப்பிட்ட எல்லோருக்கும் டேஸ்ட் பிடித்துப்போனது. படிப்படியாக ஆர்டர்கள் வரத்தொடங்கின.

நிறைய ஆர்டர்கள் குவிந்ததால், எங்களின் சொந்தப் பண்ணையில் உற்பத்தியாகும் பால் போதாமல், வெளியில் இருந்தும் பால் கொள்முதல் செய்யத் தொடங்கினோம். பெரிய பெரிய ஹோட்டல்களுக்கு மட்டுமே பனீர் சப்ளை பண்ணிவந்த நாங்கள், எல்லா மக்களுக்கும் பனீர் போய் சேரவேண்டும் என்கிற நோக்கில், சில்லரை விற்பனையிலும் கால் பதிக்க முடிவு செய்தோம்.
அப்படி சில்லரை வியாபாரத்தில் இறங்கும்போது,  அதுக்கு ஒரு 'பிராண்ட் நேம்' வைத்து மார்க்கெட் செய்தால், பிசினஸ் ஓஹோனு போகும் என எண்ணி, பால் சம்பந்தப்பட்ட பெயர் ஒன்றை தேடும் படலத்தில் இறங்கினேன். அப்படி கூகுளில் தேடும் பொழுது கிடைத்த பெயர்தான் 'மில்கி மிஸ்ட்'. அந்த பெயரே நன்றாக இருந்ததால் அதையே பிராண்ட் நேமாக வைத்து சில்லரை விற்பனையை தொடங்கினோம். சில வருடங்கள் கழித்து சில்லரை விற்பனையை விரிவுபடுத்தும் விதமாக, 10 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் பெற்று மெஷின் வைத்து, பனீர் தயாரிக்க ஆரம்பித்தோம்.

தொடக்கத்தில் நன்றாக போய்க்கொண்டிருந்த வியாபாரத்தில், ஒரு கட்டத்தில் தேக்கம் ஏற்பட்டது. நண்பர் ஒருவரிடம் இது குறித்துபேசியபோது, 'விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்றால் விளம்பரம் கொடுப்பது அவசியம்' என்று 'ஐடியா' கொடுத்தார். அதே சமயம்,  ' நீங்க கடைக்கு கொடுக்கும் பனீர் எப்போதும் ஜில்லுனு ஃபிரஷா இருக்கவேண்டும். அதுக்கு முக்கியமான சில்லரை வியாபாரிகளுக்கு  மினி ஃபிரிட்ஜ் வாங்கி கொடுங்கள்' என்றும் மேல் ஆலோசனை சொன்னார்.

நண்பர் சொன்ன ஆலோசனைப்படி விளம்பரமும் கொடுத்தோம். மினி ஃபிரிட்ஜும் கொடுத்தோம்.
ஆனாலும், பனீர் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை. காரணத்தை அறிய,  கடை கடையாய் போய் ஆய்வு செய்தோம். அப்படி செய்ததில் ஒரு உண்மை புலப்பட்டது.
நாங்கள் கொடுத்த 'ஃபிரிட்ஜ்' அலமாரியில் பெரும்பகுதி இடத்தை வேறு உணவுப்பொருட்கள் அடைத்துக்கொண்டிருந்தன. மீதமுள்ள சிறிய இடத்தில் ஒரு மூலையில் மட்டும் எங்கள் தயாரிப்பான பனீர் வைக்கப்பட்டிருந்தது.

அப்படி செய்ய என்ன காரணம் என்று சில்லரை வியாபாரிகள் சிலரிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்ன பதில் எங்களை வேறு கோணத்தில் யோசிக்கவைத்தது.'பனீர்' என்பது அன்றாடம் தேவைப்படும் அத்யாவசிய உணவுப்பொருள்  கிடையாது. அதனால்தான் வேகமான விற்பனை நடக்கவில்லை என்றார்கள்.

சரி, அத்யாவசிய பால்பொருட்கள் என்ன என்பதை யோசித்தபோது, முதலில் வந்து நின்றது தயிர்.
மேம்படுத்தப்பட்ட தயிர்  விற்பனையில் இறங்க முடிவெடுத்தோம். அதன் மூலப்பொருளான பாலை,  பால் வியாபாரிகளிடம் லிட்டர் கணக்கில் கொள்முதல் செய்யத் தொடங்கினோம். ஆனால், கொஞ்ச நாளில் ஒன்றை புரிந்துகொண்டோம். பால் வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் சுத்தமானதாக இல்லை. எனவே,  தயிர் உற்பத்தி செய்ய தேவையான பாலை, விவசாயிகளிடம் இருந்து  நேரடியாக கொள்முதல் செய்ய முடிவு செய்தோம். அதற்கு எங்களுக்கு தோதான கிராமங்கள் தோறும் பால் கொள்முதல் மையங்களை திறந்தோம். கொள்முதல் செய்யப்படும் பால், பதப்படுத்தப்படவேண்டியது முக்கியம். அதற்கு என  ஐந்து பால்குளிரூட்டு நிலையங்களை தகுந்த இடங்களில் அமைத்தோம்.
தமிழ்நாடு முழுவதும் 35,000 கறவையாளர்கள் எங்கள் நிறுவனத்துடன் இணைந்துள்ளார்கள். தயிர் போக பால் பொருளான பட்டர் தயாரிப்பிலும் இறங்கினோம். அதைத்தொடர்ந்து 110 வகையான பால் பொருட்களை தயாரிக்க தொடங்கினோம். வியாபாரம் சூடு பிடித்தது.
இப்படியான சூழலில் இன்னொரு சவாலையும் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எங்கள் நிறுவனத்தின் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து சில்லரை விற்பனையாளர்களுக்கு வேன் மூலம் கொண்டுசெல்லப்படும் பால் பொருட்கள், விரைவில் கெட்டுப்போவதாக கவலை தெரிவித்தார்கள் வியாபாரிகள் பலரும்.

அதனால், மொத்த விற்பனையாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட வாகனங்கள் கொடுத்தோம். தயாரிக்கும் அதே தரமுடன் பால் பொருட்கள், சில்லரை வியாபாரிகளை சென்றடைய ஏதுவாக அது அமைந்தது. நாளுக்குநாள் தொழில் நுட்பம் வளர்ந்து வருகிறது. எல்லாத்தொழிலிலும் புதுப்புது டெக்னாலஜி புகுத்தப்பட்டு வருகிறது. அதை உடனுக்கு உடன்  தொழிற்சாலைக்குள் கொண்டுவந்தால் மட்டுமே நாம் களத்தில் நிற்கமுடியும். தயாரிக்கும் உணவுப்பொருட்களை, சுத்தமாகவும் சுகாதாரமாகவும் கொடுக்கமுடியும். அதே நேரம் தரம்தான் மிகமுக்கியம். அதை முதல் நோக்கமாக வைத்து செயல்படுவதால்தான் தொடர் வளர்ச்சியில் உள்ளோம்.
இன்றைய தேதியில் எங்கள் தொழிற்சாலையில் 450 பேர் வேலை பார்க்கிறார்கள். 2007-08ம் ஆண்டுகளில் 14 கோடியாக இருந்த எங்கள் பால் பொருட்கள் வர்த்தகம், இன்றைய தேதியில் 290 கோடிரூபாய் என்று உயர்ந்திருக்கிறது. இந்த வெற்றிக்கு தொழில் மேல் வைத்திருக்கும் நேசம்தான் காரணம். லாபம் வருகிறது என்பதால் வேறு தொழில்களில் இறங்கலாம் என்கிற எண்ணம் என்னிடம் துளியும் இல்லை. வெற்றிகரமாக செய்துவரும் இந்த தொழிலை, எப்படி மேம்படுத்துவது என்கிற யோசனைதான் எனக்கு உள்ளது.

மனிதனுக்கு கல்வி என்பது அவசியம்தான். அது நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள பேருதவி புரிகிறது. அதற்கு மேலாக நாம் பெறும் அனுபவக் கல்விதான் நம்மை பக்குவப்படுத்தி  நம்மை மேம்படுத்துகிறது. குறைவான படிப்பு உள்ளவர்கள் முன்னேற முடியாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.  ஏனெனில் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த என்னிடம் இன்று நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் பணியாற்றுகிறார்கள். மொத்த சிந்தனையும் நாம் செய்கின்ற தொழில் மீது இருக்கவேண்டும். அதில் புதிய புதிய யுக்திகளை கையாள வேண்டும். அத்துடன் செய்யும் தொழிலில் ஈடுபாடும், பொறுமையும், மனம் தளராமையும் இருந்தால் நிச்சயம் சிகரங்களை தொடமுடியும். அதுக்கு நானே நல்லதோர்  உதாரணம்'' என்றார் பொங்கும் உற்சாகத்துடன்.
courtesy;vikadan
-ஜி.பழனிச்சாமி
-படங்கள்: ரமேஷ் கந்தசாமி

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval