Tuesday, May 17, 2016

தலைமறைவான எம்.எல்.சி. மனோரமா தேவி நீதிமன்றத்தில் சரண்!

பாட்னா: பீகாரில் தலைமறைவான ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.சி. மனோரமா தேவி கயா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 

பீகாரில் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.சி. மனோரமா தேவி தன்னுடைய வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்திருந்ததாக புகார் எழுந்தது.
இதை தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் மற்றும் கலால் துறையினர் முயற்சித்தனர். ஆனால், இதனை தெரிந்துகொண்ட மனோரமா தேவி உடனடியாக வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவானார். அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மனோரமா தேவியின் வீட்டில் இருந்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தயாரிப்பு மதுபானங்கள் சுமார் 6 பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த 10-ம் தேதி பீகார் சட்டசபையில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.மேலும், பீகார் மாநிலத்தின் புதிய கலால் சட்டத்தின்படி சட்டவிரோதமாக வீட்டில் மதுபானம் வைத்திருந்தால், சட்டத்தை மீறியதாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மனோரமா தேவிக்கு விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், தலைமறைவு குற்றவாளியான மனோரமா தேவியை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து, பீகார் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனோரமா தேவி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது வருகின்ற 19-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, இன்று அதிகாலை மனோரமா தேவி கயா நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதையடுத்து மனோரமா தேவியை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில், சமீபத்தில் தனது காரை முந்தி சென்ற இளைஞரை ஆத்திரத்தில் சுட்டு கொன்ற ராக்கி யாதவின் தாயார்தான் மனோரமா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.
courtesy;vikdan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval