திருவள்ளூர் நகரம். கடும் வெயில் சுடுகிறது. தரைப் பாலம் அடியே கூவம் ஆற்றிலும் வெயில் ஊர்கிறது. நகரைத் தாண்டி 30 நிமிடங்கள் பயணம். ஒரு திருப்பத்தில் திரும்பியதும் பசுமையான வயல்கள். இடையிடையே கால்வாய்கள். பசுமை போர்த்திருக்கிறது பூமி. இனிதே வரவேற்றது அதிகத்தூர் ஊராட்சி.
ஊருக்குள் நுழைந்ததும் காட்சிகள் மாறுகின்றன. நவீன பேட்டரி வாகனத்தில் சீருடைப் பணியாளர்கள் குப்பை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் தெருக்களில் பிளீச்சிங் பவுடர் தெளித்துக்கொண்டிருந் தார்கள். படுசுத்தமாக இருக்கின்றன தெருக் கள். தெருக்கள்தோறும் காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்களின் பொன்மொழிகள் எழுதப்பட் டிருக்கின்றன. பெரும்பாலும் காரை வீடுகள். கொஞ்சம் ஓட்டு வீடுகள். தேடியும் இல்லை குடிசைகள். கூடவே குளுமை. சுட்டெரித்த வெயிலை ஆச்சர்யமாக இங்கே காணோம்.
சிரிப்புடன் வரவேற்கிறார் பஞ்சாயத்துத் தலைவி சுமதி. வீட்டு முகப்பில் தந்தை பெரியார், அம்பேத்கர், ஜோதிபா பூலே, கன்சிராம், நம்மாழ்வார், காரல் மார்ஸ், ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ், பிடல் காஸ்ட்ரோ படங்கள். வரவேற்பறையில் நூலகம். சிறுவர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். தேநீருக்குப் பிறகு ஊருக்குள் அழைத்துச் சென்றார். சுமதியிடம் பெண்கள் இயல்பாக வந்துப் பேசுகிறார்கள். எதிர்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவரிடம், ‘‘லட்சுமி, சத்து மாத்திரை சாப்பிட்டீயா?’’ என்கிறார். சுமார் அரை மணி நேரம் நடந்திருப்போம். ஒதுக்குப்புறமான மேட்டுப் பகுதி அது. அங்கே பாருங்கள் என்றார் சுமதி. பார்த்தோம். பிரமித்தோம். சிறியதும் பெரியதுமாக குளங்கள். அதன் நீர்பரப்புகள் சூரிய வெளிச்சம்பட்டு மின்னின. ஊரின் பசுமைக்கும் குளுமைக்கும் காரணம் புரிந்தது. குளத்தங்கரை ஒன்றில் அமர்ந்தோம்.
“10 வருஷங்களுக்கு முந்தி இது வறண்ட பூமி. கூவத்துல எப்பயாச்சும் வெள்ளம் வரும். ஊரே அடிச்சிட்டுப் போயிடும். தலித் மக்கள் கணிசமாக வசிக்கிறாங்க. கிணறு வெட்டக் கூட அவங்கள்ட்ட காசு கிடையாது. குடி தண்ணிக்கும் அல்லாடணும். வெவசாயம் இல்லாததால எல்லோரும் சென்னைக்கும் ஆந்திராவுக்கும் கூலி வேலைக்குப் போனாங்க. அப்பதான் உள்ளாட்சித் தேர்தல் வந்துச்சு. இந்தப் பஞ்சாயத்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. என் கணவர் சிதம்பரநாதன் என்னை போட்டியிட முடியுமான்னு கேட்டார். நான் அவர்கிட்ட, ‘போட்டியிடறேன். ஆனா, ஒரு கண்டிஷன். எக்காரணம் கொண்டும் நிர்வாகத்துல நீங்க தலையிடக் கூடாது’ன்னேன். அவர் ஏற்கெனவே பஞ்சாயத்துத் தலைவரா இருந்தவர்தான். சிரிச்சிட்டே, ‘அம்மா தாயீ, ரொம்ப சந்தோஷம். ஆளவிடு நான் ரெஸ்ட் எடுக்கிறேன்’னுட்டாரு.
2006-ல் நான் பஞ்சாயத்து தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். முதலில் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண நினைச்சேன். கூவம் ஆத்துல அதிகத்தூருக்கும் ஏகாத்தூருக்கும் இடையே தடுப்பணை கட்ட திட்டமிட்டோம். அங்கே தடுப்பணை கட்டினால் ஒரு வருஷம் மழைக்கே அஞ்சு வருஷத்துக்கு தண்ணி தேங்கி நிற்கும். கிராம சபையில் தீர்மானம் நிறைவேத்தி மேலிடத்துக்கு அனுப்பினோம். அதிகாரிகள் வந்தாங்க, போனாங்க. வேலைக்கு ஆகலை. இன்னொரு பக்கம் தண்ணீர் பிரச்சினை கடுமையானது. ஊரே வறண்டுப்போனது.
அப்போதான் ஒரு பத்திரிகையில அன்னா ஹசாரே பத்தி படிச்சேன். அவரோட கிராமத்துல ஏராளமான குளங்களை உருவாக்கியிருந்தது ஆச்சர்யமாக இருந்துச்சு. அதிலேயும் அவர் அதை எல்லாத்தையும் கிராம சபை மூலம் செஞ்சிருந்தார். சரி, இந்த அரசையும் அதிகாரிகளையும் நம்பினா ஆகாதுன்னு நேரா மகாராஷ்டிரம் கிளம்பிட்டேன். ராலேகன் சித்தி கிராமத்தில் அன்னா ஹசாரேவைப் பார்த்து விஷயத்தை சொன்னேன். திருவள்ளூர் மாவட்டத்தைப் பத்திக் கேட்டவரு, ‘வறண்ட மண்ணுலயே நாங்க 80 குளங்களை உருவாக்கியிருக்கோம். கூவம் ஓடும் உங்க மண்ணுல இன்னும் சிறப்பாக செய்யலாம்’னு சொன்னார். செலவே இல்லாம சிக்கனமாக நீர் நிலைகளை எப்படி அமைக்கிறதுன்னு சொல்லிக் கொடுத்தார். கிராமப் பஞ்சாயத்தின் அதிகாரங்களை எடுத்துச் சொன்னாரு. ஒரு வாரம் அங்கே தங்கி அவர்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன்.
அவர் உருவாக்கிய குளங்களைப் போய் பார்த்தேன். மலைப் பாங்கான நிலத்துல மண், கருங்கற்களை அடுக்கி இயற்கையான கரைகளை எழுப்பியிருந்தாங்க. மழைக் காலங்கள்ல அங்கு சேகரமாகும் தண்ணீர், கோடைக் காலத்திலும் தேங்கி நின்னுச்சு. கற்களால கட்டப்பட்ட கரைகளில் கற்களின் இடுக்கில் தண்ணீர் வழிந்து அடுத்தடுத்த குளங்களை நிரப்பியது. கையோடு ராஜஸ்தான் மாநிலம், ஆழ்வருக்குச் சென்று ராஜேந்திர சிங்கை பார்த்தோம். அவர் புனரமைத்த நீர்நிலைகளும் ஆறுகளும் எங்களுக்கு நிறைய உற்சாகத்தை கொடுத்திச்சு. அவரும் நிறைய ஆலோசனைகளை சொன்னாரு.
எங்க கிராமத்துக்கு வந்தேன். ஊருக்கு ஒதுக்குப்புறமா மேடாக பரந்துவிரிந்திருக்கும் இந்தப் பகுதி சும்மா கிடந்துச்சு. இங்கே மேடாக பகுதியில் இருந்து சரிவான நிலத்தை நோக்கி ஆங்காங்கே குளங்களை வெட்டி, அப்படியே ஊர் வரைக்கும் தண்ணீரை எடுத்துச் செல்லலாம்கிற திட்டம் தோணுனது. மறுநாளே கிராம சபையைக் கூட்டி விஷயத்தை சொன்னேன். லட்சக்கணக்கில் நிதி வேணும்னாங்க. தேவையில்ல, இயற்கையான முறையில கரைகளை அமைக்கலாம்னு சொன்னேன். அரசாங்க அனுமதி வாங்கணும். வீண் அலைச்சல்னாங்க. கிராம சபை தீர்மானமே போதுமானதுன்னு எடுத்துச் சொன்னேன். மக்களுக்கு நம்பிக்கை வரலை. அவங்ககிட்ட கிராம சபைக்கு இருக்கிற அதிகாரங்களை எடுத்துச் சொல்லி புரியவைத்தேன்.
பணம் இல்லைனாலும் பரவாயில்லை; வேலைக்கு ஆட்கள் வேணுமேன்னு யோசிச்சப்ப ‘100 நாள் வேலை திட்டம்’ ஞாபகத்துக்கு வந்துச்சு. அத்தனை வருஷமா எங்க கிராமத்தில் அந்தத் திட்டத்துல ஒரு வேலைகூட உருப்படியா நடந்ததில்லை. அந்தத் திட்டத்தின் கீழ் வேலையைத் தொடங்கினோம். சில இடங்களில் இயற்கையான கரைகளை அமைச்சோம். சில இடங்களில் பள்ளங்களை வெட்டி குளங்களை ஏற்படுத்தினோம். மலைப் பாங்கான பகுதியில் கிடைத்த கருங்கல்லு, வெங்குச்சான் கல்லுகளை அடுக்கி கற்சுவர்களைக் கட்டினோம். ரெண்டு வருஷத்துல மூணு பெரிய குளங்களை உருவாக்கிட்டோம். மழைக் காலம் வந்தது. ஒருநாள் ராத்திரி பெரிய மழை கொட்டுனது. வழக்கமா அன்னைக்கு ஊருக்குள்ள வெள்ளம் புகுந்திடும். ஆனா, அன்னைக்கு வெள்ளம் வரலை. ஊரே திரண்டுபோய் பார்த்தோம். குளங்கள் அத்தனையும் நிரம்பி தளும்பியிருந்துச்சு.
அடுத்தடுத்த வருஷங்களில் ஊருக்குள்ளேயும் குளங்களை வெட்டினோம். எல்லா குளங்களும் நிரம்பி வழிஞ்சுது. மொத்தம் எட்டு குளங்கள் அமைச்சிருக்கோம். ஊருக்குள் ஆக்கிரமிப்பில் இருந்த பெரிய குளம் ஒண்ணையும் மீட்டு தூர் வாரினோம். அதிலேயும் தண்ணீர் நிரம்பி வழியுது. இப்பல் லாம் எங்க ஊருல கொஞ்சம் தோண்டினாலே தண்ணீர் பொத்துக்குது. 40-க்கும் மேற்பட்ட போர்வெல்களைப் போட்டிருக்கோம். நிலத்தடி தண்ணியை சுத்திகரிச்சு, ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுக்கிறோம். எங்க ஊருல குழாயடி சண்டை எல்லாம் பார்க்க முடியாது. பொதுக் குழாயை எப்போ திறந்தாலும் தண்ணி பொத்துக்கிட்டுக் கொட்டும். விவசாய மண்ணுல கிணறுகள் எல்லாம் நிரம்பி வழியுது. வறண்டு கிடந்த நிலங்கள்ல நெல்லும் கரும்பும் விளையுது. தனியார் ஆக்கிரமிப்பு நிலங்களையும் புறம்போக்கு நிலங்களையும் பஞ்சாயத்து பேருக்கு மாத்தி மாந்தோப்புகளை உருவாக்கியிருக்கோம்” என்கிறார் பெருமிதமாக!
நீர் மேலாண்மை மட்டுமா? சமூக சீர்த்திருத்தங்களில் அதிகத்தூர் செய்திருக்கும் புரட்சி இந்த தேசத்துக்கே முன்னுதாரணமானது!
- பயணம் தொடரும்...
courtesy;The Hindu
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval