மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாட்டின் மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம், வெறும் 65.789 கோடி ரூபாய்க்கு மட்டும் விற்பனையாகியிருப்பது பலத்த விமர்சனங்களை எழுப்பியுள்ளது. 2,345.55 மெகா ஹெர்ட்ஸ் மொபைல் அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த 1-ம் தேதி தொடங்கி 6-ம் தேதி வரை 31 ரவுண்டுகளில் நடந்தது. ‘‘இந்த ஏலத்தின் மூலம் ரூ.5.6 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும். இவற்றில், 4ஜி சேவைக்கு பயன்படுத்தப்படும் 700 மெகா ஹெர்ட்ஸ் மட்டும் ரூ.4 லட்சம் கோடிக்கு ஏலம் போகும்’’ என மத்திய அரசு, கலர்கலர் ஜிகினாக்களைக் காட்டியிருந்தது. ஆனால், ஏலத்தின் முடிவுகளோ தலைகீழாக இருந்தன.
2,345.55 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் 965 மெகா ஹெர்ட்ஸ் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 700 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஏலத்தில் எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லையாம். அதாவது, 60 சதவிகித அலைக்கற்றைகளை யாரும் ஏலத்தில் எடுக்காத நிலையில், மத்திய அரசு எதிர்பார்த்த தொகை சுருங்கிசுருங்கிக் கடைசியில் ரூ.65.789 கோடிக்கு மட்டுமே அலைக்கற்றை விற்பனையாகியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன், ஐடியா செல்லுலார், டாடா டெலிசர்வீசஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. நடந்து முடிந்த இந்த 4 ஜி ஏலத்தில் வோடஃபோன் நிறுவனம் அதிகபட்சமாக ரூ.20,000 கோடிக்கும், ஏர்டெல் நிறுவனம் ரூ.14,244 கோடிக்கும், புதிய வரவான ரிலையன்ஸ் ஜியோ ரூ.13,672 கோடிக்கும், ஐடியா நிறுவனம் ரூ.12,798 கோடிக்கும், டாடா டெலிகாம் ரூ.4,400 கோடிக்கும், ஏர்செல் நிறுவனம் ரூ.1,100 கோடிக்கும் அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ளன.
2014-ல் ரூ.2,90,000 கோடியாக இருந்த தொலைத்தொடர்புத் துறை கடன், 2015-ல் ரூ.3,80,000 கோடியாக அதிகரித்திருக்கிறது. கடும் கடனில் சிக்கித்தவிக்கும் தொலைத்தொடர்புத் துறை, அதிக வருவாயை ஈட்டும் முடிவுடன் முன் எச்சரிக்கையாகக் குறைந்த கட்டணத்திலேயே அலைக்கற்றைகளை ஏலத்தில்விட்டது. அத்துடன் உலகின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு சந்தையான இங்கு, குறைந்த கட்டணத்தில் அலைக்கற்றைகளை ஏலத்தில் விட்டால் மொபைல் சேவை தரத்தை மேம்படும் எனவும் தொலைத்தொடர்புத் துறை நம்பியிருந்தது. ஆனால், தொலைத்தொடர்புத் துறை நம்பிக்கையில் பெரும் இடி விழுந்திருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த 3 ஜி அலைக்கற்றை ஏலம்கூட ரூ.1.1 லடசம் கோடிக்கு ஏலம் போனபோது, இந்த ஆண்டு குறைந்தது ஏன்? என சமூக வலைதளங்களில் சூடான விவாதம் எழுந்திருக்கிறது.
இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி, ‘‘மக்களுக்குக் குறைந்த விலையில் சேவைகளைத் தரவேண்டும் என காங்கிரஸ் அரசு முடிவு செய்ததால், குறைந்த விலைக்கு 2ஜி அலைக்கற்றைகளை விற்றது. இதனால் மத்திய அரசுக்கு ரூ.1,76,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக இருந்த வினோத் ராய் அறிக்கையில் கூறியிருந்தார். அதன்பின் பாராளுமன்ற நிலைக்குழுவில் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, ரூ.1,76,000 கோடி இல்லை... ரூ.30,000 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என வினோத் ராய் பல்டி அடித்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் இவ்வளவு கோடிக்கு விற்றிருக்க வேண்டும்... ஆனால், குறைந்த விலைக்கு ஏலம் போனதால் ரூ.1,76,000 கோடி ஊழல் நடந்துள்ளது என தொடர்ந்து குற்றம்சாட்டினார்கள்.
இதே கூற்றுப்படி தற்போது 4ஜி ஏலத்தின் மூலம் ரூ.5.6 லட்சம் கோடி வருமானம் வரும் என பி.ஜே.பி அரசு கூறியிருந்தது. ஆனால், வந்ததோ ரூ.65.789 கோடி மட்டுமே. 2ஜி ஊழல் என்றால், இதுவும் ஊழல்தான். அப்படி என்றால், 2ஜியைவிட இரண்டு மடங்கு ஊழலை பி.ஜே.பி செய்திருக்கிறது என்றுதானே அர்த்தம். ஆனால், 4ஜி ஊழலைப் பற்றி யாரும் பேசவில்லையே ஏன்? ஊழலுக்கு எதிராகப் போராடியவர்களால் ரூ.1,76,000 கோடி நஷ்டத்தையே தாங்கிக்கொள்ள முடியாதபோது, தற்போது நடந்துள்ள மாபெரும் ஊழலை எப்படி தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரிவில்லை’’ எனக் கொதித்தார்.
பி.ஜே.பியை சேர்ந்த வானதி ஶ்ரீனிவாசன்,'' 4ஜி ஏலத்தில் மத்திய அரசு எதிர்பாத்த தொகை கிடைக்கவில்லை என்பது உண்மை தான். இந்த நிலையில், இழந்த வருமானத்தை பெருக்குவதற்கான வழிகளை மத்திய அரசு கண்டுபிடித்து, நிச்சயம் வருமானத்தை ஈட்டும். அலக்கற்றைகளை யாரும் வாங்க வரவில்லை என கூறிக்கொண்டு காங்கிரஸ் செய்தது போல, வேண்டியவர்களுக்கும், லஞ்சம் தருபவர்களுக்கும் அலைக்கற்றைகளை விற்கும் வேலையை பி.ஜே.பி அரசு ஒருபோதும் செய்யாது. 2ஜி ஊழலையும், தற்போது நடந்துள்ள ஏலத்தையும் ஒப்பிடுவது அபத்தமானது'' என்றார்.
மக்களுக்கு உண்மையை சொல்லவேண்டியது மத்திய அரசின் கடமை.
- ஆ.நந்தகுமார்
courtesy;vikdan
courtesy;vikdan
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval