Sunday, October 16, 2016

இரண்டாம் உலகப்போரில் பத்தாயிரம் பேரைக் காப்பாற்றிய சுரங்கம் இதுதான்!


பகல் தான்... ஆனாலும், அந்த சுரங்கத்தினுள் ஒரு அடர்த்தியான இருள் சூழ்ந்திருக்கிறது. குறுகலான வழி. மெல்லிய பேட்டரி விளக்கு வெளிச்சத்தில் நடந்து, சில படிகளைக் கடந்தால் அந்த அகண்ட இடம் வருகிறது. இப்பொழுது விளக்குகளின் உதவியால் வெளிச்சம் கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கிறது. துருப்பிடித்து, இரும்பு தோல்கள் உரிந்த நிலையில் நிறைய கார்கள். சில நீளமாகவும், சிலவை சிறியதாகவும் இருக்கின்றன. தார் சாலைகளையும், மண் மேடுகளையும், கடற்கரைகளையும் பார்த்து ஆவேசமாய், சமயங்களில் அமைதியாய் ஓடிக் களைத்த ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குள். தோலுரிந்து வரலாற்றால் தூக்கி எறியப்பட்ட ஒரு நீல ஸ்கூட்டரின் பக்கவாட்டில்  சிகப்பு வண்ண சுருள் முடி கொண்ட ஒரு பெண்ணின் ஸ்டிக்கர். அவரின் கனவு நாயகியாக இருந்திருக்கக் கூடும். 
இன்னும்... அழுக்கடைந்த அடுப்புகள், கருப்படைந்த பானைகள், உருக்குலைந்த உணவுக் கோப்பைகள், நசுங்கி, நைந்து போயிருக்கும் குழந்தைகளின் குதூகல நடை வண்டிகள் என திரும்பும் திசையெல்லாம் வரலாறு துப்பி எறிந்த மிச்சங்கள். இது இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரின்  " கேலெரியா போர்பொனிகா" (GALLERIA BORBONICA). 
 உலக வரலாற்றின் பல முக்கிய ஆதாரங்களைக் கொண்ட பழைய "பாம்பெய்" ( POMPEII)  தான் இன்றைய "நேப்பிள்ஸ்" நகரம் ... மண் தோண்டினால் பொன் கிடைக்கும் பூமி. இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் பல தேவாலயங்கள் குண்டுத் தாக்குதல்களுக்கு பலியான போது, ஒன்று மட்டும் உறுதியாக நின்றது. போர் முடிந்த பின்பு, அதை ஆராய்ந்த போது, அதற்கடியில் ஒரு நகரமே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி, நேப்பிள்ஸில் வீடு கட்ட மண் தோண்டினால் கூட அங்கு ஒரு பொக்கிஷம் கிடைக்கும் அளவிற்கு தன்னுள் வரலாறுகளைப் புதைத்து வைத்துள்ளது. 
1853யில், இரண்டாம்  ஃபெர்டினான்ட் போர்பன் (FERDINAND BOURBON - 2 ) போர் சமயங்களில் கோட்டையில் இருந்து தப்பிக்க ஒரு சுரங்கத்தைக் கட்ட ஆரம்பித்தான். ஆனால், அதை கட்டி முடிப்பதற்குள் அவனின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.  சில காலம் நீர் வழித்தடமாக உபயோகப்படுத்தப்பட்டது. இந்த சுரங்கத்தின் ஒரு பகுதியை 2005யில் கண்டுபிடித்து 7 ஆண்டுகளாக சுத்தம் செய்து கொண்டிருந்தனர். 
 மேற்கூறிய செய்தியை, 2012 ஆம் ஆண்டில் படித்த தொனினோ பெர்சிகோ (TONINO PERSICO) என்ற 90 வயது முதியவருக்கு திடீரென ஒரு ஞாபகம் வந்தது. இரண்டாம் உலகப் போரின் போது, வான்வழித் தாக்குதலிலிருந்து தப்ப ஒரு சுரங்கத்தில் தான் இருந்தது ஞாபகம் வந்தது. அது குறித்த தகவல்களை சுரங்க ஆராய்ச்சியளர்களிடம் கூறுகிறார். அவர்களும் விரைவிலேயே அந்த இடத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். அதில் அவர்கள் கண்ட விஷயங்கள் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. 
1930 களின் ஆரம்பத்தில் வண்டிகள் நிறுத்தும் இடமாக உபயோகப்படுத்தப்பட்ட இந்த சுரங்கம், இரண்டாம் உலகப் போரின் போது மக்களுக்கான பதுங்கும் இடமாக இருந்துள்ளது. கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு பதுங்கியிருந்திருக்கின்றனர். மூன்று ஆண்டுகள் சுத்தம் செய்த பிறகு சில மாதங்களுக்கு முன்பு இது பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. 
" தாக்குதல் முடிந்த பின்னர் மேல் வந்து பார்ப்போம்... பலரின் வீடுகள் தரைமட்டமாகியிருக்கும். அப்படி வீடிழந்தவர்கள் எல்லோரும் நிரந்தரமாக இந்த சுரங்கத்தில் தான் தங்கியிருப்போம். அதிகப்படியான மருத்துவ உபகரணங்கள் இல்லாவிட்டாலும் கூட, எங்களில் இருக்கும் சில மருத்துவர்கள் மருத்துவம் பார்ப்பார்கள். கழிவறை இருந்தது. கணவன் போரில் ஈடுபட்டிருப்பது குறித்து பெண்கள் வருதத்தோடு பேசிக் கொண்டிருப்பார்கள், குழந்தைகளான நாங்கள் ஒரு பக்கம் விளையாடிக் கொண்டிருப்போம்... சமயங்களில் அழகான பல பாடல்களையும் பாடி மகிழ்வோம்." என்று தன் ஞாபகங்களை தட்டி எழுப்புகிறார் தொனினோ பெர்சிகோ . 
" போர் நடக்கும் போது இந்த சுரங்கத்தில் இருந்து மூன்று முறை சங்கு ஊதுவார்கள். அப்படியென்றால், எதிரிப் படை இன்னும் 15 நிமிடங்களில் தாக்குதலைத் தொடங்கும் என்று அர்த்தம். அனைவரும் இதனுள் ஓடிவருவோம்... இன்னும் நினைவிருக்கிறது... அவள் பெயர் "இதினா" ( EDINA )... ரொம்ப அழகாக இருப்பாள். கருப்பு முடி, பச்சைக் கண்கள்... ஒருமுறை இப்படி அவசரமாக ஓடிவரும் போது கூட்டத்தின் கால்களில் சிக்கி... மிதி பட்டு... தரையோடு தரையாய் நசுக்கப்பட்டு இறந்து போனாள்..." என்று வலியோடு தன் நினைவுகளை பதிவு செய்கிறார் டே ஜியோயா (De GIOIA).
வரலாற்றின் வரலாறுகளை சுமந்து கொண்டிருக்கும் இந்த சுரங்கத்தில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத சில பகுதிகளும் இருக்கின்றன. அதை நோக்கிய தேடுதலில் இருக்கிறார்கள் இத்தாலிய அகழ்வாராய்ச்சியாளர்கள். அதைக் கண்டுபிடித்தால் இன்னும் பல ஆச்சரியங்கள் கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். !!!
 courtesy'vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval