Saturday, October 1, 2016

பெற்றோர்- ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தபோது பஸ் தாறுமாறாக ஓடி பள்ளி மாணவி பலி



கேரள மாநிலம் மலப்புரம் நகரத்தில் உள்ளது அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் அமீர் என்பவரின் மகள் சித்தாரா பர்வீன் (வயது 14) 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று வழக்கம்போல் சித்தாரா பர்வீன் பள்ளிக்கு சென்றார். நேற்று மாலை பெற்றோர்- ஆசிரியர் சங்க கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. மாலை 6 மணிக்கு கூட்டம் முடிந்தது.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாகனத்தில் அழைத்துச்சென்றனர். சில மாணவர்கள் பள்ளி பஸ்சில் ஏறினர். கூட்டம் நிறைந்த பள்ளி வளாகத்தில் பஸ் புறப்பட்டது. புறப்பட்ட சில வினாடிகளில் பஸ் தாறுமாறாக ஓடி கும்பல் மீது பாய்ந்தது.

இதில் சித்தாரா பர்வீன் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சித்தாரா பர்வீன் பரிதாபமாக இறந்தார். பெற்றோர் உள்பட 20 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்ததும் மலப்புரம் மாவட்ட கலெக்டர் சைனா மோல், போலீஸ் சூப்பிரண்டு தேபேஸ் குமார் பெகரா, கல்வி இயக்குனர் சகுரஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மலப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான சித்தாரா பர்வீன் உடலை பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கலெக்டர் சைனா மோல் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் பள்ளி பஸ் புறப்பட்டதும் பிரேக் செயல் இழந்து விட்டது. இருந்தாலும் டிரைவரின் சாமர்த்தியத்தால் முடிந்த அளவு கூட்டத்தில் மோதாமல் தவிர்த்து அருகில் இருந்த மரத்தில் மோதி பஸ் நிறுத்தியுள்ளார்.

மரத்தில் மோத முயன்றபோதுதான் மாணவி சித்தாரா பர்வீன் சிக்கி பரிதாபமாக இறந்தார். பெற்றோர் உள்பட 20 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

பஸ்சை மரத்தில் மோதி நிறுத்தாமல் இருந்திருந்தால் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என்று கூறினார். இது குறித்து மலப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval