Monday, October 17, 2016

பவர்பேங்க் வாங்கப்போகிறீர்களா? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்! கொஞ்சம் உஷார்!


மொபைல், டேப்லட் போன்றவற்றில் இருக்கும் பெரிய பிரச்னையே பேட்டரி விரைவில் தீர்ந்து போவதுதான். இதற்கான தீர்வாக நம்மிடம் இருப்பது பவர்பேங்க்குகள்தான். நீண்ட தூரப் பயணங்கள், அதிக பயன்பாடு போன்ற சமயங்களில் நமக்கு கை கொடுப்பது இவைதான். ஆனால் மொபைல் வாங்கும்போது, நாம் எடுத்துக் கொள்ளும் கவனம் பவர்பேங்க் வாங்கும்போது இல்லை. அந்த விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே...

1. பவர்பேங்க் திறன் :

ஒரு பவர்பேங்க்கை வாங்கலாம் என நாம் தேடும்போதே நம் கவனத்தில் இருப்பது அதன் திறன்தான் (capacity). இது mAh என்னும் அலகால் அளக்கப்படும். இதனைப் பொறுத்தே உங்கள் பவர்பேங்க்கின் திறன் இருக்கும். அதிக திறன் இருக்கும் பவர்பேங்க் மூலம், மொபைலை அதிக நேரம் சார்ஜ் செய்யலாம். கூடுதல் மொபைல்களை இணைக்கலாம். இதெல்லாம் திறனைப் பொறுத்தே அமையும். எடுத்துக்காட்டாக உங்கள் மொபைல் பேட்டரி 1800 mAh என்றால், நீங்கள் வாங்கும் பவர்பேங்க் திறன் இதனை விட, இரண்டு மடங்காவது அதிகமாக இருக்க வேண்டும்.



2. சரியானதை தேர்ந்தெடுங்கள்:

உங்களுக்கு ஏற்ற பவர்பேங்க் எது என்பதை உங்கள் கேட்ஜெட்ஸ், சார்ஜ் ஏற்றும் நேரம், பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்தே தீர்மானியுங்கள். தேவைக்கு அதிகமாக, அதிக திறன் (mAh) உள்ள பவர்பேங்க் வாங்குவதும் வீண்தான். அதிக திறன் கொண்ட பவர்பேங்க்குகள், விலை அதிகமாக, அளவு பெரிதாக, கையாள கடினமானதாக இருக்கும். முழுதாக சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே உங்கள் தேவையைப் பொறுத்து பவர்பேங்க்கை முடிவு செய்யுங்கள்.

3. பவர்பேங்க் தரம்:

நீங்கள் வாங்கும் பவர்பேங்க் ஆனது, உங்கள் மொபைல் அல்லது வேறு கேட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படும் சாதனம். பழுது ஏற்பட்டால் மின்சாதனப் பொருட்கள் அதிக செலவு வைக்கும். விலை மலிவான பவர்பேங்க்குகளை வாங்கினால், உங்களது விலை அதிகமான கேட்ஜெட் பாதிக்கப்படலாம். அதனால் தரமான, நம்பகமான நிறுவனங்களின் பவர்பேங்க்குகளைப் பார்த்து வாங்குங்கள்.

4. இணைக்கும் ஆப்ஷன்கள்:

நாம் வாங்கும் பவர்பேங்க் ஆனது, நமக்கு சௌகரியமாக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு மொபைல்களை இணைக்கும் வசதி, சார்ஜிங் போர்ட்டுகள் என உங்களது வசதிக்கு ஏற்றபடி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். யு.எஸ்.பி கேபிள் மூலம் எளிதாக இணைத்து பயன்படுத்த ஏதுவாக இருக்க வேண்டும்.

5. எல்.இ.டி விளக்குகள்:

பெரும்பாலான பவர்பேங்க்குகளில் இந்த எல்.இ.டி பல்புகள் இருக்கும். இவை பவர்பேங்க் நிலையை அறிந்து கொள்ள நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். பேட்டரி அளவு, சார்ஜ் ஏற்றும்போது எவ்வளவு சார்ஜ் ஆகியுள்ளது எனக் காட்டுவது போன்றவற்றிற்கு இவை உதவும். எனவே பவர்பேங்க் வாங்கும்போது, தெளிவான எல்.இ.டி விளக்குகள் இருப்பதை தேர்வு செய்யலாம்.



6. பாதுகாப்பு:

பேட்டரி வெடிப்பது என்பது டெக்னாலஜி உலகில் புதிய டிரென்ட் போல நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் வாங்குவது மிகவும் தரம் குறைவான பேட்டரி கொண்ட பவர்பேங்க் என்றால், இதே சிக்கல் உங்களுக்கும் உண்டு. தற்போது நிறைய பவர்பேங்க்குகள் சுய பாதுகாப்பு அமைப்புடன் கூடிய எலக்ட்ரானிக் சர்க்யூட்கள் கொண்டிருக்கின்றன. இவை கொஞ்சம் விலை அதிகமாக இருக்கலாம். ஆனால் பாதுகாப்பானவை. இவற்றை வாங்காவிட்டாலும் கூட பரவாயில்லை. ஆனால், தரம் குறைவான, மலிவான பவர்பேங்க்குகளை தவிர்க்கலாம்.

7. போலிகளைத் தவிர்க்கலாம்!

பவர்பேங்க் வாங்கும்போது, நம்பகமான இணையதளங்கள், கடைகளில் இருந்து மட்டுமே வாங்குவதால், கூடிய மட்டும் போலியான பவர்பேங்க்குகளை தவிர்க்கலாம். மேலும் போலியாக பிராண்ட் பெயரிட்டும், பவர்பேங்க்குகள் கிடைக்கின்றன. இவற்றிடம் கொஞ்சம் உஷார்!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval