Saturday, October 29, 2016

விபத்தில் சிக்கியவர்களுக்கு தைரியமாக உதவலாம்! போலீஸ் தொல்லை... இனி இல்லை...!


சாலை விபத்துகள்’, நம்முடைய அன்றாடப் பிரச்னைகளில் ஒன்றாக மாறி இருக்கிறது. ஒவ்வொருநாளும் நாம் பார்க்கும், படிக்கும், கேட்கும் சாலைவிபத்துகளின் அபரிமிதமான எண்ணிக்கை நம்மை அந்த மனநிலைக்கு மாற்றி உள்ளது. அதிக வேகம், குடி போதை, போக்குவரத்து விதிகளை மீறுவது, மோசமான வாகனங்கள், மோசமான சாலைகள் என ஒவ்வொரு சாலைவிபத்து மரணத்துக்கும் ஒவ்வொரு காரணம். இவற்றில்  பரிதாபமான காரணம் என ஒன்றைப் பட்டியலிடலாம். விபத்தில் சிக்கியவர்,  உதவ ஆள் இல்லாமல், உயிரை விட நேர்வதுதான் பரிதாபமான காரணம். பரபரப்பான நகர வீதியில் விபத்து நடந்தாலும், உதவ ஒரு ஆள் வராது. அதற்கு காரணம், உதவ நினைப்பவருக்கு பின்னால் வரும் தொல்லைகள். உதவி செய்தவரை விசாரிக்க போலீஸ் வரும்; போலீஸ் விசாரணையோடு போகாது; சாட்சி சொல்ல நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்து அழைக்கும். இப்படிப்பட்ட தொடர்ச்சியான தொல்லைகளைத் தவிர்க்க, உதவி செய்ய மனமிருந்தாலும்... நேரம் இருந்தாலும்... அமைதியாக ஒதுங்கிக் செல்வது உத்தமம்” என நினைத்து பலரும் விலகிச் சென்றுவிடுவார்கள். விபத்தில் பாதிக்கப்பட்டவர், உயிர் பிழைக்க வாய்ப்பிருந்தும், சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குப் போக முடியாததால் பரிதாபமாக உயிரை விடுவார்.

இந்த நிலையை மாற்ற, கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், “விபத்து சமயங்களில் உதவியவர்களை அலைக்கழிக்கக்கூடாது. அதற்கேற்றவாறு மத்திய-மாநில அரசுகள் வழிமுறைகளை உருவாக்கி விதிமுறைகளை மாற்ற வேண்டும்” என்றது. அதைப் பின்பற்றி மத்திய அரசு சில வழிகாட்டுதல் முறைகளை வகுத்தது. அதையடுத்து, தற்போது தமிழக அரசும்சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கி உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள்.

 1.    விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருபவர்களிடம் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது. தேவைப்பட்டால், அவர்களுடைய முகவரியை மட்டும் வாங்கிக் கொள்ளலாம்.

 2.    விபத்தில் சிக்கியவர்களுக்கு, உதவி செய்தவர்களுக்கு அரசாங்கம் தக்க சன்மானம் வழங்கும். இது, பொதுமக்கள் மத்தியில், விபத்து நேரங்களில் உதவும் எண்ணத்தை வளர்க்கும்.

 3.    விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்கள், அந்த விபத்து தொடர்பான எந்த ஒரு சமூக மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக மாட்டார்கள்.

 4.    காவல் நிலையம், விபத்து சிகிச்சை மையத்தை தொடர்பு கொண்டு, விபத்து தொடர்பான விவரங்களை தெரிவிக்கம் நபரின் பெயர் உள்ளிட்ட சொந்த விவரங்களை தெரிவிக்குமாறு கட்டாயப்படுத்தக்கூடாது.

 5.    விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுபவர்கள் சொந்த விவரம், தொடர்பு விவரங்களை அளிப்பது அவர்களது விருப்பத்தை பொறுத்தது. மருத்துவத் துறை விண்ணப்பங்களில், அதை நிரப்பச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது.

 6.    உதவிசெய்பவர்களின் பெயர், சொந்த விவரங்களை தெரிவிக்க கட்டாயப்படுத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

 7.    விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவியவர்கள் தாமாக சாட்சி சொல்ல விரும்பும்போது, காவல்துறை அவரிடம் ஒருமுறை மட்டும் விசாரிக்கலாம். விசாரணையில் துன்புறுத்தலோ கட்டாயப்படுத்தலோ இருக்கக்கூடாது.

 8.    விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய நபர், காயமடைந்தவரின் குடும்ப உறுப்பினர் அல்லது உறவினராக இல்லாத பட்சத்தில், அவரிடம் இருந்து அனுமதி மற்றும் பதிவு செய்வதற்கான செலவினத்தை செலுத்துமாறு தனியார் மற்றும் பொது மருத்துவமனைகள் கேட்கக் கூடாது. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

 9.    சாலை விபத்தில் அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையில், மருத்துவர் அக்கறை செலுத்தாவிட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

 10.    அனைத்து மருத்துவமனைகளின் நுழைவு வாயிலிலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவியவர்கள் கைது நடவடிக்கைக்கு ஆளாகமாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக வைப்புத்தொகை செலுத்த வேண்டியதில்லை என்பதை தெளிவுபடுத்தி அறிவிப்புப்பலகை வைக்க வேண்டும்.

11.    விபத்து இடர்ப்பாடுகளில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்கள் கேட்டால், அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்த நேரம், விபத்து நிகழ்ந்த இடம் மற்றும் நாள் தொடர்பான அறிக்கையை வழங்கலாம். இதற்கு மாநில அரசு நிலையான படிவம் தயாரித்து அனைத்து மருத்துவ மனைகளுக்கும் வழங்க வேண்டும்.

 12.    அனைத்து பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளும் இந்த நடைமுறைகளை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இந்த விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கத் தவறும், விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval