Thursday, October 20, 2016

குறைந்த விலையில், விமானப் பயணம்..கைகொடுக்கும் கூகுள்!


நமது பயணங்களுக்கான விமானங்களை தேடுவதற்கான Flights சேவையை அறிமுகம் செய்த கூகுள், தற்போது அதில் இன்னும் சில வசதிகளை மேம்படுத்தி உள்ளது.

 விடுமுறையில் விமானப் பயணம் செய்யும் 69 சதவீதம் அமெரிக்கர்களின் கவலையே, சரியான விலையில் விமான டிக்கெட் புக் செய்ய முடியாததுதானாம். காரணம் சரியான திட்டமிடல் இல்லாததால், விலை அதிகமான விமான டிக்கெட்களையே பதிவு செய்கிறார்களாம். இதேபோல பயணங்களுக்காக விமானப் பயணத்தை தேர்வு செய்யும் பெரும்பாலோனோரின் கவலை, அதிக விலைதான்.

அதற்கு கைகொடுக்க இருக்கிறது கூகுளின் Flights சேவை. நீங்கள் பயணம் செய்யும் நாள், செல்ல வேண்டிய இடம், தேர்வு செய்யும் விமான நிறுவனம் ஆகியவற்றை மட்டும் இதன் வசம் ஒப்படைத்தால் போதும். நீங்கள் இதனைப் பதிவு செய்தது முதல், தினந்தோறும் உங்களுக்கு விமானக் கட்டணத்தில் ஏற்படும் மாறுதல்களை தெரிவித்துக் கொண்டே இருக்கும் கூகுள். இதனால் குறைந்த விலைக்கு நம்மால், விமான டிக்கெட் பதிவு செய்ய முடியும்.



இந்த சேவையின் மூலம், எளிதாக ஹோட்டல்கள், விமானம் ஆகியவை புக் செய்யவும், டென்ஷன் இன்றி பயணம் செய்யவும் முடியும். நீங்கள் செல்ல வேண்டிய விமானம், இடம் ஆகியவற்றைக் கொடுத்தால் போதும். விமானக் கட்டணத்தில் ஏற்படும் மாறுதல்களை உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கூகுள் நவ் சேவையின் கார்டுகள் மூலமாகவோ உங்களுக்கு தகவல்கள் வந்துகொண்டே இருக்கும். இதனை தினமும் பின்தொடர்வதன் மூலமாக உங்கள் விமானப் பயணத்தை மிகக் குறைந்த விலையில், சரியான நேரத்துக்கு புக் செய்ய முடியும். நீங்கள் செல்ல வேண்டிய விமானத்தின் டிக்கெட் விலை, விரைவில் அதிகமாக இருக்கிறது என்றால் அதனை உங்களுக்கு முன்கூட்டியே சொல்லும். உடனே நீங்கள் டிக்கெட் புக் செய்வதன் மூலமாக, கூடுதல் கட்டணத்தில் இருந்து தப்பிக்கலாம்.

குறிப்பிட்ட விமானத்தைக் குறிப்பிடாவிட்டால் கூட பரவாயில்லை. நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை, உதாரணமாக சென்னை - டெல்லி எனக் கொடுத்துவிட்டால் போதும். அந்தப் பயணத்தடத்தில் இருக்கும் எல்லா விமானங்களின் கட்டணங்கள், நேரங்கள் போன்ற விஷயங்களையும் தெரியப்படுத்தும். இதன் மூலம் நமது நேரமும், பணமும் மிச்சமாகும். இந்த சேவை விரைவில் வரவிருக்கிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval