Sunday, October 16, 2016

ரயிலில் போராடிய உயிர்...காப்பாற்றிய பெண்... நெகிழ்ச்சித் தருணம்!!


காமெடியில் இருந்து கார்ட்டூன் வரை அதிகமான விஷயங்களிலும் கிண்டலுக்கு உள்ளாகுபவர்கள் மருத்துவர்கள்தான். இப்போதுகூட முதல்வர் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனையைக் தாறுமாறாக கிண்டல் செய்யும் ஃபேஸ்புக் பதிவுகளை பார்க்க முடிகிறது. ஆனால் உடலுக்கு ஒன்று வந்து விட்டால் டாக்டர் கொஞ்சம் பாருங்க டாக்டர்னு விழுந்தடித்துக் கொண்டு  ஓடுவோம். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ராஜரத்தினம் பொன்மணி . அண்மையில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் பயணத்தில் நேர்ந்த  அனுபவத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். 

''கடந்த ஞாயிறு( 9-10-2016) இரவு 8 மணி தூத்துக்குடியிலிருந்து முத்துநகர் எக்ஸ்பிரசில் சென்னை கிளம்பினேன். நம் ஊர் இரயில் பயணங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.. இரவு 8.30 மணிக்கு 3 இட்லிகளை விழுங்கி விட்டு 9.30 மணிக்கெல்லாம் படுத்து விட்டேன். நடுநிசி .....சில குரல்கள் " டாக்டரம்மா எங்கம்மா இருக்கீங்க ?'' திடுக்கென்று எழுந்து... என்ன சார் என்றேன். டிக்கெட் பரிசோதகரும் ,ரயில்வே ஊழியர்கள் சிலரும் ''  ஒருவர் பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறார்மா, வந்து பார்க்க முடியுமானு '' கேட்டார்கள். பதில் சொல்லாமல் என் கைப்பையில் எப்போதும் இருக்கும் ஸ்டெதஸ்கோப்பை எடுத்துக் கொண்டு அவர்களுடன் ஓடினேன்.
அப்போது ரயில் மதுரையை கடந்திருந்தது. 3 கோச்சுகள் தாண்டியதும் வாந்தியெடுத்து சரிந்து கிடந்த அந்த மனிதரை என்னிடம் காட்டினார்கள். .பலமான ஹார்ட் அட்டாக் என்று புரிந்துக் கொண்டேன்.  அவரது இதயம் கொஞ்சம் கொஞ்சமாக  தன் துடிப்பை நிறுத்திக் கொண்டு இருந்தது . கோச்சில் அனைவரும் விழித்திருந்தனர். ஆனால் என்ன செய்யவென்றுத் தெரியவில்லை. அவரது குடும்பத்தினர் அழுதுக் கொண்டிருந்தனர். உடனே செயலில் இறங்கினேன்.மார்புக்கூட்டை அழுத்தி, வாயினால்  செயற்கை சுவாசம் கொடுத்து CPR ( CARDIO PULMONARY RESUSCITATION ) செய்து ஏறக்குறைய முக்கால் மணி நேரம் போராடினேன்.
சிபிஆர் செய்தால் துடிப்பை நிறுத்திக் கொண்டிருக்கும் இதயத்தை மறுபடியும் சீராக இயங்க வைக்க முடியும். ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கும் ரயிலில் உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற எந்த அடிப்படை  வசதியும் இல்லை. என்னுடன் சேர்ந்து சில .இளைஞர்களும் போராடினார்கள். சிலர் பயத்தில், சிலர் பிரார்த்தனையில், சிலர் கவலையில், சிலர் தங்கள் மொபைலில் படமும் வீடியோவும் எடுத்தபடி சுற்றி நின்று கொண்டிருந்தனர். ஆனால் அத்தனை பேரின்  நோக்கமும் அவர் உயிர் பிழைக்க வேண்டும் என்பதில்தான் இருந்தது..சாதி மதம் மாநிலம் மொழி இனம் கடந்த மனித நேயத்துடன் அனைவரும் போராடிக் கொண்டிருந்தோம். நடு நடுவே விட்டு விட்டு இதயத் துடிப்பு மீண்டும் வந்து வந்து போனது. முழுமையான  முறையாக. சிகிச்சை செய்ய முடியாமல் , தனியாக என்னால் முடிந்ததை எல்லாம் செய்து கொண்டிருந்தேன்.
ரயிலில் ஆக்ஸிஜன் சிலிண்டரோ அல்லது Defibrillation Machine or Intubation Instruments இருந்திருந்தால் 15 -20 நிமிடங்களில் அந்த மனிதர் மீண்டிருப்பார். ஆனால் ரயிலில் மருத்துவ ரெட் அலர்ட் சிக்னல் கூட. இல்லை. ரயில் திண்டுக்கல் வந்தடைந்தது. ஆனால் ஆம்புலன்ஸ் வரவில்லை. வருத்தமாக இருந்தது. அங்கே தூக்கக் கலக்கத்தோடு காத்திருந்த ரயிவேயின் இளம் பெண் மருத்துவரிடமும் ஊழியர்களிடமும் சொல்லி, தேவையான அவசரச் சிகிச்சைகளை செய்து விட்டு, அடுத்து செய்ய வேண்டியவைகளையும் சொல்லிக் கொடுத்து விட்டு அந்த மனிதரையும் அவரின் குடும்பத்தாரையும் அங்கு ஒப்படைத்தேன். 
பின் ஒரு மன திருப்தியோடு சக பயணிகளின், TTR கள் , அங்கிருந்த இரயில்வே ஊழியர்களின் ஆசிகளோடு மீண்டும் சென்னை நோக்கி என் பயணத்தைத் தொடர்ந்தேன். அந்த மனிதர் 71 வயது குஜராத்காரர். நம் தமிழகக் கோவில்களை சுற்றிப் பார்க்க தன் குடும்பத்துடன் வந்தவர். அவர் உயிர் பிழைத்திருப்பார் என நம்புவவோம். வேண்டுவோம்.நம் இரயில்வே நிர்வாகம் டெக்னிக்கலாக முன்னேற வேண்டும். நிறைய வருமானம் கிடைக்கும் துறை. உயிர் காக்கும் உபகரணங்கள் மிக அவசியம் என்பதை உணர வேண்டும்.
இதைப் படிக்கும் உயர் இரயில்வே அதிகாரிகளே உணருங்கள். இன்று அவர்.......நாளை நாமாகக் கூட இருக்கலாம். இந்தப் படங்கள் கூட TTR அவரது மொபைலில் கிளிக்கி என்னிடம் பகிர்ந்தவையே....நிறையவே பாராட்டினார்.  பார்த்த பயணிகள் எல்லாம் பாராட்டினர்.
வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம்... அதில் ஒரு மகிழ்ச்சி...நன்றி மக்கா.......!''
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval