Monday, October 3, 2016

இந்தியா வாங்கும் ரபேல் போர் விமானங்கள்: சீனா அச்சம்


பிரான்ஸிடமிருந்து இந்தியா வாங்கும் ரபேல் போர் விமானங்கள் சீனா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்படும் என்று சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடியில் 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி கையெழுத்தானது. அடுத்த 36 மாதங்களில் ரபேல் போர் விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பணிகளை பிரான்ஸ் தொடங்க உள்ளது. இந்த விமானங்கள் அணுஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை.

இதுகுறித்து சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் அண்மையில் வெளியிட்ட கட்டுரையில் கூறியிருப்பதாவது:

ஆசிய நாடுகள் பெருமளவில் ஆயுதங்களை வாங்கி குவித்து வருகின்றன. இந்தியா ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸிடம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த விமானங்கள் மூலம் அணுஆயுத தாக்குதல்களை நடத்த முடியும். இதன்மூலம் இந்தியாவின் வலிமை மேலும் அதிகரித்துள்ளது.

ரபேல் போர் விமானங்களை சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்திய விமானப் படை நிலைநிறுத்தும் வாய்ப்புள்ளது. இதனால் இந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிக்கக்கூடும்.

உலகளாவிய அளவில் அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா, தென்கொரியா, வியட்நாம் ஆகியவை முதல் 10 இடத்தில் உள்ளன.

இவ்வாறு குளோபல் டைம்ஸ் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval