யவத்மாலில் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடைபெற்றது. குப்பைகளை சேகரித்து விற்ற பெண், கஷ்டப்பட்டு படித்து நர்சாக மாறியிருக்கிறார். அவருக்கு நாளை தையல்காரருடன் திருமணம் நடக்கிறது.
யவத்மால் ரவிதாஸ் நகரை சேர்ந்த 30 வயது பெண் பானு ஷேக் சபி. இவர் தனது 3 வயதிலேயே தந்தையை இழந்தார். இதனால், பானு ஷேக் சபியையும், அவரது தங்கை ஷாமாவையும் பராமரிக்க ஆதரவு இன்றி அவரது தாயார் தவித்தார். இதைத்தொடர்ந்து, சாலையில் கிடக்கும் காகிதங்கள், இரும்பு பொருட்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து கடையில் விற்று மகள்களை வளர்த்தார்.
நாளடைவில் மகள்கள் இருவருக்கும் விவரம் தெரியவரவே, அவர்களும் தாயாருடன் சேர்ந்து குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதேசமயம், படிப்பை அவர்கள் விட்டு விடவில்லை. பள்ளிக்கூடம் முடிந்ததும், பானு ஷேக் சபியும், ஷாமாவும் முதுகில் ஒரு அழுக்கு சாக்குமூட்டையை சுமந்து கொண்டு, தெரு தெருவாக அலைந்து திரிந்து குப்பைகளை சேகரித்தனர்.
அதில் இருந்து கிடைத்த சொற்ப வருமானம் மூலம் கல்வியை தொடர்ந்தனர். இவ்வாறாக தன்னம்பிக்கையுடன் படித்து பள்ளிக்கூட படிப்பை முடித்தனர். அவர்களது கடின உழைப்பு வீண்போகவில்லை. யவத்மால் மருத்துவ கல்லூரியில் பானு ஷேக் சபிக்கு நர்சு ‘சீட்’டும், அவரது தங்கை ஷாமாவுக்கு பேறுகால மருத்துவ படிப்புக்கான ‘சீட்’டும் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, கல்லூரி படிப்பை வெற்றிகரமாக முடித்த பானு ஷேக் சபி, உள்ளூர் பொது சுகாதார மையத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். ஷாமா தன்னுடைய தாயாருடன் இருந்து அவரை கவனித்து வருகிறார். இந்தநிலையில், பானு ஷேக் சபிக்கு திருமணம் செய்து வைக்க தாயார் முடிவு செய்தார். இதன்பேரில், வரன்பார்க்கும் படலம் தொடங்கியது.
சிறு வயதில் இருந்து பல்வேறு துயரங்களை சந்தித்து, வாழ்க்கையில் முன்னேறி தன்னம்பிக்கைக்கு நல்லதொரு உதாரணமாக திகழும் பானு ஷேக் சபியை திருமணம் செய்ய யவத்மால் மாவட்டம் ரூயி கிராமத்தை சேர்ந்த ஷபீர்கான் என்ற தையல்காரர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில், பெற்றோர் சம்மதத்துடன், அவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) யவத்மாலில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஹன்சுராஜ் அகிர், மாநில மந்திரிகள் மதன் எரேவர், சஞ்சய் ரத்தோடு, ஆரதி புபாதே மற்றும் காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே, பாவனா காவ்லி எம்.பி., மாவட்ட கலெக்டர் சச்சிந்திர பிரதாப் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க இருப்பதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval