Thursday, October 20, 2016

16 வயதில் பைலட் லைசென்ஸ் பெற்ற பள்ளி மாணவி!


பதினாறு வயதில் இருசக்கர வாகனத்துக்குக் கூட ஓட்டுநர் உரிமம் தரமாட்டார்கள். ஆனால் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பைலட் லைசென்ஸ் பெற்றிருப்பது  ஆச்சர்யமானதுதானே? குஜராத்தின் வதோதரா நகரைச் சேர்ந்தவர் 16 வயது வரிஜா ஷா, சிறுவயதிலேயே பைலட் லைசென்ஸ் பெற்ற முதல் மாணவி என்ற பெருமையைத் தட்டிச் சென்றிருக்கிறார்.அக்டோபர் 17-ம் தேதிதான் வரிஜா ஷாவுக்கு லைசன்ஸ் கிடைத்தது. அன்றைக்குதான் அவருடைய 16-வது பிறந்த நாள். இந்த பிறந்த நாள் தந்த மகிழ்ச்சியை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்.

'செஸ்னா 152' ரக விமானத்தை வதோதரா நகர் மேல் சீறிப் பறக்கசெய்து, ஆகாயத்தில் வட்டச் செய்து பத்திரமாக தரை இறக்கியுள்ளார் வரிஜா ஷா. தன்னிடம் கற்றதை கொஞ்சமும் தவறில்லாமல் இயக்கிய வரிஜா ஷாவின் திறமையைப் பார்த்து, அசந்துவிட்டார் பயிற்சியாளர்.

வதோதரா நகரில் உள்ள நவ்ரச்சனா (Navrachana) பள்ளியில், வரிஜா ஷா ஏழாம் வகுப்பு படிக்கும்போதே விமானம் ஓட்டவேண்டும் என்ற ஆசை உருவாகியிருக்கிறது. வரிஜா ஷாவின் தந்தை பிரசாந்து மோதி ஷா, விமானம் ஓட்டவேண்டும் என்று கனவு இருந்துள்ளது. ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக அவரால் முடியவில்லை. தன்னைப்போல மகளுக்கு பைலட் ஆசை இருப்பதைத் தெரிந்துகொண்டவர், 'குஜராத் ஃப்ளையிங் கிளப்'-ல் சேர்த்துவிட்டார்.

இங்கு தரைப் பயிற்சி, விமானம் ஓட்டும் பயிற்சி என ஓராண்டு பயிற்சிகள் மேற்கொண்டார். ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடன் துல்லியமாக கற்றுக்கொண்ட வரிஜா ஷா, வதோதரா நகரை ஆகாயத்தில் இருந்து பார்க்கவேண்டும் என்று தான் கண்ட கனவை நினைவாக்கியிருக்கிறார்.



பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்...

இந்திய விமானப் படையில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்வதே என் லட்சியம் என்று கூறும் வரிஜா ஷா, விமானம் ஓட்டுவதில் இன்னும் அனுபவம் தேவைப்படுகிறது. பிறகு பிரைவேட் பைலட் லைசென்ஸ் பெறவேண்டும். இதற்காக NCC-ல் (National Cadet Corps) சேர தயாராகிக் கொண்டிருக்கிறார்.

வரிஜாவின் இன்னொரு முகம்:

டென்னிஸ் விளையாட்டிலும் கலக்கும் வரிஜா ஷா, மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடத்தப்பட்ட டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். பைலட் ஆனது தந்தைக்கு சந்தோஷம். டென்னிஸ் விளையாடுவது அம்மாவின் ஆசை. இப்படி இருவரின் ஆசைகளை நிறைவேற்றிய வரிஜா  ஷா வீட்டில் செல்லப் பெண்ணாகி விட்டார்.

ஆகாயத்திலிருந்து, தரையிறங்கிய வரிஜா ஷாவுக்கு, அவரின் பள்ளி மாணவர்கள் சாக்லெட் மழையால் நனைத்து விட்டார்கள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval