மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உட்பட வடதமிழகத்தில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தமிழகத்தின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் வரும் 11-ந் தேதி வரை சுங்கக் கட்டண வசூல் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் 100ஆண்டுகாலம் சந்திக்காத மழை…ஒட்டுமொத்தமாக இயல்பு வாழ்க்கை புரட்டி போடப்பட்டுள்ளது. தலைநகரம் சென்னை சாலை, ரயில், விமான போக்குவரத்துகள் ஏதுமின்றி தனித் தீவாகிவிட்டது. சென்னை நகருக்குள்ளும் அடையாறு ஆறு தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதால் எந்த பகுதி எப்போது மூழ்கும் எனத் தெரியாத நிலைமை..
தமிழக அரசு பெரிய அளவு நிவாரணப் பணிகளை செய்யாத நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக அனைத்து தரப்பு மக்களும் முடிந்த அளவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தமிழக சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று நிவாரணப் பணியில் ஈடுபட்டோர் சார்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று டிசம்பர் 11-ந் தேதி வரை தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி, தமிழகத்தின் மிக மோசமான நிலைமையைக் கருத்தில் கொண்டு டிசம்பர் 11-ந் தேதி வரை தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளில் தொய்வில்லாமல் நடைபெற இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval