செம்பரம்பாக்கத்தில் திறந்து விடப்பட்ட வெள்ளநீர், அடையாறு ஆற்றில் பாய்ந்து, அதன் ஓரமாக இருந்த மியாட் மருத்துவமனைக்குள் புகுந்தது. இதனால் கடந்த 4 நாட்களாக மின்சாரம் தடைபட்டது. மருத்துவமனையில் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் 18 பேர் பரிதாபமாக பலியாகினர். தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டதால்தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த புதன்கிழமை முதல் விநாடிக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நகரில் பெய்த மழையால் 50 ஆயிரம் கன அடி ஆற்றில் பாய்ந்தது. இந்த 80 ஆயிரம் அடி தண்ணீரும் செம்பரம்பாக்கத்தில் இருந்து குன்றத்தூர், திருநீர்மலை, நந்தம்பாக்கம், மணப்பாக்கம், ராமாபுரம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் வழியாக அடையாறு வந்து கடைசியாக கடலில் கலக்கிறது.
மருத்துவமனை தப்பவில்லை: இப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்படும் அதிகளவு தண்ணீரால் அடையாற்றில் கடந்த சில நாட்களாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் தனியார் மருத்துவமனைகளும் தப்பவில்லை. கடந்த புதன்கிழமை சென்னை புறநகர் பகுதியான பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனைக்குள் வெள்ளநீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். மின்இணைப்பும் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டனர். மின் இணைப்பு இல்லாததால் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்த 40 பேர் உயிர் கேள்விக்குறியாகின. உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் உதவி கேட்டு அரசு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டனர். ஆனால் இரவு நேரம் என்பதாலும் மழை பெய்ததாலும் அதிகாரிகள் கைவிரித்து விட்டனர். இதனால் நிர்வாகமே தனியார் நிறுவனங்களிடம் இருந்து பவர் ஜெனரேட்டர் வரவழைத்து, நோயாளிகளை காப்பாற்றினர். நோயாளிகள் உடனடியாக பாதுகாப்பாக மேல்தளத்துக்கு கொண்டு சென்றனர். பலர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சுவரை உடைத்தனரா: மணப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் ஓரமாக உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த செவ்வாய்கிழமை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் புகுந்தது. மேலும் மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிக்குள்ளும் வெள்ளநீர் தண்ணீர் புகுந்தது. அப்போது சில விஷமிகள் மருத்துவமனையில் உள்ள 15 அடி உயர காம்பவுன்ட் சுவரை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் மருத்துவமனை வளாகத்தில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் புகுந்தது மட்டுமல்லாமல், தரைத்தளத்துக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. மணப்பாக்கம் பகுதி முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து 4 நாட்களாக மியாட் மருத்துவமனைக்குள் பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. மின்சாரமும் இல்லை. மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டர் அறைக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் ஜெனரேட்டர் நிறுத்தப்பட்டன.
உதவி கேட்டும்: மியாட் மருத்துவமனையில் மட்டும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவசர உதவி கேட்டு பலமுறை அரசிடமும், மியாட் மருத்துவமனை நிர்வாகிகள் உதவி கேட்டுள்ளனர். ஆனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கடந்த 4 நாட்களாக மணப்பாக்கம் முழுவதும் பல அடி உயர தண்ணீர் தேங்கி நிற்பதால், டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால், அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகளுக்கு உதவி கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதனால் சுமார் 300 நோயாளிகள் மியாட் மருத்துவமனையில் இருந்து வெளியேறி அரசு மற்றும் வேறு தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டனர்.
நேற்று முன்தினம் வரை இருந்த டீசல் மற்றும் பெட்ரோலை வைத்து ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த சுமார் 225 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சுமார் 75 நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் (செயற்கை சுவாசம்) உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் ஜெனரேட்டர்களும் இயங்கவில்லை. இதனால், ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த பல நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் கிடைக்காமல் மூச்சு திறணல் ஏற்பட்டது. அங்கிருந்த டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்களால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினர். அரசிடம் உதவிக்கு தொடர்பு கொண்டும், உடனடி உதவி கிடைக்கததால், உயிர் பிழைக்க எந்த வழியும் இல்லாமல் ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் கிடைக்காமல் ஒவ்வொருவராக இறந்துள்ளனர்.
18 பேர் பலி: நேற்று காலையில் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 ஆண்கள், 6 பெண்கள் உள்பட 14 பேர் பரிதாபமாக இறந்ததாக கூறி அவர்களின் உடல்கள் அனைத்தும், பிரேத பரிசோதனைக்காக சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் 14 பேர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் 4 பேர் இறந்தனர். ஆனால் அவர்களின் உடல்களை உறவினர்கள் வாங்கிக் கொண்டு சென்று விட்டனர். இதனால் மியாட் மருத்துவமனையில் மட்டும் 18 பேர் உயிரிழந்தனர். மின்சாரம் தடை காரணமாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 18 பேர் இறந்த சம்பவம் சென்னை மட்டுமல்லாது தமிழகத்தையே உலுக்கி விட்டது.
இறந்தவர்கள் விவரம்
சென்னை பெருகம்பாக்கம்
மோகன் (57)
கோவிலம்பாக்கம்
சொக்கலிங்கம் (80)
பாண்டிச்சேரி
வடிவேலன் (35)
சென்னை காந்தி தாமஸ் (80)
அசோக் நகர்
வெங்கடசுப்பிரமணியன் (80)
புதுப்பேட்டை பரஞ்சோதி (53)
ராணிப்பேட்டை
வில்சென் (73)
கல்பாக்கம் பிரமலதா (44)
வேளச்சேரி செல்லம்மாள் (61)
வியாசர்பாடி ரத்தினராஜ் (65)
தேனாம்பேட்டை ரகுபதி (67)
அண்ணனூர் கலையரசன் (59)
அடையாறு விசாலாட்சி (79)
ஓட்டேரி செல்வம் (54)
மேலும் 4 பேர் விவரம் கிடைக்கவில்லை.
மோகன் (57)
கோவிலம்பாக்கம்
சொக்கலிங்கம் (80)
பாண்டிச்சேரி
வடிவேலன் (35)
சென்னை காந்தி தாமஸ் (80)
அசோக் நகர்
வெங்கடசுப்பிரமணியன் (80)
புதுப்பேட்டை பரஞ்சோதி (53)
ராணிப்பேட்டை
வில்சென் (73)
கல்பாக்கம் பிரமலதா (44)
வேளச்சேரி செல்லம்மாள் (61)
வியாசர்பாடி ரத்தினராஜ் (65)
தேனாம்பேட்டை ரகுபதி (67)
அண்ணனூர் கலையரசன் (59)
அடையாறு விசாலாட்சி (79)
ஓட்டேரி செல்வம் (54)
மேலும் 4 பேர் விவரம் கிடைக்கவில்லை.
உண்மை என்ன? இயக்குனர் பேட்டி
மருத்துவ கல்வி இயக்குனர் கீதாலட்சுமி : இறப்புக்கான காரணம் உடனடியாக எங்களுக்கு தெரியவில்லை. இவர்கள் எப்படி எப்போது உயிரிழந்தார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்களின் சிகிச்சை விபரம் அடங்கிய அறிக்கை(கேஸ் சீட்) மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை இரண்டையும் ஒப்பிட்டு விசாரணை நடத்தப்படும். அதன் அடிப்படையிலே இறப்பு குறித்த உண்மையான காரணம் என்பது தெரியவரும்.
எப்ஐஆர் எங்கே? போலீசின் அலட்சியம்
இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் உறவினர்கள் அங்கு குவியத் தொடங்கினர். அவர்களிடம், ‘உடல்களை பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமானால், நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்து கொண்டு வாருங்கள்’ என்று வழக்கமான தோரணையுடன் கூறியதால் போலீசுடன் சில நிமிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘லட்சக்கணக்கில் பணம் கட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்ைச பெற்று வந்த எங்களது உறவினர்கள் திடீரென இறந்து விட்டதாக கூறினால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இதற்கு நடுவே, போலீசார் நந்தம்பாக்கம் சென்று எப்ஐஆர் வாங்கி வாருங்கள் என்று கெடுபிடி செய்வது சரியா? என்று கொதித்தனர்.
‘டிவி’ யை பார்த்து தான் இறந்ததே தெரியும்’ உறவினர்கள் கதறல்
இறந்த புதுப்பேட்டையை சேர்ந்த பரஞ்சோதி மகன் பிரசாத்: கை எலும்பு முறிவுக்காக பிளேட் வைக்க மியாட் மருத்துவமனையில் சேர்த்தோம். 5 நாளாக மூச்சு திணறல் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் வைத்தனர். இறந்தவர்களில் அவர் பெயர் இருந்தபோது தான் அவர் இறந்ததே எனக்கு தெரியும். இறந்த தகவலை கூட எங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றார். வியாசர்பாடியை சேர்ந்த இறந்த ரத்தினராஜின் மகன் தேவிபிரசாத்: என்னுடைய தந்தை சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு இதயத்தில் சிறு பிரச்னைக்காக மியாட் மருத்துவமனையில் சேர்த்தோம். 2 நாட்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். றந்த தகவலை கூட மருத்துவமனை நிர்வாகம் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. டிவியை பார்த்து நாங்களே ராயப்பேட்டை மருத்துவமனைக்கு ஓடோடி வந்தோம்.
இறந்து போன ராணுவ வீரர் மோகனின் உறவினர் ரவி: மோகனுக்கு தலையில் அடிபட்டது. இறுதியாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம். நல்ல உடல் நலத்துடன் இருந்தார். ஆனால் திடீரென டிவியில் செய்தி ஒளிபரப்பானதை பார்த்து இங்கு ஓடி வந்தோம். இறந்தது குறித்து தகவல் கூட தெரிவிக்காத மியாட் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: மியாட் மருத்துவமனையில் செயற்கை ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நோயாளிகள் அவசர அவசரமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ள அனைத்து நோயாளிகளுக்கும் உரிய சிகிச்சை மற்றும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இது போல், மருத்துவமனையில் சிக்கி தவிக்கும் நோயாளிகளுக்கு உதவுவதற்காக 92 நடமாடும் மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. குளோபல் மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளும் அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval