Sunday, December 13, 2015

காந்தி பயன்படுத்திய பொருட்களை காக்க மண்டபம் அமைக்கப்படுமா?: பொதுமக்கள் கோரிக்கை

738bfcf0fநமது நாட்டை ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது, தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியடிகள் சுதந்திரத்துக்காக அகிம்சை முறையில் போராட்டங்களை நடத்தினார். அதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், தண்டி யாத்திரை, ஒத்துழையாமை இயக்கம் உள்பட பல்வேறு போராட்டங்கள் அமைந்தன.
இந்த போராட்டங்களை நடத்துவதற்காக இந்தியா முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி மகாத்மாகாந்தி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் 1934-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கோவை மாவட்டத்துக்கு வந்தார். கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையத்தில் வெ.சீனிவாசராவ், சேனாபாய், தி.சி.சின்னையன், ஆ.மாசிலாமணி, ர.பெட்டையன் ஆகிய 5 சுதந்திர போராட்ட தியாகிகள் இருந்தனர். அவர்கள் 5 பேரும் காந்தியடிகளுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால் 6-2-1934-ம் ஆண்டு காந்தியடிகள் சொக்கம்பாளையத்துக்கு வந்தார்.
அன்று தற்போது உள்ள காந்தி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்ட பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதுடன், நிதியும் திரட்டினார். கூட்டம் முடிந்ததும், அவர் அங்கேயே தங்கினார். அப்போது அவர் பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, கடிகாரம், ஊன்றுகோல், எழுத்தாணி, தட்டு, தம்ளர், கரண்டி, செருப்பு உள்ளிட்ட ஒருசில பொருட்களை விட்டுச்சென்றார்.
அந்த பொருட்கள் அனைத்தையும் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பத்திரமாக எடுத்து இதுவரை பராமரித்து வருகிறார்கள். சொக்கம்பாளையத்துக்கு காந்தி வந்து சென்று சுமார் 80 வருடங்களுக்கு மேல் ஆனாலும், அவர் விட்டுச்சென்ற பொருட்கள் அனைத்தும் இதுவரை பத்திரமாக, எவ்வித சேதங்களும் ஏற்படாமல் இருக்கிறது. அந்த அளவுக்கு அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் காந்தி மீது பாசத்தை வைத்து அந்த பொருட்களை பொக்கிஷம் போன்று பாதுகாத்து வருகிறார்கள்.
தற்போது அந்த பொருட்கள் அனைத்தும் அங்குள்ள ஒரு பள்ளியில் வைக்கப்பட்டு உள்ளது. அந்த பள்ளியில் தனியாக அருங்காட்சியகம் அமைத்து, அதில் காந்தி பயன்படுத்திய பொருட்களை கண்ணாடி பெட்டிக்குள் வைத்து உள்ளனர். அத்துடன் அந்த அருங்காட்சியகத்தில் காந்தி நடத்திய போராட்டத்தில் அவர் பங்கேற்ற அரிய புகைப்படங்களும் வைக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் காந்தி பிறந்ததினம், சுதந்திரதினம், குடியரசுதினம் ஆகிய நாட்களில் அந்த பள்ளிக்கு பலர் வந்து, காந்தி பயன்படுத்திய பொருட்களை ஆர்வத்துடன் பார்வையிடுகிறார்கள். ஆனால் இந்த பொருட்கள் இங்கு இருக்கிறது என்று கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரிவதில்லை.
எனவே பலருக்கும் தெரியாமல் இருக்கும் காந்தி பயன்படுத்திய பொருட்களை அனைவருக்கும் தெரிய வைக்கும் வகையில், சொக்கம்பாளையத்தில் மண்டபம் அமைக்க வேண்டும் என்று அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து சொக்கம்பாளையம் கிராம மக்கள் கூறியதாவது:-
நாட்டுக்காக பாடுபட்டு விடுதலை வாங்கி கொடுத்த காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களை பாது காத்து, அதை அனைவருக்கும் தெரியும்படி வைத்தால் தான், அவர் நாட்டின் விடுதலைக்கு பட்டபாடுகள் எதிர்கால சந்ததியினருக்கு தெளிவாக தெரியும். எனவே தான் நாங்கள் காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களை பொக்கிஷமாக கருதுகிறோம். எங்கள் பகுதியை சேர்ந்த சேவா சங்கத்தினர் அதை பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள்.
ஆரம்ப காலத்தில் சொக்கம்பாளையம் பள்ளி அருகே உள்ள மண்டபத்தில் தான் காந்தி பயன்படுத்திய பொருட்கள் பராமரிக்கப்பட்டு வந்தது. சில காரணங்களால் தற்போது அந்த பொருட்கள் பள்ளிக்கு மாற்றப்பட்டு உள்ளது. தற்போது அங்கு நன்றாக பராமரிக்கப்பட்டு வந்தாலும், அது வெளியே தெரிவதில்லை.
தமிழகத்திலேயே காந்தி பயன்படுத்திய பொருட்கள் மதுரையிலும் அதற்கு அடுத்தபடியாக எங்கள் கிராமத்திலும் இருக்கிறது. இந்த பொருட்கள் யாருக்கும் கிடைக்காதவை ஆகும். நாட்டுக்காக பாடுபட்டவர்கள் மறைந்துவிட்டால், அவர்கள் விட்டுச்சென்ற பொருட்களை பராமரித்து, பாதுகாத்து அனைவருக்கும் தெரியும்படி வைத்தால்தான், அந்த தலைவர்களின் பெருமை எல்லோருக்கும் தெரியும்.
மதுரையில் காந்தி பயன்படுத்திய பொருட்களை பாதுகாக்க மிகப்பெரிய அளவில் அருங்காட்சியகம் அமைத்து உள்ளனர். இதனால் பலர் அங்கு சென்று காந்தியடிகளின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்கிறார்கள். ஒருசிலர் அவரது வழிமுறைகளையும் கடைபிடிக்கிறார்கள்.
மேலும் காந்தியடிகள் எங்கள் பகுதிக்கு வந்ததன் நினைவாக இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அத்துடன் காந்தி சிலையையும் வைத்து உள்ளோம். எங்கள் கிராமத்திலும் மண்டபம் அமைத்துக்கொடுத்தால் அவர் பயன்படுத்திய பொருட்களை அங்கு வைத்து பராமரிக்க ஏதுவாக இருக்கும். அத்துடன் அவருடைய வாழ்க்கை நெறிமுறைகள் அனைவருக்கும் தெரிய ஏற்றதாக இருக்கும். அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
காந்தி பயன்படுத்திய அரியவகை பொருட்கள் நமது மாவட்டத்தில் இருக்கிறது என்றால் அது நமது மாவட்டத்துக்கு கிடைத்த பெருமை. ஆனால் அந்த பெருமையை அனைவருக்கும் தெரியப்படுத்த அதிகாரிகள் மறந்துவிட்டனர். இத்தனை ஆண்டுகள் ஒரு கிராமமே காந்தி பயன்படுத்திய பொருட்களை பாதுகாத்து வருகிறது. அந்த பொருட்களை அனைவருக்கும் தெரியவைக்கும் கடமை அரசுக்கு கண்டிப்பாக இருக்கிறது. எனவே காந்தியடிகளின் பெருமையை அனைவருக்கும் உணர்த்தும் வகையில், காந்தியடிகள் வந்து பொதுக்கூட்டத்தில் பேசி, அங்கு தங்கிய சொக்கம்பாளையத்தில் மண்டபம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval