பாட்னா: பீகார் மாநில துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி தன்னுடைய முதல் மாத சம்பளத்தை சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதிக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய 3 பெரிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, முதல்வராக நிதிஷ்குமார் பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவின் இரண்டு மகன்கள் உள்பட 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். இவர்களில் லாலு பிரசாத் யாதவின் இளைய மகனும், முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றவருமான தேஜஸ்வி பிரசாத் (வயது 26) துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். துணை முதல்வரான தேஜஸ்விக்கு, சாலை மற்றும் கட்டுமானத்துறை உள்ளிட்ட மூன்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பேரிழப்புகள் குறித்து அறிந்த தேஜஸ்வி தன்னுடைய முதல் மாத சம்பளத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நிவாரண நிதியாக வழங்குவதாக நேற்று அறிவித்தார். இந்த நிதி சிறிய தொகையக இருந்தாலும் இதனை மனிதாபிமான அடிப்படையில் வழங்குவதாகவும் விரைவில் சென்னை மக்கள் பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டிக்கொள்வதாகவும் தேஜஸ்வி கூறினார். பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் சென்னை வெள்ள பாதிப்புகள் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார்.'தமிழக மக்களின் துயரை தீர்க்க பீகார் உறுதுணையாக நிற்கும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக தான் வேண்டிக் கொள்வதாகவும்' நிதிஷ்குமார் கூறியுள்ளார். அதேபோல் கடும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவும் வகையில் ராஜ்யசபா எம்.பி.,க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
courtesy;one india
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval