Saturday, December 5, 2015

ஏசி இருக்கும் வீட்ல.. ? ஆஸ்துமா வருமாம்!

Window-Air-Conditioner-AC1
 சிஎன்று செல்லாம அழைக்கப்படும் குளிர்சாதனப்பெட்டி இருக்கவேண்டும். குளுமையாய் வேலை செய்யவேண்டும் என்று பெரும்பாலோனோர் விரும்புகின்றனர். வீடுகளில் ஏசி பொருத்தியிருப்பது சுற்றுச்சூழல் மாசுபாட்டினை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. மும்பை கெம் மருத்துவமனையைச் சேர்ந்த ஆய்வாளர் வீடுகளில் ஏசி பொருத்தியிருப்பதால் வீடுகளில் பூஞ்சை வளர்வதோடு ஆஸ்துமா, அலர்ஜி போன்றவைகள் ஏற்படுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.
கெம் மருத்துவமனையில் மார்பக சிகிச்சை பிரிவு சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தின் பிரிவு தலைவர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மும்பையில் அந்தேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து 486 வீடுகள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவர்களின் வீடுகளில் ஏசி பொருத்தப்பட்டிருக்கும் சூழல், வீடுகளின் நிலை, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஏசியில் இருந்து வழியும் தண்ணீர் சுவர்களில் படிந்து அங்கிருந்து பூஞ்சைகள் உற்பத்தியாகியிருப்பது கண்டறியப்பட்டது. ஏசி போடுவதன் மூலம் ஜன்னல்கள் எதையும் திறக்காமல் மூடியே வைத்திருப்பதால் சூரிய வெளிச்சம் எதுவும் வீட்டுக்குள் வராமல் சிறு பூச்சிகள், கிருமிகள் வசித்து வந்தது கண்டறியப்பட்டது. இதுபோன்ற சுற்றுச்சூழல் மாசுபாடு அந்த வீடுகளில் வசிக்கும் குழந்தைகள், பெரியவர்களுக்கு ஆஸ்துமா, அலர்ஜியை தோற்றுவிக்கிறது என்று நெஞ்சகப்பிரிவு மருத்துவர் ரோகினி தெரிவித்துள்ளார். சுவர்களில் உள்ள பூஞ்சைகள் நுரையீரலை பாதிக்கும் தன்மை கொண்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.
கிராமங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டிற்கு வெளியே சுற்றுப்புறச்சூழல் சீர்கேடு காரணமாக ஆஸ்துமா, அலர்ஜி ஏற்படுகிறது எனில் நகர்புறங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டிற்கு உள்ளேயே ஏசி காரணமாக மாசு ஏற்பட்டு ஆஸ்துமா ஏற்படுகிறது என்று கூறியுள்ளனர் நிபுணர்கள். எனவே எப்பொழுது பார்த்தாலும் ஏசி அறையில் அமர்ந்திருப்பதை விட சிறிதுநேரம் ஜன்னலை திறந்து சூரிய வெளிச்சம் வீட்டிற்குள் வருமாறு செய்யவேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் மூலம் ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை ஏற்படுவதில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval