Tuesday, December 29, 2015

Facebook’இன் அடுத்த நாடகம்

-facebook
சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களிலும், இணைய பயன்பாட்டினர்களிடையேயும் “Net Neutrality”(இணைய சமத்துவம்) எனும் ஒரு புதிய சொல் புழங்கிக் கொண்டு இருந்தது. அப்பொழுது தான் இந்தியத் தொலை தொடர்பு ஒழுங்கு அமைப்பு வாரியம் (TRAI) Regulatory Framework for Over-the-top (OTT) services என்னும் புதிய ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது. அதில் நமக்கு இணைய சேவையை வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொரு வலைதளங்களும் தனித்தனியே விலையை நிர்ணயத்து வசூலிக்கலாம் என்று ஒரு கார்ப்பரேட் நல யோசனையை முன்வைக்க, மக்கள் தங்கள் எதிர்ப்பை முழுவேகத்தில் பதிவு செய்தார்கள்.
இந்த எதிர்ப்பை எதிர்பார்க்காத இந்த அதிகார வர்க்கம் அடுத்து களத்தில் இறக்கிய சூப்பர் ஹீரோ(super hero) தான் facebook நிறுவனத்தின் நிறுவனரான Mark Zuckerberk. எப்படி இலங்கையில் எல்லாம் சரியாகிவிட்டது, அங்கு மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று சொல்ல சல்மான் கான், அசின், கமல்ஹாசன் போன்றோர்கள் களம் இறக்கப்பட்டார்களோ, கூடங்குளம் பாதுகாப்பானது, இந்த அரசாங்கம் பேரிடரை சமாளிக்கும் வல்லமை பெற்றது என்று கூற அப்துல்காலம் போன்றோர் களம் இறக்கப்பட்டார்களோ, அது போலத்தான் Mark Zuckerberk களம் இறக்கப்பட்டிருக்கிறார்.
ஏப்ரல் மாத இறுதியில் TRAI’இன் புதிய ஆலோசனையை மக்கள் காறித் துப்ப, அப்பொழுது களத்தில் இறக்கப்பட்ட Mark Zuckerberk பயன்படுத்திய ஆயுதம் தான் interner.org. “இந்த உலகம் முழுவதும் நான் இலவச இணையதள வசதியைத் தரப் போகிறேன், இந்த உலக முழுவதையும் நான் இணையத்தால் இணைக்கப் போகின்றேன்” என்று கொக்கரித்தார் Mark Zuckerberk. இலவச இணைய வசதி நல்லது தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஏன் அதை எதிர்க்க வேண்டும் என்றும் கேக்கலாம். இங்குதான் Mark Zuckerberk வைக்கிறார் ஒரு twist. அதாவது உலகம் முழுவதும் இணையம் இலவசம், ஆனால் Mark Zuckerberk சொல்லும் இணையதளங்களை மட்டும் தான் நீங்கள் பயன்படுத்த முடியும். மற்றவை internet.org முலம் பயன்படுத்த முடியாது. இதுதான் internet.org’இன் சுருக்கம்.
TRAI சொல்லும் ஒவ்வொரு வலை தளங்களுக்கும் தனித் தனி விலை என்பதற்கும், internet.org சொல்லும் சில வலைத் தளங்கள் இலவசம்; மற்ற வலைத்தளங்கள் விலை என்பதற்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. “பூ” வை “பூ” வென்றும் சொல்லலாம், “புஷ்பம்” என்றும் சொல்லலாம் என்ற கதை தான். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் TRAI சொன்ன போது அதை எதிர்த்த சிலர் internet.org என்று சொன்னவுடன் அதை ஆதரிக்க ஆரம்பித்தனர். “இலவசம்” என்ற சொல் யாரைத்தான் விட்டுவைத்தது?
இந்த internet.org பிரச்சாரத்தின் அடுத்த கட்டம் தான், இந்திய துணைக் கண்டத்தின் பிரதமர் மோடி Facebook அலுவலகம் சென்றதும், மூவர்ணக் கொடி Profile Picture’யும். internet.org இணைய சமத்துவத்துக்கு எதிரானது என்ற கருத்தை, மக்களிடத்தில் பலபேர் பிரச்சாரம் செய்தனர். அதன் விளைவாக சில மக்களும் அதைத் எதிர்க்க தொடங்கினர். அதன் பிறகு internet.org வேறு ஒரு முகமூடியை அணிந்து மக்களிடத்தில் வந்தது. அந்த முகமூடி தான் “Digital India”. Facebook சமூக வலைத் தளங்களில் இயங்கிய பலர் தங்கள் முகப்பு படங்களை(Profile Picture) மூவர்ண சாயம் அடித்தது அப்பொழுதுதான். நமது நண்பர்கள் தங்கள் முகப்பு படங்களுக்கு சாயம் அடித்தவுடன் நாமும் அதை பின்பற்றத் தொடங்கினோம். அப்படி அடிக்கும் பொழுது அவர்கள் internet.org எனும் சேவையை ஏற்பதாக ஒத்துக் கொள்கின்றனர் என்று facebook தனது Source Code’இல் எழுதி இருந்தனர். இதை சிலர் கண்டு பிடித்துக் கேட்டதற்கு எழுத்துப் பிழை செய்து விட்டோம் என்று கூறியது facebook நிறுவனம். எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் நாம் மந்தை போல் செயல் பட்டதைக் கொண்டு அதிகார வர்க்கம் நம் கையை வைத்து நம் கண்ணைக் குத்தியது.
இந்த internet.org மற்றும் Digital India நாடகங்களின் பொழுதுதான் TRAI இரண்டாம் கட்ட கருத்துக் கேட்டலை mygov.in எனும் வலை தளத்தில் நடத்தியது. இப்பொழுது TRAI மூன்றாம் முறையாக மக்களிடத்தில் இணையத்தின் வாயிலாக கேட்டலை நடத்திக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் தான் உலக நாயகன் Mark Zuckerberg, “Act now to save Free Basics in India” என்று அடுத்த பெயரை இட்டு அடுத்த கட்ட நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் . இதற்கு நம் இணைய சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் காக்கும் பொருட்டு நம் எதிர்ப்பினை பதிவு செய்தாக வேண்டும். மறுபடியும் “Free”, “இலவசம்” என்ற சொற்களுக்கு நாம் ஏமாறாமல் இருப்போம். அப்புறம் ஒன்றை நீங்கள் மறந்து விட வேண்டாம். இந்த Facebook தான் உங்களைப் பற்றிய தகவல்களை அமெரிக்காவின் NSA’வுக்கு உங்கள் அனுமதி இல்லாமல் கொடுத்த நல்லவர்கள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval