Wednesday, December 23, 2015

டீசல் கார்களின் எதிர்காலம்?

car_traffic_2660315f
தலைநகர் டெல்லியில் கோடைக் காலத்தில் வெப்பம் வறுத்தெடுக் கும். குளிர்காலத்திலோ முதுகு தண்டுவடத்தை உறையவைக்கும் பனி பொழியும். இயற்கையின் தன்மையை ஏற்று அதற்கேற்ப வாழத் தொடங்கியுள்ளனர் அங்குள்ள மக்கள். ஆனால் இப்போது வாழ்வதற்கே தகுதியில்லாத நகரங்கள் பட்டியலில் டெல்லியும் சேர்ந்துள்ளதுதான் கொடுமையிலும் கொடுமை.
மக்கள் தொகை பெருக்கம் ஒருபுறம் என்றாலும் அதிகரித்துவரும் வாகனப் பெருக்கம், அதன் தொடர் விளைவாக வாகனங்கள் வெளியேற்றும் புகை, மக்களை தலைநகரை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
இப்போதுதான் இதுபற்றிய விழிப்புணர்வு அதிகரித்து உச்ச நீதிமன்றமும், பசுமை தீர்ப்பாயமும் அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
10 ஆண்டுகளுக்குப் பழமையான வாகனங்களை டெல்லி நகருக்குள் அனுமதிக்கக் கூடாது என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல புதிய டீசல் கார்களை டெல்லி பிராந்தியத்தில் பதிவு செய்யக் கூடாது என்றும் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு தயாரித்த வாகனங் களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கார் விற்பனையாளர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது மேலும் அதிரடி தீர்ப்பை அளித்து கார் உற்பத்தியாளர்களை திணறடித்துள்ளது. ஆம்! 2000 சிசி திறன் மற்றும் அதற்கு மேம்பட்ட டீசல் வாகனங்களை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை பதிவு செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி பிராந்தியம் என்றாலே நொய்டா, குர்காவ்ன், காஜியாபாத், பரீதாபாத் ஆகியனவும் தலைநகர் எல்லைக்குள் வந்துவிடும்.
டெல்லியின் பங்களிப்பு
கார் விற்பனையில் டெல்லி பெரும் பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த கார் விற்பனையில் 7 சதவீதம் டெல்லியின் பங்களிப்பாகும். இந்த ஆண்டு மொத்தம் விற்பனையான 26 லட்சம் கார்களில் டெல்லியின் பங்கு 7 சதவீதமாகும். இதேபோல விற்பனையான 38 ஆயிரம் சொகுசு கார்களில் டெல்லி பங்களிப்பு 18 சதவீதமாக உள்ளது.
பாதிப்பு யாருக்கு?
பொதுமக்களின் உடல் நலனையும், நகரின் சுற்றுச் சூழலையும் காக்க இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. ஆனால் கார் உபயோகிப் பாளர்களைவிட கார் உற்பத்தியாளர் களுக்கு இது மிகப் பெரும் பாதிப் பாக அமைந்துள்ளது என்பதில் சந்தேக மில்லை. 2000 சிசி-க்கு அதிகமான வாகனங்கள் என்றாலே அத்தகைய எஸ்யுவி தயாரிப்பில் முன்னணியில் உள்ளது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம்தான். இந்நிறுவனத்தின் பொலேரோ, ஸ்கார்பியோ, எக்ஸ்யுவி 500 ஆகிய வாகனங்கள் இத்தகைய தடைவிதிப்புக்கு உள்ளாகும்.
நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனையில் தலைநகர் டெல்லியின் பங்களிப்பு 2 சதவீதமாகும். தற்போ தைய தடையால் இந்நிறுவனம் அடுத்து வரும் காலாண்டுகளில் கடும் சரிவைச் சந்திக்கும்.
டொயோடா, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனத் தயாரிப்புகளும் இந்த தடை விதிப்பிலிருந்து தப்பிக்க முடியாது. டொயோடா இன்னோவா, பார்சூனர் ஆகியவற்றில் 2.5 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது. இதேபோல டாடா சஃபாரி, டாடா சுமோ, செவர்லே டவேரா மற்றும் ஹூண்டாய் சான்டா எப்இ ஆகிய கார்களையும் தலைநகரில் விற்பனை செய்ய முடியாது.
சொகுசு கார்களைத் தயாரிக்கும் மெர்சிடெஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய கார்களின் விற்பனையும் இந்த உத்தரவால் பாதிக்கப்படும்.
சோகமான கிறிஸ்துமஸ்
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டொயோடா, மெர்சிடெஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விற்பனை மிகவும் மந்தமாகவே இருக்கும் என்று இப்போதே தெரிந்து விட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்நிறுவனங்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது.
மெர்சிடெஸ் பென்ஸ் தயாரிப்புகள் முழுவதுமே தலைநகர் டெல்லியில் அடுத்த மூன்று மாதங்களுக்கு விற்பனை செய்ய முடியாது.
டீசல் கார்கள் விற்பனை மிக அதிகமாக இருந்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான். பெட்ரோல் கார்களுக்கு நிகராக டீசல் கார்கள் விற்பனையானதற்கு முக்கியக் காரணம் டீசல் விலை குறைவாக இருந்ததுதான்.
ஆனால் கடந்த ஓராண்டாக டீசல் விலையும் பெட்ரோலுக்கு நிகராக உள்ளது. இதனால் பெட்ரோல் கார்களைத் தேர்வு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.
இருப்பினும் எஸ்யுவி கார்கள் பெரும்பாலும் டீசலில்தான் தயாரிக்கப்பட்டன. இதேபோல சொகுசு கார்களும் டீசல் தயாரிப்பாக இருந்தன.
இது தீர்வா?
டீசல் கார்களுக்கு தடை விதித்துள்ளது பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (எஸ்ஐஏஎம்) தலைவர் வினோத் தாசரி தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப ரீதியில் கூற வேண்டுமானால், பெட்ரோல் கார்களை விட மிகக் குறைவான கரியமில வாயுவை டீசல் வாகனங்கள் வெளியேற்றுவதாக அவர் குறிப்பிட்டார். டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் மக்கள் பெட்ரோல் கார்களை வாங்கத் தொடங்குவர். இது பசுமைக் குடில் வாயு அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
முதலீடுகள், வேலைவாய்ப்பு பாதிக்கும்
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் என்றும் அந்நிய முதலீடுகள் வருவது குறையும் என்றும் மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டீசல் என்ஜின் கார் தயாரிப்பில் ஒரு நிலையற்ற தன்மையை இந்த உத்தரவு ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிறுவனம் மேற்கொண்டிருந்த விரிவாக்கப் பணிகளை தொடர்வதா வேண்டாமா என்ற தயக்கம் மேலோங்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடகைக் கார் நிறுவனங்கள் சிஎன்ஜியில் இயங்கும் கார்களை இயக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இது தவிர பிற மாநில வர்த்தக வாகனங்களுக்கும் டெல்லியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியைத் தொடர்ந்து இந்த உத்தரவை பிற பெருநகரங்களான மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களிலும் பிறப்பிக்கப்படலாம். அப்படி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. டீசல் வாகனங்களைத் தயாரிப்பதா அல்லது நிறுத்துவதா என்ற தர்மசங்கடமான சூழலில் வாகன உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
டெல்லியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை ஒரு முன்னோட்டம்தான். உச்ச நீதிமன்ற உத்தரவையோ அல்லது பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தர வையோ விமர்சிப்பது அல்லது அதற்கு மேல் முறையீடு செய்வதை விடுத்து அடுத்து என்ன செய் யலாம் என்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள் யோசிக்க வேண்டிய தருணமிது.
அனைத்துக்கும் மேலாக சூழலைக் காக்க வேண்டிய பொறுப்பு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு உள்ளது. சூழல் காப்பும் நிறுவனங்களின் சமூகக் கடமைகளில் ஒன்றுதான் என்று நிறுவனங்கள் உணர வேண்டிய நேரமிது.
டெல்லியைத் தொடர்ந்து பிற நகரங்களிலும் இதுபோன்ற தடை விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அரசுடன் பேச்சு நடத்தி இதற்கு நிரந்தர தீர்வு காண்பதுதான் ஒரே வழியாக இருக்க முடியும்.
தப்பித்த கார்கள்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் சிறிய ரகக் கார்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் பெரும்பாலான சொகுசு கார்கள் நூலிழையில் இந்த உத்தரவில் தப்பியுள்ளன. பிஎம்டபிள்யூ எக்ஸ் 3, எக்ஸ் 1, 3 சீரிஸ் ரக கார்கள் அனைத்தும் 1998 சிசி திறன் கொண்டவை இவை அனைத்தும் இந்த உத்தரவால் பாதிக்கப்படவில்லை.
இதேபோல ஆடி ஏ8 ரகக் காரின் திறன் 1968 சிசி ஆகும். இதுவும் தடையிலிருந்து தப்பியுள்ளது. செக்கோஸ்லோவேகியாவின் ஸ்கோடா ஆக்டோவியா, யெட்டி, சூபர்ப் ஆகிய மாடல் கார்களும் நூலிழையில் தப்பியுள்ளன. இவற்றின் செயல்திறன் 2000 சிசிக்கு குறைவாக இருந்ததே இதற்குக் காரணம். ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா, செவர்லே குரூஸ் ஆகிய கார்களும் இந்த உத்தரவிலிருந்து தப்பியுள்ள சில பிரபல கார்களாகும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval