Wednesday, December 2, 2015

வண்டலூர் பூங்கா சுற்றுச்சுவர் உடைந்தது வன விலங்குகள் வெளியேறும் அபாயம்

சென்னை வண்டலுாரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நேற்று மழை வெள்ளத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பல இடங்களில் சுற்றுச்சுவர் உடைந்தது. இதனால் பதறிய அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்தனர். பூங்காவில் உள்ள வன விலங்குகள் தப்பிச் செல்லுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வண்டலுார் பூங்காவில் 1,900 ஏக்கர் பரப்பில் 85 அமைப்பிடங்களில் 2,080 விலங்குகள் உள்ளன. புலி, சிங்கம், சிறுத்தை, கரடி, 
கழுதைப்புலி, யானை உள்ளிட்ட 34 வகையான பாலுாட்டிகள்; ராஜநாகம், நாகம், முதலை, மலைப்பாம்பு உள்ளிட்ட ஊர்வன வகை விலங்குகள்; 20க்கும் மேற்பட்ட பறவை வகைகள் உள்ளன.கடந்த மாத இறுதியில் கேளம்பாக்கம் சாலையில் இந்த பூங்காவின் சுற்றுச்சுவர் திடீரென உடைந்து விழுந்தது. பூங்கா நிர்வாகத்தினர், அவசர கதியில் சுற்றுச்சுவர் உடைப்பை சரி செய்தனர்.நேற்று பெய்த அடை மழையால் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரின் வேகத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல், வண்டலுார் - -கேளம்பாக்கம் சாலையில் எட்டு இடங்களில் பலத்த சத்தத்துடன் பூங்காவின் சுற்றுச்சுவர் உடைந்து விழுந்தது. அதே வேகத்தில் பூங்காவுக்குள் வெள்ள நீர் காட்டாற்று வெள்ளம் போல் வேகமாக நுழைந்தது; சில நிமிடங்களுக்குள் பூங்கா மிதந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், வனத்துறை அமைச்சர் ஆனந்தன், வனத்துறை முதன்மை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மெல்கானிக்கு தகவல் கொடுத்தனர்.


தமிழக உயிரியல் பூங்கா ஆணையத்தின் தலைவரான முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை உடனடியாக பார்வையிட அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அங்கு விரைந்த உயர் அதிகாரிகள், நள்ளிரவு வரை அங்கு தங்கி ரோந்து பணியில் ஈடுபட்டனர்; சுற்றுச்சுவர் உடைப்பை சரி செய்யும் பணியை துரிதப்படுத்தினர்.

வண்டலுார் பூங்கா இயக்குனர் ரெட்டி மற்றும் வனத்துறையினர் கூறியதாவது:பூங்காவின் சுற்றுச்சுவர் 8 இடங்களில் 200 மீட்டர் துாரத்துக்கு உடைந்துள்ளது. இதனால் வெள்ளநீர் புகுந்தாலும் விலங்குகளின் அமைவிடத்துக்குள் நீர் நுழையவில்லை. விலங்குகள் பாதுகாப்பாக உள்ளன. சுற்றுச்சுவர் உடைப்பை சரி செய்யும் பணி கன மழையால் தடைபட்டுள்ளது. எனினும் விலங்குகள் வெளியேற வாய்ப்பு இல்லை என்றார்.


பாதியில் திரும்பிய அமைச்சர்:



வண்டலுார் பூங்காவைப் பார்வையிட அமைச்சர் ஆனந்தன், ஓ.எம்.ஆர்., சாலை வழியாக அங்கு விரைந்தார். பூங்காவை நெருங்கிய நிலையில் வெள்ள நீரை கடந்து செல்ல முடியாததால் வேறு வழியின்றி திரும்பிச் சென்றார். ஆனால் வனத்துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மெல்கானி மற்றும் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கிருஷ்ணகுமார் போன்ற உயர் அதிகாரிகள் பூங்காவுக்கு விரைந்தனர்.தாம்பரத்தை தாண்டி செல்ல முடியாததால் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக பூங்காவை சென்றடைந்தனர். எப்போதும் இல்லாத வகையில் முதல்முறையாக, அங்கு இரவு தங்கி விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதுவே நிலைமையின் 
தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது.

விலங்குகள் தப்பிச் செல்லுமா'



வண்டலுார் பூங்காவில் உள்ள விலங்குகள் தப்பிச் செல்லாது' என, அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தாலும் அங்கு சுதந்திரமாக சுற்றித் திரியும், நரி, மான் போன்ற விலங்குகள் தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளது என்பதை வனத்துறையினர் ஒப்புக்கொண்டனர். 2002ல் வண்டலுார் பூங்கா பகுதியில் போக்கு காட்டிய சிறுத்தை பிடிபட்டது. அப்போது இருந்தே பரந்து விரிந்த பூங்கா வளாகத்துக்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியினரிடம் பேச்சு நிலவி வருகிறது.மான்கள் வெளியேறி செல்லும் நிலையில், சிறுத்தை இருக்கும் பட்சத்தில் அதுவும் உடைந்த சுவர் வழியாக அதைத் தேடி செல்லும் வாய்ப்பு உள்ளது. எனவே பல பிரச்னைகளை கருதி வண்டலுார் பூங்காவுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
courtesy;dinamalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval