Tuesday, December 29, 2015

எரிவாயு மானியம் ரத்து நாடு முழுவதும் கண்டனம்

LP_gas
ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு, ஜனவரி மாதம் முதல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய  பாஜக அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.எரிவாயு மானியம் ரத்து அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.இந்தியாவில் 16 கோடியே 35 லட்சம் பேர் மானிய விலையிலான சமையல் எரிவாயுவை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் 419 ரூபாய் 26 காசுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் இந்த சிலிண்டர் 608 ரூபாய் என்ற நிலையில், சுமார் 189 ரூபாயை அரசு மானியமாக வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசு, எரிவாயு மானியத்தை வெட்டிச் சுருக்கும் வேலையில் வேகமாக இறங்கியது.
முதற்கட்டமாக போலி எரிவாயு இணைப்பை நீக்குகிறோம் என்று சொல்லி சுமார் 1 கோடி இணைப்புக்களை நீக்கினார்கள். பின்னர் மானியத்தை பணமாகத் தரும் திட்டத்தை அமல்படுத்தினார்கள். விலை உயர்வை சாமானியர்களின் தலையில் சுமத்தும் தந்திரத்துடன் இத்திட்டத்தை அவர்கள் அமல்படுத்தினர். அடுத்ததாக, தாமாகவே எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்குமாறு பிரதமர் மோடியை செல்போனில் பேச வைத்தனர். மேலும் சிலிண்டர் புக்கிங் செய்யும் போது, ‘0’வை அழுத்தச் சொல்லும் வேண்டுகோளை இணைத்து, யாராவது தவறாக ‘0’வை அழுத்தினால், அவர்களுக்கான மானியத்தை ரத்து செய்யும் நூதன வேலையிலும் இறங்கினர்.
இதில், சுமார் 58 லட்சம் பேர் எரிவாயு மானியத்தை இழந்தார்கள். அவர்களிடமிருந்து 35 ஆயிரம் கோடி ரூபாயை பாஜக அரசு பறித்தது.இதன் அடுத்தகட்டமாக திங்களன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்டொன்றுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களின் எரிவாயு மானியம், ஜனவரி மாதம் முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து, பொதுமக்களுக்கு “புத்தாண்டு அதிர்ச்சி” அளிக்கப்பட்டு உள்ளது.இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால் மத்திய அரசுக்கு மேலும் 34 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக குறைத்ததில், ஆண்டொன்றுக்கு மத்திய அரசுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மிச்சமானது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு சேரவேண்டிய 2 லட்சம் கோடியை பாஜக அரசு கிடைக்க விடாமல் செய்துள்ளது.2014-15 ஆம் நிதியாண்டில் சமையல் எரிவாயு மீதான மானியம் ரூ. 40 ஆயிரத்து 551 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் கச்சா எண்ணெய் விலை ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்ததால், செப்டம்பர் வரையிலான அரையாண்டு முடிவில் 8 ஆயிரத்து 814 கோடியை மட்டுமே பாஜக அரசு மானியமாக வழங்கி உள்ளது. ஆனால், இந்த குறைந்த அளவு மானியம் கூட மோடி அரசின் கண்களை உறுத்தி, எரிவாயு மானியத்திற்கான வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.மோடி அரசின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
வைகோ கண்டனம்
உயர்வருவாய் பிரிவினருக்கான சமையல் எரிவாயு மானியம் ரத்து அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மோடி அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சி சென்ற வழியில்தான் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்றும், உலக வர்த்தக நிறுவனம், உலக வங்கி இடுகிற உத்தரவுகளை நிறைவேற்றும் வகையில் பொருளாதார இறையாண்மையை அந்நிய சக்திகளுக்கு அடகு வைத்து வரும் நிலைமை தொடர்கிறது என்றும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 36.05 டாலர் என்ற அளவில் வீழ்ச்சி அடைந்து விட்டது. அதற்கு ஏற்றவாறு எரிபொருள் விலையைக் குறைத்திருக்க வேண்டும்.
பெட்ரோல் விலையை ரூ. 35.71 ஆகவும், டீசல் விலையை 22.74 ஆகவும் குறைக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க. அரசு பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை தொடர்ந்து உயர்த்தி கச்சா எண்ணெய் வீழ்ச்சியின் பயன் மக்களுக்குக் கிடைக்காமல் செய்துள்ளது. அதேபோல எரிவாயு உருளை விலையை ரூ. 261.60-லிருந்து சுமார் 100 விழுக்காடு உயர்த்தி ரூ. 419.26 என்ற விலைக்கு கொண்டு வந்துள்ளது.இந்நிலையில் 10 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பின் மூலம், படிப்படியாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் முழு மானியத்தையும் ரத்து செய்யப்படும் நிலைமை உருவாக்கப்படும். சமையல் எரிவாயு மட்டுமின்றி, அரசின் சார்பில் மக்களுக்கு எவ்வித மானியமும் அளிக்கக் கூடாது என்பதுதான் உலக வங்கி மற்றும் உலக வர்த்தக நிறுவனத்தின் கட்டளையாகும் என்று தெரிவித்துள்ள வைகோ, மத்திய அரசு சமையல் எரிவாயு மானியம் ரத்து அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜி.கே.வாசன் எதிர்ப்பு
வருமான வரம்பு நிர்ணயத்தை ரத்து செய்து, ஏற்கனவே நடைமுறையில் இருந்த மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டர்களை அனைவரும் பெற்று பயன்பெற வழி வகுக்க வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். மேலும், கிராமப்புற கூலித் தொழிலாளர்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக வழங்கவும், நகர்ப்புற மக்களுக்கு சிலிண்டருக்கான மானியத்தை உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாசன் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval