கோவை: கோவை பெ.நா.பாளையம் ஜோதிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(33).பால் வியாபாரி. இவரது மனைவி சுகன்யா(25). இவர்களது மூன்றரை வயது மகன் அகிலேஷ். கடந்த 23 நாட்களுக்கு முன்பு சுகன்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஒண்டிப்புதூர் அருகே தண்ணீர் தோட்டம் பகுதியில் உள்ள தனது தாய் விஜயலட்சுமி வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் திடீரென பெண் குழந்தை காணாமல் போனது. இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வந்து விசாரித்தார். அப்போது சாம்பிராணி புகை போடும் நபர் ஒருவர் வீட்டுக்கு வந்ததாகவும், அவர் குழந்தையை கடத்தி சென்றதாக பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் தெரிவித்தார். இரவோடு இரவாக போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர் குழந்தையை கடத்தவில்லை என தெரியவந்ததால் விடுவித்தனர். நேற்று காலை போலீசார் வீட்டில் சோதனை போட்டனர். அப்போது சமையல் அறையில் வைத்திருந்த தண்ணீர் பக்கெட்டில் குழந்தை இறந்து கிடந்தது. சந்தேகத்தில் சுகன்யா, பாட்டி விஜயலட்சுமி ஆகியோரிடம் ேபாலீசார் விசாரித்தனர். அப்போது சுகன்யா கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தானே குழந்தையை கொன்றதாக தெரிவித்தார்.
அவரை போலீசார் கைது செய்ய முடிவு செய்தாலும், அவர் ஏதோ மறைப்பதாக போலீசாருக்கு தோன்றியது. எனவே, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். சிறுவன் அகிலேஷ் ஒருவித பயத்துடன், யாரிடமும் பேசாமல் இருப்பதை கண்டனர். நேற்று குழந்தையை காணாமல் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டபோது, வெளியே சென்ற செந்தில்குமார் வீட்டுக்கு வந்தார். அப்பாவை பார்த்ததும் அகிலேஷ் ஓடிச் சென்று கெட்டியாக இறுக்கி பிடித்து கொண்டான். செந்தில்குமார் மூலம் சிறுவனிடம் போலீசார் பேச்சு கொடுத்தனர். அப்போது சிறுவனிடம் நாம் இருவரும் ஒளிந்து விளையாடுவோம் என செந்தில்குமார் கேட்டார். ஏற்கனவே நான் தங்கையை ஒளித்து வைத்து விட்டதால் அந்த விளையாட்டு வேண்டாம் என கூறினார். உடனே குழந்தையை எங்கு வைத்துள்ளாய் என கேட்ட போது சமையலறையில் தண்ணீர் உள்ள பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு மூடி வைத்து விட்டதாக கூறினான். உடனே போலீசார் குழந்தை இறந்து கிடந்த பிளாஸ்டிக் பக்கெட்டை காட்டி இதில் தானே மூடி வைத்தாய் என கேட்டனர். உடனே சிறுவன் ஆம் என தலையாட்டினான். அப்போதுதான் போலீசாருக்கு விபரீதம் புரிந்தது. குழந்தையை சிறுவன் தூக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்த போலீசார் 5 கிலோ எடை கொண்ட பேப்பர் கட்டை அகிலேஷிடம் கொடுத்தனர். இதை சுலபமாக தூக்கினான்.
பாப்பா பிறந்த நாளில் இருந்து அப்பா, அம்மா அவனை கொஞ்சுவதில்லை என்ற ஏக்கம் அவனிடம் இருந்தது பேச்சில் வெளிப்பட்டது. 2வதாக பெண் குழந்தை பிறப்பதற்கு முன்பு அகிலேஷை பெற்றோர் இருவரும் தூக்கி வைத்து கொஞ்சி வந்தனர். பெண் குழந்தை பிறந்ததும் கொஞ்சுவதை குறைத்து கொண்டனர். இதனால் சிறுவன் அவ்வப்போது விளையாடினாலும், சோகத்துடன் இருந்துள்ளான். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெண் குழந்தை தொட்டில் அல்லது கட்டில் தூங்கும் போது கிள்ளி வைப்பது, அடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. தனது மூன்றரை வயது மகன் அகிலேஷ் மீது கொலைக் குற்றம் வரக்கூடாது, அவனை போலீசார் பிடித்து சென்று விடுவார்களோ என்ற பயத்திலும், பாசம் காரணமாகவும் சுகன்யா இதை போலீசாரிடம் மறைத்து, கொலைப்பழியை தானே ஏற்றுக்கொண்டது தெரியவந்தது. அறியாத வயதில் விளையாட்டாக இந்த விபரீதம் நடந்ததால் சிறுவனை குற்ற வழக்கில் கைது செய்து நடவடிக்கை எடுக்க முடியாது என போலீசார் தெரிவித்தனர். குழந்தைகளை பாகுபாடின்றி சமமாக நடத்துவது குறித்து பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர். சிறுவனின் விளையாட்டு விபரீதமாக முடிந்த சம்பவம், குடும்பத்தினரிடமும், அப்பகுதி மக்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
courtesy;Dinakaran
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval