Sunday, December 27, 2015

லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’

லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’ என்று சொல்லி வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை 23 வருடத்தில் 23-வது தடவையாக டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டார்கள். இது வழக்கமான டிரான்ஸ்ஃபர் என்று சொன்னாலும் அதற்குப் பின்னால் பல அரசியல் காரணங்கள் இருக்கிறது. சகாயம் நிர்வாக இயக்குநராக இருந்த கோ-ஆப்டெக்ஸிலும் நேர்மையை விட்டுக்கொடுக்காத காரணத்துக்காகவே அவர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்''
''மதுரையில் முறைகேடாக நடந்து வந்த கிரானைட் குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்தார் அங்கே ஆட்சியராக இருந்த சகாயம். அதன் பிறகு இந்த கிரானைட் முறைகேடு பற்றி அ.தி.மு.க ஆட்சியே பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினாலும் அன்று சகாயம் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படவும் அந்த கிரானைட் விவகாரம்தான் காரணம் என்று சொல்லப்பட்டது. 'இந்தப் பதவிக்கு வந்தபிறகு 11.50 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிவந்த கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தை ஒரே ஆண்டில் 13.50 கோடி லாபத்துக்கு மாற்றிக் காட்டினார்’ என்று சொல்கிறார்கள். முன்பு இந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தவர் சுந்தரராஜ். அந்த சமயத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடந்தது. அமைச்சர் தரப்பில் இருந்து ஒரு லிஸ்ட் கொடுக்கப்பட்டு, 'இவங்களுக்கு எல்லாம் போஸ்டிங் போட்டுடுங்க...’ என்று சகாயத்துக்கு உத்தரவு வந்ததாம். அந்த லிஸ்டை அப்படியே வாங்கி வைத்துக்கொண்டவர், முறைப்படி தேர்வை நடத்தி 24 மணி நேரத்தில் தகுதியான 59 பேருக்கு பணி நியமன ஆணையை அனுப்பினாராம். அந்த லிஸ்டில் அமைச்சர் கொடுத்த ஒருவரும் இல்லை. அமைச்சர் உள்ளுக்குள் புலம்பினாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ள முடியவில்லை. ஒருகட்டத்தில், 'கோ-ஆப்டெக்ஸ் விஷயம் எதையும் என்கிட்ட கொண்டுவராதீங்க. நான் எது சொன்னாலும் அங்கே நடக்காது!’ என்று சுந்தரராஜ் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்.''
''அவருக்குப் பிறகு அந்தப் பொறுப்பு கோகுல இந்திராவுக்கு கொடுக்கப்பட்டது. அதன் பிறகுதான் பிரச்னை ஆரம்பமானதாகச் சொல்கிறார்கள். கோகுல இந்திரா அமைச்சரானதும், 'கோ-ஆப்டெக்ஸ்ல எனக்கு தனியாக ஒரு ரூம் வேண்டும்!’ என்று சகாயத்திடம் கேட்டிருக்கிறார். அதற்கு சகாயம், 'இங்கே அறை எதுவும் இல்லை மேடம்!’ என்று நேருக்கு நேராக சட்டென்று சொல்லிவிட்டாராம்!''
''அதற்கு கோகுல இந்திரா என்ன சொன்னாராம்?''
''சொல்றேன்... 'நான் இந்த துறையோட அமைச்சர். எனக்கு எப்படி நீங்க ரூம் இல்லைன்னு சொல்லலாம். நான் எங்கே கேட்டு வாங்கணுமோ வாங்கிக்கிறேன்!’ என்று கோபத்துடன் சொல்லியிருக்கிறார். அத்துடன் நிற்காமல் கைத்தறித் துறை செயலாளருக்கு, 'எனக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களை அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் குறைகளைக் கேட்க வேண்டியிருக்கிறது. அதற்காக எனக்கு அங்கே ஒரு ரூம் வேண்டும். எனக்கு ரூம் ஒதுக்கி அறிக்கை அனுப்பவும்!’ என்று கடிதம் ஒன்றை அனுப்பினாராம் கோகுல இந்திரா. கைத்தறித் துறை செயலாளர் அந்தக் கடிதத்தை சகாயத்துக்கு பரிந்துரை செய்து அனுப்பியிருக்கிறார். சகாயம் உடனே அதற்கு பதில் எழுதியிருக்கிறார். 'கோ-ஆப்டெக்ஸ் சாதாரண சிறிய அலுவலகத்தில் இயங்கி வருகிறது. அமைச்சருக்கு இங்கே அறை ஒதுக்கினால் அவரை சந்திக்க கட்சி ஆட்கள் அடிக்கடி வருவார்கள். அமைச்சர் இருக்கிறார் என்பதால் இங்குள்ள அலுவலகர்களும் அமைச்சரை கவனிப்பதிலேயே குறியாக இருப்பார்கள். அது அலுவலக சூழ்நிலையைக் கெடுக்கும். இங்குள்ள ஊழியர்களை சந்தித்துப் பேச அமைச்சர் நினைத்தால், என்னுடைய அறையைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளட்டும். எனவே, அமைச்சருக்கு இங்கே அறை ஒதுக்க முடியாது’ என்று கைத்தறித் துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதன் நகலை அமைச்சருக்கும் அனுப்பியிருக்கிறார் சகாயம்!''
'அடுத்து, கோ-ஆப்டெக்ஸில் உள்ள ரீஜினல் மேனேஜர் 11 பேருக்கும் உடனடியாக கார் வழங்க வேண்டும் என்று கோகுல இந்திரா சொல்லியிருக்கிறார். அதற்கு சகாயம், 'ரீஜினல் மேனேஜர்கள் யாருக்கும் கார் அவசியம் இல்லை. அவர்களுக்கு தீபாவளி சமயத்தில் மட்டுமே கார் தேவைப்படும். அந்த நேரத்தில் வாடகைக்கு கார் எடுத்துக் கொள்ளலாம். அது நமது செலவினங்களை குறைக்கும். கோ-ஆப்டெக்ஸ் தற்போது இருக்கும் சூழலில் ரீஜினல் மேனேஜர்களுக்கு கார் என்பது அவசியல் இல்லாதது’ என்று எழுத்துபூர்வமாக பதில் கொடுத்திருக்கிறார். இதிலும் ஏகத்துக்கும் டென்ஷன் ஆனாராம் அமைச்சர். 'என்னைக் கேட்காம இனி யாருக்கும் கோ-ஆப்டெக்ஸ்ல டிரான்ஸ்ஃபர் போடக்கூடாது. இங்கிருந்து எந்த விளம்பரம் கொடுத்தாலும் என்னைக் கேட்காமல் கொடுக்கக் கூடாது. நான் யாருகிட்ட சொல்றேனோ அங்கேதான் விளம்பரம் கொடுக்கணும்’ என்று அமைச்சர் தரப்பில் வாய்மொழி உத்தரவுபோட்டதாகவும், 'டிரான்ஸ்ஃபர் என்பது நிர்வாக காரணங்களுக்காக, நலனுக்காக செய்யப்படுவது. இதில் அமைச்சர் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. விளம்பரம் கொடுப்பதற்கான முழு அதிகாரமும் நிர்வாக இயக்குநருக்கு இருக்கிறது. இதை எதற்காக அமைச்சருக்கு சொல்ல வேண்டும்? எல்லாம் முறைப்படித்தான் நடக்கும்!’ என்று கட் அண்ட் ரைட் ஆக சகாயம் சொன்னதாகவும் சொல்கிறார்கள்.''
''இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் கடைகளை நவீனப்படுத்தும் வேலைகள் அடிக்கடி நடக்கும். அதற்கான கான்ட்ராக்ட் விடுவதிலும் சிலர் தலையிட்டுள்ளனர். 'நான் சொல்பவர்களுக்குத்தான் கான்ட்ராக்ட் கொடுக்க வேண்டும்!’ என்று கறார் காட்டி உள்ளனர். சகாயம் அதற்கெல்லாம் அசரவில்லை. 'உங்களுக்கு வேண்டப்பட்டவங்களையும் டெண்டர்ல கலந்துக்கச் சொல்லுங்க. அவங்க கேட்பது குறைவான தொகையாக இருந்தால் நிச்சயம் கொடுக்குறோம். யாருக்காகவும் விதிகளை மாற்றிக்கொள்ள முடியாது’ என்று சகாயம் சொல்லியிருக்கிறார். ஆதரவற்றோர் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு தீபாவளிக்கு இலவசமாகக் கொடுக்க அரசு சார்பில் 30 லட்சம் சேலைகள் தயாராகி வருகின்றன. இந்த சேலைகள் கோ-ஆப்டெக்ஸ் மூலமாகத்தான் வாங்கப்படும். 'ஒவ்வொரு சேலைக்கும் அஞ்சு ரூபாய் கமிஷன் வந்துடணும்!’ என்று சிலர் பேரம் பேசியிருக்கிறார்கள். அதற்கும் சகாயம் முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்.''
'யாருக்கு நல்லது என்பதில்தான் இப்போது பிரச்னை. கடந்த 1-ம் தேதி தீபாவளி விற்பனை தொடர்பாக ஆய்வுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் சகாயம். திடீரென அமைச்சர் தரப்பில் இருந்து பேசியவர்கள், 'ஆய்வுக்கூட்டத்துக்கு அமைச்சரும் வருவதாக சொல்லியிருக்காங்க. வெய்ட் பண்ணுங்க!’ என்று சொல்லியிருக்கிறார்கள். அனைவரும் காத்திருந்தனர். அந்த நேரத்தில்தான் சகாயத்தின் மனைவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். அதிகாரிகள் மட்டும் காத்திருந்தனர். நான்கு மணி நேரம் தாமதமாக அந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிறார் அமைச்சர். 'கோ-ஆப்டெக்ஸ் என்ன உங்களோட தனி நிறுவனமா? எந்த டிசைனும் சரியில்லை. யாரைக்கேட்டு இந்த டிசைன் எல்லாம் ஓகே செஞ்சீங்க? அமைச்சர் நான் ரூம் கேட்டா கொடுக்க மாட்டீங்களா? இங்கே எப்படி ரூம் வாங்குறதுன்னு எனக்குத் தெரியும். இங்கே எதுக்கு 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’னு எழுதி வெச்சிருக்கீங்க? இது என்ன அரசாங்கத்தோட தாரக மந்திரமா? யாரோட கொள்கை இது? கோ ஆப்டெக்ஸ் பேஸ்புக் உங்க விளம்பரத்துக்குப் பயன்படுத்துறீங்களா... நீங்க யாரு பண்றதும் சரியில்லை’ என்று சகாயத்தை மறைமுகமாகத் திட்டித் தீர்த்துவிட்டதாக அதிகாரிகள் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. சகாயத்துக்கு உடனடியாக அந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் பிறகுதான் டிரான்ஸ்ஃபர் வேலைகள் விறுவிறுவெனத் தொடங்கியிருக்கிறது. சகாயத்தை மட்டும் மாற்றினால் சிக்கல் வரும் என்பதால்தான் அவரோடு சேர்த்து மற்றும் சிலருக்கும் மாறுதல் உத்தரவு வந்திருக்கிறது.''
''அவருடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில தினங்களாகவே விடுப்பில் இருந்துள்ளார். அவருக்குத் தகவல் சொன்னதும், 'இதை நான் எதிர்பார்த்ததுதான்! அவங்களால என்னை மட்டும்தானே டிரான்ஸ்ஃபர் பண்ண முடியும். என்னோட நேர்மையை யாராலும் டிரான்ஸ்ஃபர் பண்ண முடியாது. எங்கே இருந்தாலும் நான் இப்படித்தான் இருப்பேன். பார்த்துக்கலாம்!’ என்று சொன்னாராம்!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval